பெங்காலி மொழியில் வெளிவந்து ஹிட்டடித்த ராஜ்காஹினி படம், வித்யாபாலன் நடிப்பில் பாலிவுட்டில் ரீ-மேக்காகி வெளிவந்துள்ள படம் தான் பேகம் ஜான். பாலியல் தொழில் செய்யும் பெண், தன் வாழ்விடத்தை காப்பாற்ற போராடும் விதம் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
இந்தியா சுதந்திர பெற்ற அடுத்தாண்டில் கதைக்களம் ஆரம்பிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில், பேகம் ஜான் எனும் வித்யாபாலன், தன்னுடன் 11 பெண்களை வைத்து தனக்கு சொந்தமான இடத்தில் பாலியல் தொழில் செய்து வருகிறார். இந்தச்சூழலில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரிக்கப்படுகிறது. அப்போது பேகம் ஜானை அந்த இடத்தை விட்டு செல்லும்படி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் வித்யாபாலன் மறுக்கிறார். இதனால் பிரச்னை உருவாகிறது. தன் வாழ்விடத்தையும், தன் வாழ்வாதாரமான பாலியல் தொழிலையும் காப்பாற்ற, வித்யாபாலன் எப்படி தன்னுடன் வசிக்கும் சக பெண்களுடன் போராடுகிறார், அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா...? என்பது பேகம் ஜான் படத்தின் பரபரப்பான மீதிக்கதை.
பேகம் ஜானாக வித்யாபாலன் நடிக்கவில்லை, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதிலும் ஹூக்கா பிடித்தபடி அவர் காட்டும் தோரணை, வாழ்விடத்தை காப்பாற்ற அவர் காட்டும் ஆக்ரோஷம் எல்லாம் ஈர்க்கிறது.
வித்யாபாலன் உடன் கவுகர் கான், பல்லவி சரதா, ஆசிஷ் வித்யார்த்தி, நஸ்ருதின் ஷா, சங்கி பாண்டே... என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படம் முழுக்க வித்யாபாலன் தான் தெரிகிறார். இருந்தாலும் அவரவர் அவர்களது ரோல்களை சரியாக நடித்திருக்கிறார்கள்.
பெங்காலியில் ராஜ்காஹினி படத்தை இயக்கிய ஸ்ரீஜித் முகர்ஜியே, பேகம் ஜான் படத்தையும் இயக்கியுள்ளார். முதல்பகுதி மெதுவாகவும், இடைவேளைக்கு பிந்தையபகுதி விறுவிறுப்பாகவும் நகருகிறது. படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள், அதை தவிர்த்து விட்டு பார்த்தால் இயக்குநர் தன் ரோலை சரியாக செய்திருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பலம். ஆனாலும் இசை, ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காலக்கட்டத்தில், தன் வாழ்விடத்தை காப்பாற்ற ஆண்கள் துணையின்றி போராடும் பேகம் ஜானான வித்யாபாலனுக்காக ‛பேகம் ஜான்'-ஐ ஒருமுறை பார்க்கலாம்.