நடிகர்கள் ; துல்கர் சல்மான், ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன், முகேஷ், மனோபாலா, கொட்டாச்சி
இசை ; வித்யாசாகர
கதை ; இக்பால் குட்டிப்புரம
இயக்கம் ; சத்யன் அந்திக்காடு
கடந்த வருடம் துல்கர் நடிப்பில் வெளியான 'கம்மட்டிப்பாடம்' படத்தை தொடர்ந்து, எட்டு மாதங்கள் கழித்து வெளியாகியுள்ளது இந்தப்படம்.. பிரபல சீனியர் இயக்குனர் சத்யன் அந்திக்காடுவும் இளம் நடிகரான துல்கரும் இணைந்திருப்பதால் இந்தப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.. அதை இந்தப்படம் ஈடு செய்திருக்கிறதா..?
அப்பா-மகன் பாசம் தான் கதையின் மைய நூழிலை.. அதைவைத்து குடும்ப தோரணம் கட்டியுள்ளார்கள்.
திருச்சூரில் பிரபல தொழில் அதிபரான முகேஷின் இளையமகன் தான் துல்கர்.. அவரது சகோதர சகோதரிகள் நன்றாக செட்டிலாகிவிட, இவர் மட்டும் இன்னும் எம்.பி.ஏ படிப்பை முடிக்காமல் அப்பாவின் காசில் ஊரை சுற்றும் சுகவாசி.. தங்கையின் திருமணத்துக்கு கூட தாமதமாக வரும் பொறுப்பற்ற இளைஞன்.. கண்டிப்பு காட்டினாலும் அவர்மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறார் முகேஷ். இந்நிலையில் கோடீஸ்வர பெண்ணான அனுபமா பரமேஸ்வரனுடன் துல்கருக்கு காதலும் ஏற்படுகிறது...
திடீரென எதிர்பாராத விதமாக முகேஷின் ரியல் எஸ்டேட் தொழில் நட்டப்பட, வாடிக்கையாளர்களின் நெருக்கடியால் ஒரேநாளில் அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வருகிறார் முகேஷ்.. மற்ற மகன், மகள்கள் அவரை விட்டு ஒதுங்க, அவரை அழைத்துக்கொண்டு தனது நண்பன் ஊரான திருப்பூருக்கு வருகிறார் துல்கர்.. அனுபமாவுடனான காதலும் இதனால் முறிகிறது.
கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்த இருவரும் திருப்பூரில் சாமான்ய வாழக்கைக்கு மாறுகின்றனர்.. துல்கர் தினசரி வேலைக்கு ஓட, மகனுக்கு சமையல் செய்து போடுகிறார் முகேஷ். இந்நிலையில் மனோபாலா மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரின் நட்பு இவர்களுக்கு கிடைக்கிறது.. வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் துல்கரையும் முகேஷையும் தன்னிடமே வைத்துக்கொண்டதா அல்லது அவர்களது சோகத்தை சுகமாக மாற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததா என்பது க்ளைமாக்ஸ்.
சத்யன் அந்திக்காடு படங்கள் என்றாலே குடும்பம், சென்டிமென்ட் கலந்த கலவைதான்.. இந்தப்படத்திலும் அதற்கு எந்தக்குறையும் இல்லை. ரொமான்ஸ், அடிதடியை குறைத்துவிட்டு பொறுப்புள்ள இளைஞன் கதாபாத்திரத்திற்குள் தன்னை புகுத்திக்கொண்டுள்ளார் துல்கர்.. அப்பாவிடம் பைக் வாங்கித்தர கெஞ்சுவது, அவர் போனால் போகிறது என பணம் தராமல், பைக்கை வாங்கிவிட்டு பில்லை மட்டும் அனுப்பு என ஒகே சொன்னதும் பதினெட்டு லட்ச ரூபாய் பைக்கை வாங்கிவிட்டு பில்லை அப்பாவுக்கு அனுப்புவது, லைசென்ஸ் இல்லாமல் பஸ் ஓட்டுவது என முதல் பாதி முழுக்கு துல்கரிடம் இளமை துள்ளுகிறது.. ஆனால் பிற்பாதி முழுவதும் தந்தையை காத்த தனயன் ரேஞ்சில் கடின உழைப்பாளியாக மாறினாலும் அதே இளமை துள்ளலுடன் வலம் வரும்போதும் நம்மை ரசிக்க வைக்கிறார்.
இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு துல்கரை காதலிப்பது, டூயட் பாடுவது என வேலை குறைவுதான்.. ஆனால் இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்தாலும் படம் முழுதும் ஹீரோவுக்கு இணையாக கூடவே மெச்சூர்டான கேரக்டரில் பயணிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நம் தமிழ்ப்படங்களை விட இதில் ஒரு பங்கு அழகு தூக்கலாகவே தெரிகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்..
துல்கருக்கு இணையான இன்னொரு ஹீரோ என்று சொல்கிற அளவுக்கு ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை அவரது தந்தையாக முகேஷின் இருப்பு இருந்துகொண்டே இருக்கிறது.. கோடீஸ்வரனாக இருந்தாலும் அந்த மமதையை தன் மேல் ஏற்றிக்கொள்ளாமல் எளிமையாக இருப்பது, சொத்துக்கள் கைவிட்டு போனபின்னும் கூட அதுகுறித்து கவலை கொள்ளாமல் மகனை ஊக்கப்படுத்தி தைரியம் அளிப்பது என இந்தப்படத்தில் சென்டிமென்ட், காமெடி என இரண்டிலும் வெரைட்டி காட்டியுள்ளார் முகேஷ்..
திருப்பூரை சேர்ந்த தமிழர் கதாபாத்திரமாகவே அறிமுகமாகும் மனோபாலா சர்ப்ரைஸ் தருகிறார். முழுக்க முழுக்க தமிழிலேயே பேசினாலும் அவ்வபோது மலையாளத்திலும் பேசி கிச்சுகிச்சு மூட்டுகிறார். துல்கரின் நண்பராக வரும் ஜேக்கப் கிரிகேரி அவ்வளவு மோசடி செய்தபின்னும் துல்கர் அவரை மன்னித்து ஏற்பது நட்பின் அடையாளம்.
துல்கரின் அக்காவாக வருபவர் காதலுக்கு உதவுவதும், துல்கரின் அண்ணியாக வருபவர் துல்கரின் முன்னேற்றத்துக்கு உதவுவதும் டச்சிங்கான காட்சிகள். முகேஷின் மச்சானாக வரும் இன்னொசன்ட் தனது மனைவியின் மேயர் பதவியை பயன்படுத்தி, லஞ்சம் வாங்கும் டெக்னிக்குகள் எல்லாம் ரசிக்கும்படியாகவே இருகின்றன திருப்பூரில் பனியன் கம்பெனி மேனஜராக வரும் கொட்டாச்சியை பார்க்கும்போது அட இவரும் மலையாள சினிமாவுக்குள் அடியெடுத்து விட்டாரா என்கிற ஆச்சர்யம் ஏற்படாமல் இல்லை. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம் திருச்சூர் டூ திருப்பூர் என்கிற விதமகா கதையை இரு பாதியாக பிரித்துள்ள இயக்குனர் சத்யன் அந்திக்காடு தனது பாணியில் உணர்ச்சிக்கலவையாக இந்தப்படத்தை தர முயற்சி செய்துள்ளார்.. ஆனால் கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ஒரு படத்தின் அப்பட்டமான சாயல் படத்தின் கதையிலும் காட்சிகளிலும் தெரிகிறதே இதை எப்படி இயக்குனரும் துல்கரும் கவனிக்காமல் போனார்கள் என்கிற கேள்வி படத்தின் இடைவேளையில் இருந்து க்ளைமாக்ஸ் வரை நம்மை விடாமல் துரத்தி வருகிறது..
நீங்கள் எந்த லாஜிக்கையும் செக் பண்ணாதவர் என்றால் ஜாலியாக பார்க்கலாம் ஒருமுறை.