நடிகர்கள் : ரோஷன் அப்துல் ரஹூப், பிரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீப், சித்திக் மற்றும் பலர்.
இசை : ஷான் ரஹ்மான்,
ஒளிப்பதிவு : சீனு சித்தார்த்
டைரக்சன் : ஓமர் லுலு
கடந்த ஒரு வருடமாக ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வந்த புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ஒரு அடார் லவ் படம் ஒருவழியாக வெளியாகியுள்ளது.. ஏற்கனவே மலையாளத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த ஓமர் லுலுவின் மூன்றாவது படம் என்பதாலும், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது..? பார்க்கலாம்
முழுக்க முழுக்க பள்ளிக்கூடத்தில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் நிகழும் காதல், நட்பு கலாட்டாக்கள் நிறைந்த கதைதான் இது.
ப்ளஸ் ஒன் வகுப்பில் சேரும் ரோஷன், தன்னுடன் படிக்கும் பிரியா பிரகாஷ் வாரியரை லவ் பண்ணுகிறார். இந்த காதலை சொல்ல ரோஷனுக்கு உதவியாக இருந்து கை கொடுக்கிறார் இவரது தோழி நூரின் ஷெரீப். இவர்களுக்கு மட்டுமல்ல இவர்களது நட்பு வட்டாரத்தில் உள்ள அனைவருக்குமே உதவி செய்யும் நல்ல தோழியாகவும் வலம் வருகிறார் நூரின் ஷெரீப்.
ஜாலியாக சென்றுகொண்டிருந்த ரோஷன் - ப்ரியாவின் காதல் பயணத்தில் ரோஷனின் நண்பன் ஒருவர் விளையாட்டாக செய்த காரியத்தால் எதிர்பாராத சிக்கல் ஏற்படுகிறது. அது ரோஷனுடனான காதலை, பிரியா வாரியர் பிரேக்கப் செய்யும் அளவுக்கு கொண்டு போகிறது.
இதனால் விரக்தியடையும் ரோஷனை, பிரியாவுடன் இணைத்து வைக்க விரும்பும் அந்த நண்பன், நூரின் ஷெரீப்பிடம் ரோஷனை காதலிப்பது போல நடிக்கும்படியும், பொசஷிவ் காரணமாக பிரியா வாரியர் தானாகவே ரோஷனை மீண்டும் தேடி வருவார் என கூறி உதவி செய்ய சொல்கிறார்.
நண்பனின் காதல் மீண்டும் ஒன்று சேரட்டும் என இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு நடிக்கும் நூரின், ஒரு கட்டத்தில் ரோஷன் மீது காதல் வயப்படுகிறார். அதேபோல ரோஷனின் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக நூரின் மீது திரும்புகிறது. அதேசமயம் இவர்கள் திட்டப்படி பிரியா வாரியரும் தனது தவறை உணர்ந்து ரோஷனிடம் திரும்பி வருகிறார். இதனால் தனது காதலை மனதிற்குள் புதைக்கிறார் நூரின்.
ஆனால் ரோஷனோ முன்னைப்போல் பிரியா வாரியாரை முழு மனதாக ஏற்கவும் முடியாமல், நூரினை மறக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறார். இறுதியில் துணிந்து நூரினிடம் காதலை சொல்ல முடிவெடுக்கும் நேரத்தில் விதி எதிர்பாராதவிதமாக குறிப்பிடுகிறது. ரோஷன் நூரினிடம் தனது காதலைச் சொன்னாரா..? அதை நூரின் ஏற்றுக்கொண்டாரா..? இல்லை மீண்டும் பிரியாவுடன் தனது காதலை ரோஷன் தொடர்ந்தாரா என்பது கிளைமாக்ஸ்.
புதிய காட்சிகள் என எதுவும் இல்லாவிட்டாலும் காதலும் நண்பர்கள் கலாட்டாவுமாக படத்தின் முதல் பாதி முழுவதும் ஜாலியாக நகர்கிறது. ரோஷன், பிரியா இருவரும் தங்களது காதல் குறும்புகளால் டீனேஜ் மாணவர்களுக்கே உண்டான குணாதிசயங்கள் அனைத்தையும் அழகாக பிரதிபலித்திருக்கிறார்கள். இவர்களின் புருவ சிமிட்டல்கள் ஏற்கனவே நம்மை கவர்ந்து இருந்ததால், படத்தில் பார்க்கும்போது அவ்வளவு பெரிதாக ஆச்சரியம் எதுவும் எழவில்லை.
அதேசமயம் நமக்கு எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கிறார் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ள நூரின் ஷெரீப். பிரியா பிரகாஷ் வாரியாருக்கு கிடைத்த பப்ளிசிட்டியால் வெளியே தெரியாமல் அமுங்கிவிட்ட நூரின் ஷெரீப், படம் முழுவதும் தனது க்யூட்டான நடிப்பால் நம் மனதை கொள்ளை கொள்கிறார்..
ரோஷனின் நண்பனாக வரும் குண்டுப்பையன், டீச்சருடன் மோகமாகும் விடலைப்பையன் உள்ளிட்ட அனைவருமே அந்தப் பருவத்திற்கே உண்டான குறும்புத்தனமான உணர்வுகளை அச்சு அசலாக பிரதிபலித்து உள்ளார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சித்திக், பி.டி மாஸ்டராக வரும் ஹரிஷ் கணரன், கணக்கு மற்றும் வேதியல் ஆசிரியர்களின் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன. நள்ளிரவில் சந்தேகம் கேட்கும் மாணவனை வித்தியாசமாக டீல் செய்யும் அந்த டீச்சரும் நம்மை ஈர்க்கிறார்.
ஷான் ரகுமானின் இசையில் பாடல்கள் அடிக்கடி வந்து சென்றாலும் அவை இந்த மாணவர்களின் கலாட்டாக்களால் மிக அழகாக நம்மை கடந்து செல்கின்றன. அதேபோல மொத்தப்படமும் கிட்டத்தட்ட பள்ளியிலேயே நகர்ந்தாலும் சீனு சித்தார்த்தின் ஒளிப்பதிவு அவற்றை போரடிக்காத விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
96 படத்திற்கு அப்படியே நேரெதிராக இந்த நவீனயுகத்தில் மாணவர்கள் காதலை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை படு எதார்த்தமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் ஓமர் லுலு. அதேசமயம் க்ளைமாக்ஸில் நாம் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்து அதிர்ச்சியுடன் நம்மை வெளியே அனுப்புகிறார்.
பிரியா பிரகாஷ் வாரியாரின் ரசிகராக ஆவலுடன் இந்தப்படத்தைப் பார்க்க தியேட்டருக்குள் நுழையும் ஒரு ரசிகன், படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அதில் கதாநாயகியாக நடித்துள்ள நூரின் ஷெரீப்பை மனம் முழுவதும் நிரப்பிக்கொண்டு வெளியே வருவான் என்பதுதான் இந்தப்படம் எதிர்பாராமல் நிகழ்த்தியிருக்கும் மேஜிக்.