நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, அபர்ணா கோபிநாத், சுதீர் காரமணா, மாஸ்டர் ஆகாஷ்
டைரக்சன் : ரோஷன் ஆண்ட்ரூஸ்
மும்பை போலீஸ், ஹவ் ஓல்டு ஆர் யூ மற்றும் தமிழில் 36 வயதினிலே என தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் படம் தான் இந்த 'ஸ்கூல்பஸ்'.
அப்பர் மிடில்கிளாஸ் தம்பதியான ஜெயசூர்யா-அபர்ணா கோபிநாத் ஆகியோரின் பையன் மாஸ்டர் ஆகாஷ்.. எட்டாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு துறுதுறு தங்கையும் இருக்கிறாள். பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள தேன்கூட்டில் இருந்து தேனெடுத்து குடிக்க அவனுக்கு ஆசை. இதற்காக உடன் படிக்கும் நண்பனுடன் வகுப்பு இடைவேளை நேரத்தில் தேனெடுக்கும் முயற்சியில் ஈடுபடும்போது தேனீக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவமனை செல்லும் நிலைக்கு ஆளாகிறான் நண்பன்.
இதனால் ஆகாஷின் மீது கோபமான பள்ளி நிர்வாகம் பெற்றோரை அழைத்து வருமாறு ஆகாஷிடம் கூறுகிறது.. ஆனால் தந்தையின் கண்டிப்புக்கு பயந்து, அதை மறைத்து, தனது பெற்றோர் செல்போன்கள் மூலமாகவே, அவர்கள் வெளியூர் சென்றதாக பொய்த்தகவல் அனுப்பிவிட்டு இரண்டு நாட்கள் தங்கையையும் அழைத்துக்கொண்டு ஊரை சுற்றுகிறான் ஆகாஷ். இரண்டாவது நாளின் இறுதியில் ஆகாஷின் பெற்றோருக்கு விஷயம் தெரியவர அவர்கள் இவனை தேடி வருகிறார்கள்.. இதனால் மேலும் பயந்துபோன ஆகாஷ், தங்கையை விட்டுவிட்டு தான் மட்டும் தப்பிக்கிறான்.
போலீஸ் அதிகாரியான குஞ்சாக்கோ போபன் விசாரணையில், ஆகாஷ் அவனது வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணின் மகன் மற்றும் இன்னொரு சிறுவனுடன் சேர்ந்து நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுக்குள் சென்றதாக தெரிய வருகிறது.. கொடிய விலங்குகள் வாழும் அந்த காட்டுக்குள் சென்றால் உயிர் பிழைப்பது கடினம் என்கிற வன ஆராய்ச்சியாளர், சிறுவர்கள் காட்டுக்குள் சென்றதை தனது கேமராவில் பதிவான காட்சியை வைத்து உறுதிப்படுத்துகிறார். சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டார்களா என்பது க்ளைமாக்ஸ்.
இன்றைய சூழலில் பள்ளிக்குழந்தைகள் தங்களை அறியாமல் துறுதுறுப்புடன் செய்யும் சில செயல்கள் விபரீதத்தை நோக்கி சென்றால் அதை கல்லூரி நிர்வாகமும் பெற்றோரும் அணுகும் கடுமையான விதம் குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்பதற்கு ஒரு சாம்பிள் தான் இந்தப்படம்.. தனது குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும் என கண்டிப்பு காட்டுகின்ற தந்தைகள், அதனாலேயே தங்களது குழந்தைகள் தாங்கள் செய்த சரி, தவறுகளை தங்களிடம் மனம்விட்டு சொல்லவருவதற்கான தடையை ஏற்படுத்துவதுடன், போய்பேசும் சூழலுக்கு அவர்களை தள்ளுவதையும் ஜெயசூர்யா தனது தந்தை கதாபாத்திரம் மூலம் பிரதிபலித்திருக்கிறார்.
பாசமான, ஆனால் கணவரின் பிசினஸ் நடவடிக்கைகளால் தானும் குழந்தைகளை கவனிக்க முடியாத நிலைக்கு ஆளாவதை இன்றைய பல தாய்மார்களின் பிரதிநிதியாக தனது கதாபாத்திரத்தின் மூலம் உணர்த்துகிறார் அபர்ணா கோபிநாத். விசாரணையில் மென்மையான அணுகுமுறையை கையாள முயற்சிக்கும் இளமைத்துடுக்கும், சற்றே ஆர்வக்கோளாறும் கலந்த ஒரு போலீஸ் அதிகாரியாக வரும் குஞ்சாக்கோ போபனுக்கு வெறும் தேடுதல் வேட்டை மட்டுமே என்பதால் வேலை குறைவே..
சிறுவன் ஆகாஷ் தனது குறும்புத்தனத்தால் நம்மை ரசிக்கவைத்து, இடைவேளைக்குப்பின் நம்மை பதைபதைக்கவும் வைத்துவிடுகிறான். ஒரு பள்ளிக்கூடம், கண்டிப்பான தந்தை, தண்டனை கிடிக்கும் என்கிற பயத்தால் பள்ளிக்கு செல்வதை தவிர்க்க முயலும் மாணவன் என நகர்கிற கதை, அதன்பின் சம்பந்தமில்லாமல் காட்டுக்குள் நகரும் த்ரில்லராக மாறும்போது நகத்தை கடித்தபடி இருக்கை நுனியில் நம்மை உட்காரவைத்தாலும் திரைக்கதையில் தனது பாதையில் இருந்து விலகியதாகவே தெரிகிறது.
ஆனால் குழந்தைகள், தங்களை மிரட்டாத கல்விமுறை, பெற்றோரின் அன்பான அணுகுமுறை, நாளை என்ன நடக்குமோ என்கிற பயம் என எதுவும் இல்லாமல், காட்டில் வாழும் மிருகங்கள், பறவைகள் போல சுதந்திரமாக வாழவே விரும்பவதையும், அவர்களை கவனமாக கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் கானகத்தை ஒரு குறியீடாக இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் பயன்படுத்தியுள்ளாரோ என்றே தோன்றுகிறது.
வழக்கம்போல பெற்றோர்களுக்காக நடத்தப்பட்டுள்ள இன்னொரு படம் தான் இந்த 'ஸ்கூல்பஸ்'