1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், சத்யன், ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் பலர்.
இயக்கம் - கல்யாண்
இசை - விவேக் மெர்வின்
தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ் - கோட்டபாடி ஜே. ராஜேஷ்

தமிழ் சினிமாவில் எந்த காலத்திற்கும் மறக்க முடியாத சில திரைப்படங்கள் உள்ளன. அந்தத் திரைப்படங்களின் பெயர்கள் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்த ஒன்றாகவும் இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைத்து பழைய படங்களின் பெருமையைக் குலைப்பதே தற்போது பலருக்கு வேலையாகப் போய்விட்டது.

எம்ஜிஆர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்து டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், 1955ல் வெளிவந்த திரைப்படம் குலேபகாவலி. புலியுடன் எம்ஜிஆர் சண்டை போட்ட பெருமைமிக்க திரைப்படம். அந்தப் பெருமைமிக்க திரைப்படத்தின் பெயரை இந்த புதிய குலேபகாவலி கெடுத்துள்ளதை எம்ஜிஆர் ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

2017ம் ஆண்டில் அறம் என்ற தரமான, சிறந்த படத்தைக் கொடுத்த தயாரிப்பு நிறுவனமா இப்படி ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறது என ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. படத்தில் புதையலைத் தேடி கண்டுபிடிக்க பெரிதும் முயல்வார்கள். அதேப்போல படத்திற்காக ஒரு சிறந்த கதையைத் தேடிக் கண்டுபிடிக்க யாருமே முயற்சி செய்யவில்லை.

குலேபகாவலி என்ற கிராமத்தில் கோயிலுக்கு அருகில் பல வருடங்களுக்கு முன்பு ஒருவரால் புதைத்து வைக்கப்பட்ட வைரப் புதையல் ஒன்று இருக்கிறது. அந்தப் புதையலைத் தேடி அதைப் புதைத்து வைத்தவரின் வாரிசு வெளிநாட்டில் இருந்து வருகிறார். அதை எடுத்து வரும் வேலையை திருடனான பிரபுதேவாவிடம் ஒப்படைக்கிறார்கள். அவருடன் ஹன்சிகா, முனீஷ்காந்த், ரேவதி சேர்ந்து கொள்கிறார்கள். புதையலை அவர்கள் எடுத்து வந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

தேவி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய பிரபுதேவா இந்தப் படத்தின் மூலம் அதை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படி இந்தக் கதையிலும், கதாபாத்திரத்திலும் என்ன இருக்கிறது என்று நடிக்க சம்மதித்தார் என்பதுதான் தெரியவில்லை. வழக்கம் போல நடனத்தில் மட்டும் வியக்க வைக்கிறார். அதிலும் அந்த முதல் பாடல், ஒன்றும் புரியவில்லை என்றாலும் அட்டகாசமான நடனம் மற்றும் காட்சியமைப்பு. கதையைப் பார்த்து தேர்வு செய்யுங்கள் பிரபுதேவா.

ஹன்சிகா யாரு, அவர் கேரக்டர் என்ன அதைப் பற்றியெல்லாம் இயக்குனர் பெரிதும் கவலைப்படவில்லை. அவரை முடிந்த அளவிற்கு கிளாமராகக் காட்ட மட்டுமே முயற்சி எடுத்துள்ளார். பல காட்சிகளில் மிகவும் பரிதாபமாகத் தெரிகிறார் ஹன்சிகா. முகத்தில் அந்த பழைய அழகு ஏனோ மிஸ்ஸிங்.

முனீஷ்காந்த் அடிக்கும் ஜோக்கையெல்லாம் நகைச்சுவை என்று எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை. ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மதுசூதனராவ் என உருட்டி மிரட்டும் வில்லன்களிடமும் உருப்படியாக வேலை வாங்கவில்லை. மொட்டை ராஜேந்திரன், ரேவதியைப் பார்த்து சித்தி என்றழைப்பதெல்லாம் கொடுமை. யோகி பாபு, சத்யன் சரியாகப் பயன்படுத்தபடவில்லை.

படத்தின் தன் நடிப்பால் அனைவரையும் ஓவர்டேக் செய்பவர் ரேவதி மட்டுமே. அதிலும் படத்தின் ஆரம்பக் காட்சியில் சத்யனை ஏமாற்றுவதிலேயே அவருடைய அதிரடி ஆரம்பமாகிறது. கிளைமாக்ஸ் வரை ரேவதி ஸ்கோர் செய்கிறார். படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்றே ஒன்று என்றால் அது ரேவதியின் நடிப்பு மட்டுமே.

விவேக்-மெர்வின் இசையில் குலேபா... பாடல் மட்டும் மிரட்டல். மற்ற பாடல்கள் சுமார் ரகம். சேசிங் காட்சிகளில் ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

இப்படிப்பட்ட நடிகர், நடிகைகள், பெரிய பட்ஜெட் ஆகியவை கிடைத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டார் இயக்குனர் கல்யாண். நகைச்சுவை என்ற பெயரில் படத்தில் இடம் பெற்றுள்ள பல காட்சிகளைப் பார்க்க நமக்குப் பொறுமை வேண்டும்.

குலேபகாவலி - வலி!

 

பட குழுவினர்

குலேபகாவலி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

பிரபுதேவா

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படுவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, கர்நாடக மாநிலம், மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். தந்தையை போலவே பிரபுதேவாவும் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு சின்ன வயதில் இருந்தே முறைப்படி நடனம் கற்றார்.

பரதநாட்டியம், வெஸ்டர்ன் என அனைத்து வித நடனங்களையும் ஆடும் ஆற்றல் பெற்ற பிரபுதேவா, சினிமாவில் ஒரு டான்ஸராகத்தான் அறிமுகமானார். ஆரம்பத்தில் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் ஓரிரு பாடல்களில் நடனமாடினார். பின்னர் இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

ஒருகட்டத்தில் நடித்தபடியே இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ள பிரபுதேவா, சிறந்த நடன அமைப்புக்காக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தான் காதலித்த ரமலத் என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அப்பாவும் ஆனார். இதில் அவரது ஒரு மகன் கேன்சர் நோயால் இறந்து போனார். மகனின் மரணம் பிரபுதேவாவை பெரிதும் வாட்டியது.

இந்த சூழலில் நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கி, தான் காதலித்து மணந்த முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்தும் செய்தார். பின்னாளில் நயன்தாராவுடனான காதலும் முறிவுக்கு வந்தது.

மேலும் விமர்சனம் ↓