நடிகர்கள் : மோகன்லால், நதியா, பார்வதி நாயர், சுராஜ் வெஞ்சாரமூடு, நாசர்
டைரக்சன் : அஜய் வர்மா
புதிய இயக்குனர், அதிலும் பாலிவுட்டில் பணியாற்றியவரான அஜய் வர்மா என்பவரின் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ளார் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. அப்படி என்ன விசேஷம் இந்தப்படத்தில்..? எதிர்பார்ப்பை ஈடு செய்திருக்கிறதா..? பார்க்கலாம்.
பெங்களூரில் ஜெம்மாலஜிஸ்ட்டாக வேலை பார்ப்பவர் மோகன்லால். மனைவி நதியாவை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என தகவல் வந்ததும் பெங்களூரில் இருந்து கோழிக்கோடுக்கு கிளம்புகிறார். அவரது கம்பெனியில் இருந்தது சரக்கு ஏற்றி செல்லும் வாகனம் ஒன்று கிளம்ப, அதிலேயே ட்ரைவர் சுராஜ் வெஞ்சாரமூடுவுடன் பயணிக்கிறார் மோகன்லால். கர்நாடக - கேரள பார்டரில் உள்ள மலைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்தில் வண்டி பள்ளத்தில் உருண்டு, ஒரு பாறையின் உச்சியில் உள்ள மரக்கிளையில் சிக்கி அதலபாதாளத்தை நோக்கி தொங்கிக்கொண்டு இருக்கிறது.
இருவரும் பலத்த காயமடைந்து, அதில் சுராஜ் மயக்கமாகும் நிலையில் இருக்க, ஆளரவமற்று கிடக்கும் அந்தப்பகுதியில் தங்களை காப்பாற்ற ஆள் வருவார்களா என தவிக்கின்றார் மோகன்லால். பில் காட்டாத நிலையில் அவரது போனின் அவுட்கோயிங் துண்டிக்கப்பட்டு இருக்க, அதேசமயம் அவருக்கு இரண்டே இரண்டு போன் கால்கள் வருகின்றன.
பிரசவ வேதனையில் துடிக்கும் நதியா போன் செய்து கோபமாக பேசி மோகன்லாலை பேசவிடாமல் இணைப்பை துண்டிக்கிறார். அடுத்ததாக மோகன்லாலை அழைக்கும் அவரது அலுவலக செக்ரட்டரியான பார்வதி நாயர், மோகன்லால் தன்னை உதாசீனம் செய்யும் காரணம் என்ன என கேட்டு கோபப்படுவதுடன், மோகன்லால் தனது ஆபத்தான நிலை பற்றி கூறியும் கண்டுகொள்ளாமல் இணைப்பை துண்டிக்கிறார்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து இவர்கள் இருவராலும் தப்பிக்க முடிந்ததா..? தப்பிக்க வைக்கும் விதமாக ஏதேனும் அதிசயம் நடந்ததா..? என்பது தான் மீதிப்படம்.
இரண்டு மணி நேர படத்தில் அரைமணி நேர பிளாஷ்பேக் காட்சிகள் தவிர்த்து, மீதி ஒன்றரை மணி நேரமும் மலை உச்சியில் தொங்கும் காரிலேயே தான் அமர்ந்திருக்கிறார் மோகன்லால். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, அந்த ஒன்றரை மணி நேரமும் நம்மை போரடிக்க விடாது தனது அசகாய நடிப்பால் இருக்கை நுனியில் அமர வைத்து விடுகிறார் மோகன்லால். குறிப்பாக மோகன்லால் இதில் சாகச ஹீரோவாக நடிக்காமல், ஒரு சராசரி மனிதராக நடித்திருப்பது கதையுடன் நம்மையும் ஒன்றவைத்து விடுகிறது.
டிரைவராக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு சீட் பெல்ட்டின் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடியே இறுதிமூச்சை விடும் காட்சி நம்மை உறைய வைக்கிறது. உதவிக்கு யாரும் இல்லாத அந்த மலைப்பகுதியில் கார் தொங்கிக்கொண்டு இருக்கும் பகுதியில் இருக்கும் குரங்கு ஒன்றை வசியப்படுத்தி மோகன்லால் உதவி பெற நினைப்பதும், அதற்கு ஏற்றவாறு குரங்கின் செயல்பாடுகள் வெகு இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதும் இவற்றை எப்படி படமாக்கி இருப்பார்கள் என்கிற பிரம்மையை ஏற்படுத்துகிறது.
மோகன்லாலின் மனைவியாக வரும் நதியா, விபத்தில் சிக்கிய மோகன்லாலுக்கு போன் செய்யும் காட்சிகளில் மட்டுமே வந்துபோகிறார். மோகன்லாலுடன் நட்பு (?) பாராட்டி, மோகன்லால் தன்னை ஒதுக்குவதால் ஏற்படும் வெறுப்பில் அவர் விபத்தில் சிக்கியதை கூட மது அருந்திக்கொண்டே ரசிக்கும் குரூரத்தனம் கலந்த நெகட்டிவ் ரோலில் பார்வதி நாயர். அதேசமயம் க்ளைமாக்சில் டுவிஸ்ட் அடித்து அசத்துகிறார்.
சரக்கு வாகனத்தில் சிக்கிய வைரங்களை களவாட வரும் திலீஷ் போத்தன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிய சுவாரஸ்யத்தை தரவில்லை. மோகன்லாலின் இறந்துபோன தந்தையாக, ஒரே ஒரு காட்சியில் மட்டும் மோகன்லாலின் கண் முன்னே தோன்றி அவருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் கேரக்டரில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்கிறார் நாசர்.
ரோனி ரபேலின் பின்னணி இசை பள்ளத்தாக்கு சம்பந்தப்பட்ட காட்சிகளில் பயம் காட்டுகிறது. தூண்டிலில் மீனை பிடிக்கும் லாவகத்துடன், மலை உச்சியில் நடக்கும் நிகழ்வுகளையும், கார் விபத்தில் சிக்கும் காட்சியையும் தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தூண்டியில்.
மிக குறைந்த நடிகர்கள், மிக குறைந்த நாட்கள் படப்பிடிப்பு என மோகன்லாலுக்கு ஒய்வாக கிடைத்த சில நாட்களை வைத்து இயக்குனர் அஜய் வர்மா இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் என சுலபமாகவே கணிக்க முடிகிறது... இந்தப்படத்திற்கு ஹீரோவாக மோகன்லால் எதற்கு..? ஒரு சாதாரண புதுமுக ஹீரோ போதுமே என்கிற எண்ணம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.
ஆனாலும் படம் பார்க்க வருபவர்களுக்கு ஒரு த்ரில்லிங் அனுபவம் நிச்சயம் காத்திருக்கிறது.