நடிகர் நவாசுதீன் சித்திக் நடிப்பில் வெளியாகியுள்ள சைக்கோ த்ரில்லர் படம் ‛‛ராமன் ராகவ் 2.0''. அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு வந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
1960களில் மும்பையில் சைக்கோ கொலைகாரனாக இருந்த ராமன் ராகவ்வின் கதை தான் படத்தின் ஒன்-லைன் ஸ்டோரி. கதைப்படி ராமண்ணா எனும் நவாசுதீன் சித்திக், தொடர்ந்து தான் தான் கடவுள் என்ற பெயரில் வரிசையாக தொடர் கொலைகள் செய்கிறார். இந்த கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ராகவன் எனும் விக்கி கவுசல் நியமிக்கப்படுகிறார். விக்கியோ போதை பழக்கத்திற்கு அடிமையானவர். ஆனபோதும் கொலையை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்குகிறார். ஒருக்கட்டத்தில் ராமண்ணா தான் கொலைகளை செய்கிறார் என்பதை ராகவன் கண்டுபிடிக்க அவரை கைது செய்யும்போது அவரால் முடியவில்லை. காரணம் ராகவனின் சில ரகசியங்களை ராமண்ணா தெரிந்து வைத்திருக்கிறார். அது என்ன ரகசியம், ராகவன், ராமண்ணாவை கைது செய்தாரா.?, சட்டத்திற்கு முன் அவரை நிறுத்தினாரா? என்பது ராமன் ராகவ் 2.0 படத்தின் பரபரப்பான மீதிக்கதை.
சைக்கோ கொலையாளி ராமண்ணாவாக, நவாசுதீன் சித்திக் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியொரு நடிப்பு அவரிடத்தில் தெரிகிறது. படத்தின் பெரிய பலமே அவரின் நடிப்பு தான். போலீஸ் அதிகாரியாக வரும் விக்கி கவுசல், எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை. அறிமுக நடிகையான சோபிதா துலிபலா அறிமுக நடிகை என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப், வழக்கம்போல் தன்னுடைய பாணியில் பக்காவாக இயக்கியிருக்கிறார். அவருக்கு பக்கபலமாக இருட்டிலும் மிளிரும் ஜெய்யின் ஒளிப்பதிவு, அதற்கு பக்காவான ஆர்த்தி பஜாஜின் படத்தொகுப்பு, ராம் சம்பத்தின் இசை மற்றும் பின்னணி இசை எல்லாம் படத்திற்கு பலமாகவே அமைந்துள்ளது. ஆனால் அனுராக்கின் திரைக்கதை சுமார் ரகம் தான்.
ஒட்டுமொத்தமாக ராமன் ராகவ் 2.0 படத்தை பார்க்கும்போது சிறப்பாக தான் இருக்கிறது. ஆனால் ரசிகர்களை என்டர்டெயின்ட் பண்ணும் விஷயங்கள் படத்தில் எதுவும் இல்லாது படம் பார்க்கும் ரசிகனை சலிப்படைய செய்கிறது. இருந்தாலும் நவாசுதீனின் அற்புதமான நடிப்பிற்கே ராமன் ராகவ் 2.0 படத்தை ஒருமுறை பார்க்கலாம்.