நடிகர்கள் ; பிருத்விராஜ், பிரியா ஆனந்த், டொவினோ தாமஸ், சுதேவ் நாயர், விஜயராகவன், பாபு ஆண்டனி, பிரதாப் போத்தன், அலான்சியர் லே மற்றும் பலர் . இசை ; ராகுல்ராஜ், சுஷின் ஷியாம் , ஒளிப்பதிவு ; சுஜித் வாசுதேவ் ,டைரக்சன் ; ஜெய்.கே
மாஸ் ஹீரோவாக வலம்வரும் பிருத்விராஜ், ஒரு ஹாரர் த்ரில்லர் கதையில் நடித்திருக்கிறார் என்பதாலேயே எதிர்பார்ப்பை எகிறவைத்த படம் இது.. அறிவித்த தேதியை கடந்து இரண்டு மாதங்கள் கழித்து வந்திருக்கும் இந்தப்படம் அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்திருக்கிறதா..? பார்க்கலாம்.
மும்பையில் அணுக்கழிவுகளை காண்ட்ராக்ட் எடுத்து அவற்றை பத்திரமாக அழிக்கும் வேலையை செய்யும் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் வேலைபார்ப்பவர் பிருத்விராஜ். அவரது காதல் மனைவி பிரியா ஆனந்த்.. சற்று கோபத்தில் இருக்கும் மனைவியின் குடும்பத்தினர் ஒட்டாத நிலையில், கொச்சியில் இருக்கும் பாதர் விஜயராகவன் மட்டுமே பிருத்விராஜுக்கு ஆதரவு.. இந்நிலையில் கொச்சிக்கு மாற்றலாகும் பிருத்விராஜ் மிகப்பழமை வாய்ந்த பங்களா ஒன்றில் மனைவியுடன் குடியேறுகிறார்..ஆனால் அன்றைய தினம் முதல் பிருத்விராஜும் பிரியா ஆனந்தும் தொடர்ந்து அமானுஷ்யமான சில பிரச்சனைகளை சந்திக்கின்றார்.. அவர்களை சந்திக்க வரும் பாதரும் அதை உணர்ந்து, மும்பையில் இருக்கும் சாமியார் பாபு ஆண்டனி மூலமாக உதவி கேட்டு பிருத்விராஜை அனுப்பி வைக்கிறார்..
போன இடத்தில் பிருத்விராஜை சந்தித்து பேசிய மறுதினமே சாமியார் திடீரென இறந்து விடவே அவரது மகன் சுஜித் ஷங்கர் இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண கொச்சி வருகிறார். இந்நிலையில் பிரியா ஆனந்த் கர்ப்பமாக இருப்பது உறுதியாக, அவரது வயிற்றில் வளரும் குழந்தைதான் அமானுஷ்ய சக்திக்கு இலக்காக மாறி இருக்கிறது என்பதையும், அதன்மூலம் பேராபத்து ஏற்படப்போவதையும் பிரியா ஆனந்தின் சில மர்மமமான நடவடிக்கைகளால் கண்டுபிடிக்கிறார் சின்ன சாமியார்.
அந்த வீட்டில் இத்தனை பிரச்சனைக்கும் மூலகாரணமான அந்த அமானுஷ்ய சக்தி யார் என்பதும் அதன் தற்போதைய நோக்கம் என்ன என்பதையும் அறிந்து கொள்கிறார்கள் சாமியாரும் பிருத்விராஜும்.. போலீஸ் அதிகாரி டொவினோ தாமஸ் துணையுடனும் சில மந்திரவாதிகள் துணையுடனும் அந்த அமானுஷ்ய சக்தியை விரட்ட முயற்சிகள் மேற்கொள்ளும்போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது...அந்த திருப்பம் என்ன, அமானுஷ்ய சக்தியை விரட்டி பிரியா ஆனந்தையும் அவரது குழந்தையும் காப்பற்றினார்களா, அந்த அமானுஷ்ய சக்தியின் இலக்காக இருந்தது எது என்பதை கண்டறிந்து அதை தடுத்தார்களா என்பது தான் மீதிக்கதை.
ஒரு ஹாரர் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கின்றன. பேயால் பயமுறுத்தப்படும் கதாபாத்திரத்தில் நடிக்க மாஸ் ஹீரோ பிருத்விராஜ் எதற்கு என்று நாம் நினைத்தாலும் க்ளைமாக்ஸ் போர்ஷன் அட இதற்குத்தான் பிருத்விராஜை செலக்ட் பண்ணினார்களா என சரியான காரணத்துடன் நம்மை சமாதானம் கொள்ளவைக்கிறது.. இதில் பிருத்விராஜின் முற்றிலும் புதிய ஒரு முகத்தை ரசிகர்கள் காணலாம்.அமானுஷ்ய சக்தியின் மிரட்டலுக்கு ஆளாகி பயந்து நடுங்குகின்ற, அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்பட்டு சில சமயங்களில் பேயாக மாறுகின்ற காட்சிகளில் பிரியா ஆனந்த் நன்றாகவே ஸ்கோர் பண்ணுகிறார்,, அதேசமயம் பிருத்விராஜுடனான ரொமான்ஸ் காட்சிகளுக்கு அவர் செட்டாகவே இல்லை.
இவர்கள் இருவரையும் தாண்டி அமானுஷ்ய சக்தியாக உருமாறும் (தேசிய விருதுபெற்ற) நடிகர் சுதேவ் நாயர், போலீஸ் அதிகாரியாக வரும் டொவினோ தாமஸ், மந்திரவாதியாக வரும் சுஜித் சங்கர் (மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் வில்லனாக மிரட்டியவர்) ஆகிய மூன்று பெருகும் மிகப்பெரிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு, அதை அவர்களும் கச்சிதமாக செய்துள்ளார்கள்.. குறிப்பாக மந்திரவாதி சுஜித் சங்கர் அமானுஷ்ய சக்தியை எதிர்கொள்ளும் காட்சிகள் திகில் ரகம்.. பிரதாப் போத்தன், அலான்சியர் லே, விஜயராகவன் ஆகியோர் தங்களது பங்களிப்பால் காட்சியை நறுவிசாக நகர்த்தியுள்ளார்கள்.
சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவில் மர்ம பங்களாவில் நடக்கும் நிகழ்வுகள் பகீர் கிளப்புகின்றன. இரவு நேர கொச்சின் அவ்வளவு அழகாக இருக்கிறது.. பின்னணி இசையில் எதிர்பாராத கணத்தில் நம் இதயத்தில் அறைகிறார் சுஷின் ஷியாம். படத்தின் ஆர்ட் டைரக்டரின் மெனக்கெடலுக்கு மிகப்பெரிய சபாஷ் போடலாம். படத்தின் முக்கால் சதவீதம் வழக்கமான ஹாரர் படங்களுக்கான ஜோடிக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் கதை நகர்ந்தாலும் கிளைமாக்ஸுக்கு சற்று முன்னர் எடுக்கும் யு டர்ன் தான் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
அமானுஷ்ய சக்தி மனித உடலில் புகுவதற்கு இதுவரை சொல்லப்பட்டு வந்த காரணங்களில் இருந்து இந்தப்படத்தில் முற்றிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குனர் ஜெய்.கே. தவிர கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களையும் அமானுஷ்ய சக்தியையும் முடிச்சுப்போட்டு க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட்டும் வைக்கிறார் பாருங்கள்.. அந்த இடத்தில் தான் ஜெயிக்கிறார் இயக்குனர் ஜெய்.ஒரு முழுமையான ஹாரர் த்ரில்லருக்குண்டான அனைத்தும் இந்த எஸ்றாவில் இருப்பதால் ரசிகர்கள் பயத்தை வரவழைத்துக்கொள்வதற்காக தைரியமாக தியேட்டரை நோக்கி செல்லலாம்.பின் குறிப்பு ; இந்தப்படத்தை தமிழிலும் எடுத்துள்ளார்கள்.. சில மாத இடைவெளியில் தமிழில் இதை (எதிர்)பார்க்கலாம்.