பேச்சி
விமர்சனம்
தயாரிப்பு - வெயிலோன் என்டர்டெயின்மென்ட், வீரஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ராமச்சந்திரன்
இசை - ராஜேஷ் முருகேசன்
நடிப்பு - பாலசரவணன், தேவ், காயத்ரி
வெளியான தேதி - 2 ஆகஸ்ட் 2024
நேரம் - 1 மணி நேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 3/5
வீடு, காடு… இந்த இரண்டு இடங்களைச் சுற்றித்தான் பேய்ப் படங்களை உருவாக்க முடியும். அப்படியான பேய்ப் படங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதோ இப்படித்தான் பேய் வரும், அப்படித்தான் பேய் வரும் என குழந்தைகள் கூட பேயைப் பார்த்து சிரித்து ரசிக்கும்படி படங்கள் வந்துவிட்டது. இந்தப் படமும் ஒரு பேய்ப் படம்தான். ஆனால், நாம் எதிர்பார்க்காதபடி 'பேச்சி' பேய் வந்து பயமுறுத்தி ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் பார்த்திபன், எடிட்டர் இக்னேஷியஸ் அஸ்வின், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் ராமச்சந்திரன் அவர் நினைத்ததை திரையில் கொண்டு வந்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக படத்தின் நட்சத்திரங்களும் இருந்துள்ளார்கள்.
காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ், ஜனா, ஆகிய ஐவர் அடங்கிய நண்பர்கள் குழு டிரெக்கிங் செய்வதற்காக மலைப்பகுதியில் உள்ள காட்டிற்குச் செல்கிறார்கள். வழி காட்டுவதற்காக வனத் துறையில் வேலை பார்க்கும் பாலசரவணனை உடன் அழைத்துச் செல்கிறார்கள். காட்டில் நுழைந்த பின் பாலசரவணன் சொல்வதை யாரும் மதிக்காமல் செல்கிறார்கள். 'தடை செய்யப்பட்ட பகுதி' ஒன்றிற்குள் நுழையவே கூடாது என்கிறார் பாலசரவணன். ஏன் செல்லக் கூடாது என்பதற்கு 'பேச்சி' கதையைக் கூறுகிறார். ஆனால், அதையும் மீறிச் செல்கிறார்கள் ஒரு சிலர். அவர்களுக்கு என்ன ஆனது, பேச்சி யார் ?, டிரெக்கிங் போன ஐவரும் உயிருடன் திரும்பினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
காட்டிற்குள் செல்லும் ஆறு பேருமே படத்தின் நாயகன், நாயகிகள். ஐவர் கூட்டணியை வழி நடத்திச் செல்பவராக பாலசரவணன். பொதுவாக தான் நடிக்கும் படங்களில் மீட்டருக்கு மேலேயே நடிப்பவர் பாலசரவணன். இந்தப் படத்தில் அதையெல்லாம் தவிர்த்துவிட்டு கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதில் மட்டும் இயல்பாக நடித்திருக்கிறார். இப்படியே மற்ற படங்களிலும் தொடர வாழ்த்துகள்.
ஐவர் கூட்டணியின் தலைமை நண்பராக தேவ். இருந்தாலும் அவர் சொல்வதை காயத்ரி மட்டுமே கேட்கிறார். தேவ், காயத்ரி காதல் ஜோடி என்பதே அதற்குக் காரணம். ப்ரித்தியும், ஜனாவும் அவர் சொல்வதைக் கேட்பதேயில்லை. எந்தப் பேயையும் அவர்கள் நம்பத் தயாராகவும் இல்லை. அதனால், பாலசரவணன் சொல்வதையும் மீறி தடை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்று ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். ஐவர் கூட்டணியில் போட்டோகிராபர் ஆக நடித்திருக்கும் மகேஷ்வரன் கொஞ்சமாக காமெடி செய்கிறார். ஆனால், அவருக்கு நேரும் முடிவு நாம் சிறிதும் எதிர்பாராதது. அவருடைய கேமராவை வைத்தே பேய் ஜாலம் காட்டுவது சிறப்பு. பேச்சி பாட்டியாக திடீர் திடீரென வந்து பயமுறுத்துகிறார் பாட்டி சீனியம்மாள்.
ராஜேஷ் முருகேசன் பின்னணி இசை படத்திற்கு பக்கபலம். பல காட்சிகளில் தனது அதிரடி இசை மூலம் பயத்தைக் கூட்டுகிறார். அவருக்கு பக்கபலமாக சவுண்ட் எபெக்ட்ஸ் ஒலிக்கலவை செய்தவர்களும் இருக்கிறார்கள்.
வழக்கமான பேய்ப் படமாக இல்லாமல் கொஞ்சம் புதிய காட்சிகளுடன் வந்துள்ள ஒரு படம். எந்த இடத்தில் நாம் பயப்படப் போகிறோம் என யூகிக்க முடியாத காட்சிகள். கிளைமாக்ஸ் நாம் சிறிதும் எதிர்பார்க்காத விதத்தில் முடிகிறது. ஒரு சில வழக்கமான 'டெம்ப்ளேட்' காட்சிகள் இருந்தாலும் அவை பெரிதாகத் தெரியவில்லை. பேய்ப் படம் பார்த்து பயந்து நீண்ட நாட்களாகிறது என்பவர்கள் பேச்சியைப் பாக்கலாம்.
பேச்சி - பயமுறுத்தும் 'பேச்சி'...
பேச்சி தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
பேச்சி
- நடிகை
- இயக்குனர்