ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள காமெடியுடன், ஒரு நல்ல மெஸேஜ்ஜையும் சொல்லியிருக்கும் படம் தான் ‛ஜாலி எல்எல்பி-2'.
கதைப்படி, ஜகதீஷ்வர் மிஸ்ரா எனும் அக்ஷ்ய் குமார் லக்னோ கோர்ட்டில் வக்கிலாக உள்ளார். ஆனால் அவருக்கு வழக்குகள் தான் கிடைத்தப்பாடில்லை. என்றாவது ஒருநாள் ஒரு நல்ல வழக்கில் ஆஜராகி தானும், நல்ல வக்கில் என நிரூப்பிப்பேன் என்ற நம்பிக்கையோடு மனைவி புஷ்பா(ஹூமா குரேஷி) மற்றும் மகனுடன் வாழ்க்கையை நடத்துகிறார். அவர் நினைத்தபடியே ஒரு நாள் ஹினா சித்திக்(சயானி குப்தா), தன் கணவரை போலி என்கவுன்ட்டரில் கொன்ற போலீஸ் இன்பெக்டர் சிங்(குமுத் மிஸ்ரா) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். ஜெகதீஷ்வரும், ஹினாவின் வழக்கை ஏற்று நடத்துகிறார். இந்த வழக்கில் ஜெகதீ்ஷ்வருக்கு வெற்றி கிடைத்ததா..?, ஹினாவிற்கு ஒரு நல்ல தீர்ப்பு வந்ததா..? என்பதை கோர்ட்டில் நடக்கும் விஷயங்களை காமெடியாகவும், அசத்தலாகவும் விடையளிக்கிறது ஜாலி எல்எல்பி-2 படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை!
அக்ஷ்ய் குமார், முதன்முறையாக ஒரு வித்தியாசமான ரோலில் வக்கிலாக அருமையாக அசத்தியிருக்கிறார். அதிலும் தனக்கே உரிய நடிப்பில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.
அக்ஷ்ய்யின் மனைவியாக வரும் ஹூமா குரேஷி, அனு கபூர், சயானி குப்தா உள்ளிட்டவர்களும் தங்களது ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.
சவுரவ் சுக்லாவின் சர்ப்ரைஸ் காமெடி, ரசிகனை மேலும் சிரிக்க வைக்கிறது.
ஜாலி எல்எல்பி முதல்பாகத்தை இயக்கிய சுபாஷ் கபூர் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார். சந்தேகமே வேண்டாம், படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். குறிப்பாக கோர்ட்டில் நடக்கும் சம்பவங்களும், அதில் அக்ஷ்ய் பேசும் வசனங்களும் சூப்பர். சுபாஷ் கபூரின் இயக்கத்திற்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல்களுடன் கூடிய பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஒரு நல்ல கதையுடன் கூடிய ஒரு மெஸேஜ்ஜையும், கோர்ட்டில் நடக்கும் விஷயங்களை அச்சு அசலாகவும், அதை கலகலப்பாகவும் சொல்லியிருக்கும் விஷயத்தில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‛ஜாலி எல்எல்பி-2' - ‛ஒரே ஜாலி'