யு டர்ன்,U turn

யு டர்ன் - சினி விழா ↓

Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

யு டர்ன் - விமர்சனம்

நடிப்பு - சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா மற்றும் பலர்
இயக்கம் - பவன்குமார்
இசை - பூர்ண சந்திர தேஜஸ்வி
தயாரிப்பு - பிஆர்8 கிரியேஷன்ஸ், விஒய் கம்பைன்ஸ், சீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்

திரில்லர் படங்கள் என்றாலே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது படம் பார்க்கும் பார்வையாளனுக்குத் தெரியவே கூடாது. அவர்களுடைய யூகங்களுக்கு மாறாக திரைக்கதை நகரும் போது படம் ரசிகர்களை வெகுவாகக் கவரும். அப்படி ஒரு படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை இந்த யு டர்ன் தீர்த்து வைக்கிறது.

ஒரு பக்கம் மர்மக் கொலை என்று சொன்னாலும் மற்றொரு பக்கம் பேய்ப் படமாகவும் இருக்குமோ என்று மட்டுமே நம்மால் யோசிக்க முடிகிறது. ஆனால், கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்று படம் பார்க்கும் ஒருவராலும் சொல்ல முடியாது என தாராளமாகச் சொல்லலாம்.

கன்னடத்தில் இந்தப் படத்தைக் கொடுத்து பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற இயக்குனர் பவன்குமார், தமிழிலும் அதே போன்றதொரு வரவேற்பையும், வெற்றியையும் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பயிற்சியாளராக இருப்பவர் சமந்தா. ஒரு மேம்பாலத்தில் நடுவில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளை அகற்றி, அந்த இடத்திலேயே யு டர்ன் போட்டுச் செல்பவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதும் முயற்சியில் இருக்கிறார். அப்படி மேம்பாலத்தில் ஒரு நாள் தடுப்புகளை அகற்றி யு டர்ன் அடித்து சென்ற ஒருவரைச் சந்திக்கச் சென்று, அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பி விடுகிறார். மறுநாள் அந்த நபர் கொலை செய்யப்பட்டுக் கிடக்க, போலீசார் சமந்தாவை அழைத்து விசாரிக்கிறார்கள். அப்போது அவர் தன்னுடைய கட்டுரையைப் பற்றிச் சொல்கிறார். மேலும், அது போன்று பத்து நபர்களின் முகவரிகளை வைத்திருக்கிறார். அவர்களைப் பற்றி போலீசார் விசாரிக்க முயல அவர்கள் ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பது தெரிய வருகிறது. இது பற்றிய விசாரணையை இன்ஸ்பெக்டரான ஆதி மேற்கொள்கிறார். சமந்தாவும் அந்த இறப்புகளுக்குக் காரணம் என்ன என்பது பற்றி ஆராய ஆரம்பிக்கிறார். அதன் பின்ன என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பயிற்சி பத்திரிகையாளர் ரக்ஷனாவாக சமந்தா. இதுவரை தமிழில் காதல் நாயகியாகவே பார்த்த சமந்தாவை முதல் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. கொஞ்சம் கட் செய்யப்பட்ட தலைமுடி, ஒரு மூக்குத்தி, அதிக கிளாமரில்லாத சிம்பிளான டிரஸ் என வேறு தோற்றத்தில் தெரிகிறார். போலீஸ் விசாரணைக்கு அவர் போகும் வரை கொஞ்சம் காதல் நாயகியாகத் தெரிந்தாலும், அதன் பின்னர் கலவரப்படுத்தும் நாயகியாக மாறிவிடுகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயப்படும் காட்சிகளில் அவருடைய பதட்டம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. இந்த யு டர்ன் சமந்தாவின் திரையுலகப் பயணத்திலும் திருப்புமுனையாக இருக்கும்.

படத்தின் நாயகன் என்று சொல்ல முடியாது, ஆனாலும், முக்கியமான கதாபாத்திரத்தில் ஆதி. அவ்வளவு மெச்சூர்டான கதாபாத்திரத்தை மிக அழகாக தனக்குள் பொருத்திக் கொள்கிறார். சமந்தாவைப் பார்த்ததும் பரிதாபப்பட்டு அவருக்கு உதவிகள் செய்ய ஆரம்பிக்கிறார். கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு ஹாலிவுட் பட கதாபாத்திர அளவிற்கு அவருடைய நடிப்பைப் பாராட்ட வைக்கிறார்.

ராகுல் ரவீந்திரன், சமந்தா உடன் பணிபுரியும் பத்திரிகையாளர். இருவருக்கும் இடையில் காதல் உருவானாலும் அது தள்ளி நிற்கும் காதலாக இருக்கிறது. நெருங்கி வருவதற்குள் சமந்தா சங்கடத்தில் சிக்கிக் கொள்கிறார்.

காவல் துறை அதிகாரியாக ஆடுகளம் நரேன், பூமிகா, நரேன் ஆகியோர் கொஞ்சமாக வந்தாலும் அவர்களுடைய கதாபாத்திரங்களைப் பேச வைக்கிறார்கள்.

சிறப்பான திரைக்கதையாக இருந்தாலும் சில பல கேள்விகள் எழுகின்றன. எது வேண்டுமானாலும் செய்யும் பேய்களுக்கு சில உண்மைகள் மட்டும் ஏன் தெரிவதில்லை என்ற சந்தேகம் பேய்ப் படங்களைப் பார்க்கும் போது எழும். அது இந்தப் படத்திலும் எழுகிறது. அதில் மட்டும் சராசரியான பேய்ப் படமாக இதைப் பார்க்க வைக்கிறார் இயக்குனர்.

மற்றபடி, ஒரு திரில்லிங்கான படம் பார்க்கும் அனுபவத்தைப் பெற விரும்பும் ரகிர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.

யு டர்ன் - ஹிட் டர்ன்

 

பட குழுவினர்

யு டர்ன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓