நடிப்பு - ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலா
தயாரிப்பு - எம்ஆர் பிக்சர்ஸ்
இயக்கம் - ஹரி சந்தோஷ்
இசை - குதுப் இ கிரிபா
வெளியான தேதி - 6 மார்ச் 2020
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 2/5
2016ம் ஆண்டு வெளிவந்த நில் பட்டே சன்னட்டா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக அதே ஆண்டிலேயே அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி நடிக்க அம்மா கணக்கு என்ற படம் வெளிவந்தது.
வீட்டு வேலை செய்யும் அமலா பால் தனியொருவராக தனது மகள் யுவஸ்ரீயைப் படிக்க வைக்கிறார். தன் மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதே அம்மாவின் கனவு. ஆனால், தன்னால் படிக்க முடியவில்லை என பொறுப்பில்லாமல் இருக்கிறார் யுவஸ்ரீ. மகளை நன்றாகப் படிக்க வைக்க, அம்மா அமலா பாலும் அதே பள்ளியில் அதே வகுப்பில் 10வது சேர்ந்து படிக்கிறார். அம்மா பள்ளிக்கு வருவது மகளுக்குப் பிடிக்கவில்லை. மகள் நன்றாகப் படித்தால் தான் பள்ளி வருவதை நிறுத்தி விடுகிறேன் என்று சவால் விடுகிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் அம்மா கணக்கு படத்தின் கதை.
அதே படத்தின் கதையை அப்படியே அப்பா, மகன் என மாற்றி ஒரு கதையை எழுதி கன்னடத்தில் 2017ம் ஆண்டில் காலேஜ் குமார் என்ற பெயரில் வெளியிட்டு பெரிய வெற்றியைப் பெற்றார்கள். அந்தப் படத்தைத் தற்போது தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதைச் சொல்லும் படம்தான் இந்த காலேஜ் குமார். மகன்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என கனவு காணும் பெற்றோர்களுக்கும், அவர்களின் கனவைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாத மகன்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் படம்.
படத்தின் முதல் காட்சியிலேயே தன் ஆடிட்டர் நண்பனால் அலுவலகத்தில் பியூன் என்று கேவலப்படுத்தப்படுகிறார் பிரபு. அப்போது பிறக்கும் தன் மகனை பெரிய ஆடிட்டர் ஆக்குவேன் என சபதம் எடுக்கிறார். ஆனால், வளர்ந்து கல்லூரிக்குச் செல்லும் அவரது மகன் அப்பாவின் கனவு, சவால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கல்லூரியில் பொறுப்பற்று நடந்து கொண்டதால் கல்லூரியை விட்டே நீக்கப்படுகிறார். அப்போது அப்பாவுக்கும், மகனுக்கும் நடக்கும் சண்டையில் அப்பா பிரபு, தானே கல்லூரிக்குச் சென்று படித்து ஆடிட்டிர் ஆகிறேன் என சவால் விடுகிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் கதை.
30, 35 வருடங்களுக்கு முன்பாக சின்னப்பூவே மெல்லப் பேசு படத்தில் நம்ம காலேஜில் டெஸ்ட்டு வச்சா போரடிக்குது என்று ஆடிப்பாடிய பிரபு, இப்போது பொறுப்பான அப்பாவாக அப்படியெல்லாம் நடக்கக் கூடாது என மகனுக்கு அட்வைஸ் செய்கிறார். எந்த மகனுக்குத்தான் அப்பாவின் அட்வைஸ் பிடிக்கும். அப்படி பொறுப்பில்லாத மகனாக தன் முதல் படத்திலேயே நன்றாகவே நடித்திருக்கிறார் ராகுல் விஜய். இடைவேளைக்குப் பின் அவருடைய கதாபாத்திரத்திலும் பெரும் மாற்றம். வாழ்க்கையில் முன்னேற படிப்பு மட்டுமே காரணமல்ல என்பதையும் புரிய வைக்கிறார்கள்.
அப்பா கதாபாத்திரத்தில் அவ்வளவு பொருத்தமாக பிரபு. கல்லூரி மாணவனாக அவர் செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் ஜாலியாகவே நகர்கின்றன அந்தக் காட்சிகள். படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கிறது பிரபுவின் கதாபாத்திரம்.
படத்தின் மிகப் பெரும் மைனஸ் பாயின்ட் என்றால் மதுபாலா தான். அவருடைய மும்பைத் தமிழ் பேச்சும், அவருடைய எக்ஸ்பிரஷன், பாடி லேங்குவேஜ் எதுவுமே ஒரு சராசரி படிக்காத ஒரு அம்மாவின் கதாபாத்திரத்திற்குத் துளி கூட பொருந்தவில்லை. வேறு யாரையாவது நடிக்க வைத்திருந்தால் கூட நன்றாகவே இருந்திருக்கும்.
படத்தின் அறிமுகக் காட்சியில் நாயகி பிரியா வட்லமானி பார்ப்பதற்கு தமன்னா போல இருக்கிறார். அதன் பின் அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு அவருக்கும் தமன்னாவுக்கும் தம்மாத்தூண்டு கூட பொருத்தமில்லை என்பதை உணர வைக்கிறார்.
படத்தை பெங்களூருவிலேயே எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கூட கன்னட முகங்களாகவே தெரிகிறார்கள். அதெல்லாம் ஒரு கன்னட டப்பிங் படத்தைப் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது.
இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு எல்லாமே சுமார் ரகம்தான். மேக்கிங்கிலேயே இது சிறிய பட்ஜெட் படம் என்பதை காட்சிக்குக் காட்சி உணர்த்துகிறார்கள்.
சொல்ல வந்த கருத்து நல்ல கருத்து, அதை சொன்ன விதம்தான் சரியில்லை.
காலேஜ் குமார் - பார்டர் மதிப்பெண்ணுடன்..