நடிப்பு - மகாபா ஆனந்த், சூசா குமார் மற்றும் பலர்
இயக்கம் - மார்ட்டின்
இசை - தரண்
தயாரிப்பு - மோகிதா சினி டாக்கீஸ்
வெளியான தேதி - 4 ஜனவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்
ரேட்டிங் - 1/5
2019ம் ஆண்டின் ஆரம்பமே இவ்வளவு சோதனையாக வந்திருக்க வேண்டாம். இன்று(ஜன.,4) வெளியான இரண்டு படங்களில் ஓரளவிற்குத் தெரிந்த முகமாக மகாபா ஆனந்த் நாயகனாக நடித்த 'மாணிக்' படம் வெளிவந்திருக்கிறது.
முழுவதும் நகைச்சுவையாக எடுக்க வேண்டும் என்று நினைத்து பல காட்சிகளில் நம்மைச் சோதிக்கிறார் அறிமுக இயக்குனர் மார்ட்டின். 'ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து' மாதிரியான ஒரு படத்தைக் கொடுக்க முயற்சித்து அதில் கொஞ்சமே கொஞ்சம் வெற்றி பெற்றிருக்கிறார்.
அடல்ட் காமெடியாகவும் இல்லாமல், வழக்கமான காமெடியாகவும் இல்லாமல் எப்படி கொடுக்கலாம் என பல காட்சிகளில் இயக்குனர் குழம்பியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் நகைச்சுவை என நினைத்து எடுத்திருப்பது நமக்கு கொஞ்சம் கொடுமையாகவே இருக்கிறது. அதிலும் தாதா அருள்தாஸ், அவருடன் இருப்பவர்களையே மிகச் சாதாரணமாகக் கொன்று குவிக்கிறார். அப்புறம் அவரிடம் எப்படி அடியாட்கள் இருப்பார்கள், எப்படி புதிதாக வந்து சேருவார்கள்.
பாட்டி ஆதரவில் வளர்ந்த மகாபா ஆனந்த்தின் பாட்டி, சிஎஸ்கே அணியை ஐபிஎல்லில் இருந்து நீக்கியதால் மாரடைப்பு வந்து இறந்து போகிறார். சென்னைக்கு வந்து பணம் சம்பாதித்து, சென்னை ஐபிஎல் அணியை வாங்க வேண்டும் என நண்பன் வாட்சனுடன் புறப்படுகிறார் ஆனந்த். வந்த இடத்தில் அவருக்கிருக்கும் சக்தியைப் பற்றி ஒரு சாமியார் கூறுகிறார். ஆனந்த், யாரைக் காதலிக்கிறாரோ அவர்களது அப்பா இறந்துவிடுவார்கள் அதுதான் அந்த சக்தி. இதனிடையே, கட்சித் தலைவர் ஒருவரை ஆனந்த் கொன்றுவிடுகிறார்கள். அவரைக் கொன்றது ஆனந்த் தான் எனத் தெரிந்த தாதா அருள்தாஸ், ஆனந்தை வேறு ஒரு அரசியல் தலைவரைக் கொல்லச் சொல்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஆண்டின் துவக்கமே கதையே இல்லாத ஒரு படத்தைப் பார்த்தால் எப்படியிருக்கும். ஒரு படம் பார்க்கும் உணர்வே இல்லாமல், எதோ டிவி அல்லது யு டியூப் காமெடி நிகழ்ச்சியைப் பார்ப்பது போல இருக்கிறது படம்.
மகாபா ஆனந்த் எப்படியெல்லாமோ முயற்சித்து சிவகார்த்திகேயன் போல நடிகராக வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால், அவருக்கு இந்தப் படத்தில் வருவது போலவே ராசி சரியில்லை போலிருக்கிறது. கொஞ்சம் காமெடி வருகிறது, அதை வைத்துக் கொண்டு நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் அவர் நினைத்தது நடக்கலாம்.
படத்தின் இரண்டாவது ஹீரோவாக வாட்சன். ஆனந்த் கூடவே படம் முழுவதும் வருகிறார். கிடைக்கிற சந்தர்ப்பத்தில் நடித்துத் தள்ளுகிறார்.
படத்தின் நாயகியாக சூசா குமார். அவருக்கு காட்சிகள் மிக் குறைவு. அவருடைய குடும்பப் பின்னணியைக் கூட இரட்டை அர்த்த வசனக் காட்சிகளால் கேலிக் கூத்தாக்குகிறார்கள்.
வித்தியாசமான டார்க் காமெடி வில்லன் என அருள்தாசிடம் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அவரும் காட்சிக்குக் காட்சி நடித்துத் தள்ளுகிறார்.
தரனின் இசையில் பாடல்கள் எதுவும் சரியில்லை. காட்சிகளில் அழுத்தம் இருந்தால் தானே அவரும் பின்னணி இசையில் திறமையைக் காட்ட முடியும் அதற்கும் வழியில்லை.
இந்த புது வருடத்திலாவது இம்மாதிரியான படங்கள் வருவது குறைந்தால் சினிமாவுக்கு நல்லது.
மாணிக் - பேனிக் (Panic)