சமீபத்தில் திரைக்கு வந்த "துருவங்கள் பதினாறு " படத்திற்குப் பின் ரகுமான் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்திட .,மரம் மூவிஸ் & பரணி மூவிஸ் ஆகிய புது பேனர்களில் குமார் டி.எஸ்., கே.ராமராஜ் , டி .சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகிய நால்வரும் தயாரிக்க , வி.டி. சினிமாஸ் வெளியிட ரகுமானுடன் , சுரேந்தர் , மோனிகா , கெளரி நந்தா , "கல்லூரி " அகில் , நிழல்கள் ரவி , , கருத்தம்மா ராஜ ஸ்ரீ , சுதா , சிசர் மனோகர் , சுப்புராஜ் , கோவை செந்தில் , "சாட்டை"ரவி, "பாய்ஸ்"ராஜன் உள்ளிட்டோர் நடிக்க ., கார்த்திக் ராஜாவின் இசையில், ராம் கே . சந்திரனின் இயக்கத்தில் வித்தியாசமாகவும் விறு விறுப்பாகவும் வந்திருக்கும்
படம் தான் "பகடி ஆட்டம்". அதிகார பலமும் , பண பலமும் நிரம்பிய நிழல்கள் ரவி - சுதா தம்பதியின் செல்ல மகன் சுரேந்தர் . பல இளம் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார். அவரை பாதிக்கப்பட்ட ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணின் உறவினர்கள் ,சிலர் திட்டமிட்டு கடத்திச் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மண்ணில் புதைக்கின்றனர். அவரை கடத்தியது யார் ? எனக்களம் இறங்கும் போலீஸ் அதிகாரி ரகுமான் ., கடத்தலுக்கான காரணத்தையும் , கடத்தியவர்களையும் கண்டுபிடித்தும் ., குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர முற்படாமல் .,அவர்களால் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டு ,உயிருக்கு போராடும் நாயகர் சுரேந்தரை காப்பாற்றவும் முற்படாமல் , தர்மத்தின் அடிப்படையில் அந்த வழக்கை முடித்து வைக்கிறார். சுரேந்தர் , எத்தனை பெண்களின் வாழ்க்கையில் விளையாடினார் ? அவரை தண்டிப்பவர்களை போலீஸ் அதிகாரி ரகுமான் கண்டு கொள்ளாமல் நியாய தர்மத்தின் அடிப்படையில் எப்படி விடுகிறார்..? இறுதியில் மணணிற்குள் புதைக்கப்பட்ட நாயகரின் கதி என்ன ...?என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு பக்காவாகவும் பரபரப்பாகவும் பதில் சொல்கிறது " பகடி ஆட்டம்" படத்தின் கதை மொத்தமும்!
நேர்மையான காவல்துறை அதிகாரியாக நீதிக் கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு பக்கா போலீஸாக பளிச்சிட்டிருக்கிறார் ரகுமான் , இயல்பான நடிப்பை அலட்டிக் கொள்ளாது வழங்கியிருப்பது அவரது பெரிய ப்ளஸ்.படத்திற்கும் அது பக்கா ப்ளஸ். "நாம பட்ட கஷ்டத்தை நம்ம பிள்ளைங்க பட்டுடக் கூடாதுன்னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்ப்பீங்க .... அவங்களை வாட்ச் பண்ணுங்க சார் .... பிரைவேஸின்னு நீங்களே ஒரு வட்டத்தை போட்டுக்க வேண்டியது அப்புறம் குத்துதே குடையுதேன்னா ?எப்படி ..? என்று ரகுமான் கேட்கும் கேள்வியை இன்றைய பெற்றோர்கள் சற்றே யோசித்து பார்ப்பது சமூக நலத்திற்கு நிச்சயம் வித்திடும்.
பல இளம் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற ,பெண் பித்து பிடித்த நாயகராக புதுமுகம் சுரேந்தர், நச் சென்று நடித்து இளசுகளை கவருகிறார்.சவப்பெட்டி மாதிரியான ஒரு பெட்டியில் மண்ணுக்குள் அவர் படும் பாடு ரசிகனின் பல்ஸை எகிற செய்கிறது நடுத்தரகுடும்பத்து இளம் பெண்ணாக கதாநாயகியாக மோனிகா , கச்சிதம்.... அவர் முடிவோ உருக்கம். மோனிகா போன்றே அவர் மீது அதிகம் அன்பு வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர் அக்காவாக வந்துஅதிரடி செய்திருக்கும் அம்மணி கெளரி நந்தாவும் கச்சிதம்.
படத்ததில் ., "கல்லூரி " அகில் , சில சீன்க ளிலேயே வருகிறார். ஏதோ நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தில் நடித்திருப்பார் போலும் . பாவம். , பதவி, பணபலம் நிரம்பியவராக நாயகர் சுரேந்தரின் தந்தை கார்த்திகேயனாக நிழல்கள் ரவி , தாயாக சுதா, நாயகியின் அம்மாவாக கருத்தம்மா ராஜ ஸ்ரீ , , ஒரு சீன் சிசர் மனோகர் , கூடவே சுப்புராஜ் , கோவை செந்தில் , "சாட்டை"ரவி , "பாய்ஸ்"ராஜன்.. உள்ளிட்ட எல்லோரும் இயக்குனர் எதிர் பார்த்ததை செய்துள்ளனர். கார்த்திக் ராஜாவின் இசையில், பின்ணனி பிரமாதம். பாடல்கள் இசையில் வேறு சில படங்களில் முன்பு இடம் பிடித்த இளையராஜாவின்
" இளமை எனும் பூங்காற்று .... " , "என்ன என்ன கனவு கண்டாயோ சாமி ... " , ஆகிய இரண்டு ஹிட் பாடல்கள் முழுசாக எடுத்து ஆளப்பட்டிருப்பது கூடுதல் கவனம் ஈர்க்கிறது! படத்தொகுப்பாளர் கே . ஸ்ரீனிவாஸின் தொகுப்பு , இழுவை காட்சிகள் பெரிதாக இல்லாத பக்கா தொகுப்பு. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச் ஆட்டம். என்பது படத்திற்கு மேலும், பெரிய ப்ளஸ்! ராம் கே .சந்திரனின் இயக்கத்தில் ., பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு அதுவும் வசதி படைத்த பெற்றோருக்கு போலீஸ் அதிகாரி ரகுமான் சொல்லும் அட்வைஸ் உள்ளிட்ட இன்னும் பல யோசிக்க வைக்கும் விஷயங்கள் இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.
அதே மாதிரி ., இன்றைய இளைஞர்கள் ,"காதல் எனும் போர்வையில் காம வலையில் இளம் பெண்களை எப்படி ? எப்படியெல்லாம் .. வீழ்த்துகின்றனர் ..? என்பதையும் பளிச் என படம் பிடித்து காட்டியிருக்கும் விதத்தில் ., "பகடி ஆட்டம் " பக்கா ஆட்டமாக ஜொலிக்கிறது. ஆகமொத்தத்தில் "பகடி ஆட்டம் - பலேஆட்டம்!"