தெலுங்கு திரை உலகில் தனது 30வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் பிரபல நடிகர் வெங்கடேஷின் 70வது திரைப்படமாக பாபு பங்காராம் வெளிவந்துள்ளது. ஏற்கனவே துளசி, லக்ஷ்மி போன்ற தெலுங்கு படங்களில் வெங்கடேஷுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா, பாபு பங்காராம் படத்தில் மீண்டும் வெங்கடேஷுடன் இணைந்துள்ளார். இது போன்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள பாபு பங்காராம் ரசிகர்களை எவ்விதம் கவர்ந்துள்ளது என பார்ப்போம்.
கிருஷ்ணா எனும் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வரும் வெங்கடேஷ் பிறருக்கு உதவுவதையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருகின்றார். சைலஜாவாக வரும் நாயகி நயன்தாராவின் தந்தை சாஸ்திரி, சட்டத்திற்கு புறம்பான தீய செயல்களில் ஈடுபடுவதை அறிந்துகொண்டு அவரை கையும் களவுமாக பிடிக்க முற்படுகிறார் கிருஷ்ணா. சைலஜாவின் தந்தையான சாஸ்திரிக்கு பின்னால் யாரோ அவரை ஆட்டிவைப்பத்தையும் கிருஷ்ணா அறிகிறார்.
தன்னை போலீஸாக காட்டிக்கொள்ளாமல் சாதாரணமானவனாக சைலஜாவிடம் அறிமுகமாகும் கிருஷ்ணாவிற்கும் சைலஜாவிற்கும் உறவு பலப்பட்டு காதல் மலர்கிறது. இந்நிலையில் கிருஷ்ணா போலீஸ் என்பதும் தன் தந்தையை கைது செய்யவே கிருஷ்ணா தன்னிடம் நெருங்கி பழகியதும் சைலஜாவிற்கு தெரியவர மோதல் வெடிக்கின்றது.. கிருஷ்ணா சைலஜாவின் தந்தையை கைது செய்தாரா? சைலஜாவை கரம் பிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதிக் கதை
நகைச்சுவை நாயகனாக வெற்றி கண்ட வெங்கடேஷ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தனக்கே உரித்தான நகைச்சுவை வேடத்தை தேர்ந்தெடுத்து அதை சிறப்பாகவும் செய்து முடித்துள்ளார். வயதிற்கு ஏற்ப கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த வெங்கடேஷ் இம்முறை மீண்டும் இளமையான ஃபிட்டான போலீஸாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். படத்தின் முதல் பாதி முழுவதும் தனது பாவனைகளால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வெங்கடேஷ், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் முகம் காட்டி ரசிக்க வைக்கின்றார். அழகால் வசீகரித்த நயன்தாரா, வெங்கடேஷ் மற்றும் பிரித்வியுடனான நகைச்சுவைகாட்சிகளிலும் கவனிக்க வைக்கின்றார்.
கண்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாடல்களில் நயன்தாரா வெங்கடேஷுடன் பட்டும்படாமலும் ரொமான்ஸ் செய்வது நன்றாகவே தெரிகிறது. பலே பலே மகாதேவோ படத்தில் வெற்றி கண்ட இயக்குனர் மாருதி வழக்கமான தனது ஃபார்முலாவை மாற்றாதது தான் சலிப்பை ஏற்படுத்துகிறது. வெங்கடேஷ் பிரித்வி இடையேயான நகைச்சுவை காட்சிகள் பலே பலே மகாதேவோ படத்தை நிணைவுபடுத்துவது பலவீனம்.
பலமுறை பார்த்து சலித்த கதையை கையில் எடுத்த மாருதி, அதை விறுவிறுப்பான திரைக்கதையில் மாற்ற முற்பட்டு தோல்வி அடைந்துள்ளார். பிரம்மானந்தம் மற்றும் பூஷ்னி நகைச்சுவைக் காட்சிகளுக்கு இன்னும் மாருதி உழைத்திருக்கலாம். எளிதாக யூகிக்க முடிந்த வகையில் காட்சி அமைப்புகளும் திக்கற்று செல்லும் திரைக்கதையும் படத்திற்கு பெரும் பலவீனம்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் மிகவும் ஆறுதலாக அமைக்கின்றது. படத்தின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். குறிப்பாக பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியுள்ளார். வெங்கடேஷை இரண்டு விதமான கதாபாத்திரங்களில் பிரதிபலிப்பதில் மாருதியின் மெனக்கெடல் தெரிகிறது. முதல் பாதியில் கோட்டை விட்ட இயக்குனர் இரண்டாம் பாதி முக்கியமாக இறுதிக்காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெங்கடேஷ் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் ஹீரோவாக திரையில் மிளிர்கின்றார். இருப்பினும் மாருதியின் முந்தைய படத்தின் வெற்றியும், வெங்கடேஷ் எனும் பெரிய நடிகரும் இருப்பதால் அதிகமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
மொத்தத்தில், ‛‛பாபு பங்காராம் - அய்யோ அய்அய்யோ''