நயன்தாரா, கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் அமானுஷ்ய சக்திகள் நிரம்பிய ஒரு ஓல்டு மாடல் கார் நாயகராக நடிக்க நேமிசந்த் ஜபக், வி.ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் தாஸ் இராமசாமி இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் "டோரா".
ஒரு காலத்தில் தன் தந்தை செய்த உதவியால் பல கார்களுடன் கால்டாக்ஸி நிறுவனம் வைத்து நடத்தும், தன் அத்தையும், அத்தை வீட்டுக்காரரும், தனக்கும், தன் தந்தைக்கும் செய்த அவமானத்தால் வெகுண்டெழும் நயன்தாரா, தானும் ஒரு பெரும் கால் டாக்ஸி ஓனராக வேண்டும் என்று தன் அப்பா தம்பி ராமைய்யா முன் ஒற்றை காலில் நின்று, தங்களிடம் இருந்த காசுக்கு ஒரு ஒல்டு மாடல் கார் வாங்கி ஓட விடுகிறார்.
ஆனால் அந்தக் காருக்கும் அவருக்கும் ரொம்பவும் நெருக்கமான ஒரு சிறுமியின் ஆவி, தன்னை கெடுத்து, அடித்துக் கொன்றவர்களை நயன் வாயிலாகவும், தான் வளர்த்து அந்த கொடூரர்களால் கொலை செய்யப்பட்ட நாயின் ஆன்மாவாயிலாகவும், அந்தக் காரின் உதவியுடன் எப்படி? துரத்தி, துரத்தி கொல்கிறது என்பதுதான் "டோரா" படத்தின் கதையும், களமும்.
பவளக்கொடியாக நயன்தாரா, பளிச்சென்று இருக்கிறார். "நச்" என்று நடித்தும் இருக்கிறார். ஆனால், சொந்தக் குரலில் பேசுகிறேன் பேர்வழி என வாயில் ஏதோ வைத்துக் கொண்டு பேசுவது போல் பேசுவது சற்றே படம் பார்க்கும் ரசிகனுக்கு அயர்ச்சியை தருவதை மட்டிலும் அம்மணி நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். ஆனாலும், "குடிக்கத் தருவோம் பழரசம்... எங்கள் குவாலிட்டியில் இல்லை சமரசம்" என்றபடி அவர் அடிக்கும் "பன்ச்" கள் ஹாசம்.
அழகிய நயனின், அசத்தல் அப்பாவாக தம்பி ராமையா சில இடங்களில் மட்டும் சிரிக்க வைத்து, பிற இடங்களில் பேசியே கொல்கிறார். இன்ஸ்ஸாக வரும் ஹரீஸ் உத்தமனுக்கு நயனுடன் ஜோடி போட வாய்ப்புக் கிடைத்தும் அதை விடுத்து, நடு இராத்திரி, நயன் வீட்டு சுவர் ஏறி குதித்து தூங்கி கொண்டிருந்த நயனை இழுத்து வந்து ஸ்டேஷனில் வைத்து மிரட்டி உருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். (பாவம் அவர் என்ன செய்வார்? இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்) காமவெறி பிடித்த கொள்ளையர்களாக கொடூரனாக கொலைகாரர்களாக வரும் சுலீலி குமார், ஷான், வெற்றி உள்ளிட்டோர் பயமுறுத்தியிருக்கின்றனர். பேபி யோக்தாவிற்கு எந்த குழந்தைக்கும் நேரக் கூடாத கொடூரம் நேர்ந்து இறந்து போய் பரிதாப பட வைக்கிறார்.
கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பையும், படத்தில் இடம்பெறும் ஆன்மா இன்னும் கொஞ்சம் கத்திரிப் போட்டு கரெக்ட் செய்திருக்கலாம்.
தினேஷ் கிருஷ்ணன்.பி-யின் ஒளிப்பதிவில் ஆவி, ஆன்மாக்கள் மிரட்டும் காட்சிகள் களேபரம். விவேக் - மெர்வின் இசை இப்படக்கதைக்கு ஏற்ற மிரட்டல்.
தாஸ் இராமசாமியின் எழுத்து, இயக்கத்தில் தம்பி ராமைய்யாவிற்கு நயன், ஆப் - ஆப்பு விளக்கம் தரும் காட்சிகள் உள்ளிட்டவையும் பழைய காரில் சிறுமியின் ஆன்மாவும், அவர் வளர்த்த நாயின் ஆவியும் குடியிருக்கும் காட்சிகளும் கிராபிக்ஸ் மிரட்டல்களும் ரசனை. ஆனால், சாலையில் நயன் கார் ஓட்டிச் சென்று செய்யாமல் செய்யும் முதல் கொலையின் ரோட் சைட் காமிரா பதிவுகளை அழிக்கும் ஆன்மா, தவறி விழுந்த அக்கார் ரேடியேட்டர் மூடியை மட்டும் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்காது திராட்டில் விட்டிருப்பதும், நயனே தனது கார் டயர் தடத்தை மாற்ற வேறு டயர் மாற்றியதாக போலீஸில் சொல்லி உளறுவதும் அந்த ஓல்டு மாடல் காரில் இருக்கும் சிறுமியின் ஆன்மா அத்தனை வேலைகளையும் செய்யாதா? எனக் கேட்கத் தூண்டும் விதத்தில், லாஜிக்காக இடிக்கிறது! இது மாதிரி, லாஜிக் குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், "டோரா - ஒரு வேளை, நயன்தாராவிற்காக ரசிகர்களுக்கு பிடிக்கலாம். (ஆமாம், தமிழ் சினிமா இயக்குனர்களே, சமூகத்தில் நடக்கிறது, சமூகத்தில் நடக்கிறது... என்று இன்னும் எத்தனை படங்களில் தான் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கதை செய்வீர்கள்.?!)
மொத்தத்தில், "டோரா - பிடிக்கும் தாரா ரசிகர்களுக்கு பிடிக்கும்!"