2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், அர்த்தனா, யோகி பாபு மற்றும் பலர்
இயக்கம் - வள்ளிகாந்த்
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு - பசங்க புரொடக்ஷன்ஸ்

ஒரு படத்தைப் பார்க்கப் போவதற்கு முன்பு அந்தப் படத்தைத் தயாரித்திருப்பது யார், இயக்கியிருப்பது யார், இசையமைத்திருப்பது யார், நடித்திருப்பது யார் என்றெல்லாம் பார்த்துதான் செல்வோம். சில பெயர்களைப் பார்க்கும் போதே நமக்கும் அந்தப் படத்தைப் பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனால், உள்ளே போன பிறகுதான் அந்த நம்பிக்கை வீணாகிப் போய்விட்டது என்று தெரியும்.

அப்படி பெயரைப் பார்த்து நம்மை உள்ளே வரவைத்து ஏமாற்றியிருக்கும் படம்தான் 'செம'. தயாரிப்பு, வசனம் - பாண்டிராஜ் என்ற பெயரைப் பார்த்து நம்பி தியேட்டருக்குச் செல்பவர்கள் 'செம'யாக ஏமாந்து போவது நிச்சயம்.

ஒரு டெம்போவில் காய்கறி, மீன் என வியாபாரம் செய்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். அவருக்கு திருமணத்திற்கு எளிதில் பெண் கிடைக்கவில்லை. ஒரு வழியாக அர்த்தனாவைப் பெண் பார்க்கச் சென்ற போது அவரது குடும்பத்தாருக்கு பிரகாஷைப் பிடித்துப் போக நிச்சயம் செய்ய முடிவெடுக்கிறார்கள். ஆனால், எம்எல்ஏ மகன் அர்த்தனாவைக் காதலிப்பது தெரிந்து அர்த்தனாவின் அப்பா மன்சூரலிகான் திடீரென பிரகாஷிடம் திருமணம் வேண்டாமென மறுத்துவிடுகிறார். ஆனால், பிரகாஷின் அம்மா சுஜாதா, அர்த்தனாவின் அம்மா கோவை சரளா இருவரும் சேர்ந்து சென்னையில் பிரகாஷுக்கும், அர்த்தனாவுக்கும் ரகசியமாகத் திருமணம் செய்து அங்கேயே தங்க வைத்துவிடுகிறார்கள். மன்சூரலிகானுக்குத் தெரியாமல் அந்த ரகசியத்தைக் காப்பாற்றுகிறார்கள். சரி, படத்தில் அப்புறம் என்ன டிவிஸ்ட் எனக் கேட்கிறீர்களா ?, அந்த உண்மை மன்சூரலிகானுக்குத் தெரிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

ஒரு பேய்ப் படத்திலும், ஒரு ஆபாசப் படத்திலும் கொஞ்சம் வசூல் கிடைத்ததால் ஜி.வி.பிரகாஷ்குமாரையும் ஒரு நாயகன் என தமிழ் சினிமா ஏற்றுக் கொண்டது. ஆனால், அதன் பின்னர் வந்த படங்கள் அவருக்கு வெற்றியைத் தர மறுக்கிறது. அந்த வரிசையில் 'செம'யும் தொடர்கிறது. பிரகாஷுக்குக் கதை தேர்வு செய்யத் தெரியவில்லையா அல்லது பிரகாஷுக்கு இந்தக் கதை போதும் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முடிவு செய்கிறார்களா எனத் தெரியவில்லை. பிரகாசமான சினிமா எதிர்காலம் அமைய பிரகாஷ் எதையாவது செய்தே ஆக வேண்டும்.

நாயகியாக அர்த்தனா. கிராமத்துப் பெண்ணாக அழகாக இருக்கிறார். பிரகாஷைக் காதலிப்பதைத் தவிர அதிக வேலையில்லை. இடைவேளைக்குப் பின் கொஞ்சம் அழுது நடிக்கிறார், அத்துடன் அவர் வேலை முடிந்து போகிறது.

படத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றுவது யோகி பாபு. படம் முழுவதும் வரும் அளவிற்கு வளர்ந்த காமெடி நடிகர் ஆகிவிட்டார். ஜி.வி.பிரகாஷ் அம்மாவாக சுஜாதா. கிராமத்துப் பக்க அம்மா என்றால் இவர்தான் என்றாகிவிட்டது. நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். அர்த்தனாவின் அம்மாவாக கோவை சரளா, அப்பாவாக மன்சூரலிகான். வழக்கம் போலவே இருவரும் ஓவர் ஆக்டிங். வீண்புரளி பேசும் அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு முக்கியத்துவம் ஏன் எனத் தெரியவில்லை.

ஜி.வி.பிரகாஷ் இசையில் 'சண்டாளி...' பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.

ராமு செல்லப்பா என்ற இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை இதுவாம். உண்மைக் கதையை எவ்வளவு சுவாரசியமாகச் சொல்லியிருக்க வேண்டும். எந்த பரபரப்பும், திருப்பமும் இல்லாமல் சாதாரணமான படத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது. 'செம' என பெயர் வைத்தால் மட்டும் போதுமா, அதற்கேற்றபடி எடுக்க வேண்டாமா ?.

செம - பெயரில் மட்டும்...!

 

செம தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

செம

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓