நிதின் மற்றும் சமந்தாவின் நடிப்பில், திரிவிக்ரம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளி வந்திருக்கும் திரைப்படம் தான் 'அ.ஆ'. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அ.ஆ எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என்று பார்ப்போம்.
செல்வந்தர்களான நரேஷ் - நதியா தம்பதியினரின் மகள் அனுஷ்யா ராமலிங்கம்-ஆக சமந்தா. இவர்களது குடும்பத்தில் எல்லாம் நதியா வைத்தது தான் சட்டம். ஒரு பணக்கார வீட்டோடு சமந்தாவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார் நதியா. எல்லா படத்தையும் போல திருமணத்தில் சமந்தாவிற்கு இஷ்டம் இல்லை. இதை அறிந்த நரேஷ் அவளை அத்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.
அங்கே சமந்தா நிதினை(ஆனந்த் விஹாரி) சந்திக்கின்றார், அப்புறம் என்ன காதலும் கொள்கிறார். கதையின் திருப்பம் இப்போது தான் வருகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நிதின் அனுபமா பரமேஸ்வரனை மணம் முடிக்க ஏற்பாடு நடைபெறுகிறது. இதில் சமந்தா எப்படி நதியாவை சமாளித்தார், மேலும் தன் காதலனை எப்படி கரம் பிடித்தார் என்பதை குடும்பத்துடன் பார்க்கும் படி அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் தரம் நிச்சயம் அதை கவனிக்க வைக்கிறது. இம்முறையும் ஒரு குடும்ப படத்தை கொடுத்து தனது மேஜிக்கை செய்து காட்டியிருக்கிறார் இயக்குனர் திரிவிக்ரம். நிதினும் அருமையாக நடித்திருக்கிறார். அதுவும் படத்தின் இறுதிகாட்சிகளிலும் சமந்தாவுடனான காட்சிகளிலும் பிரமாதபடுத்தியிருக்கிறார்.
படத்தின் கதை பெரிதும் சார்ந்திருப்பது சமந்தாவைத்தான், அவருடைய பார்வையில் தான் கதை நகர்கிறது. அதற்கு ஏற்றார் போல் சமந்தாவும் அழகால் வசீகரித்து நடிப்பில் தடம் பதித்து மனதில் இடம் பிடித்து விடுகின்றார். ராவ் ரமேஷ் தனக்கு கொடுக்கப்பட்ட குணச்சித்திர கதாபாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்படியாக முதல் பாதி ரசிக்கும்படியும், அழகான பாடல் காட்சிகளோடும் நகர்கிறது.சற்றே அலைபாயும் திரைக்கதைதான் இரண்டாம் பாதியின் பலவீனம். பாவம் பார்க்காமல் சில காட்சிகளை வெட்டியிருந்தால் இன்னும் படம் நன்றாக வந்திருக்கும். படத்தின் வேகமும் கூடியிருக்கும்.
எளிமையான காதல் கதையை வண்ணமயமாக காட்சிப்படுத்திய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராடியாக வேண்டும். மிக்கி ஜே மேயரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். எதிர்பார்த்த்து போலவே த்ரிவிக்ரம் அ.ஆ படத்தை ரசிக்கும் படி தந்திருக்கிறார், எளிமையான கதைதான், இருந்தும் குடும்பத்துடன் தாரளமாக பார்க்கலாம்.
மொத்தத்தில் , ‛‛அ.ஆ - காதல் சித்திரம்''