தினமலர் விமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, சூப்பர் - டூப்பர் ஹிட் அடித்த மனிதன் பட டைட்டிலில் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகராக நடித்து தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் பேனரில் தயாரித்தும் இருக்கும் திரைப்படம். ஜாலி எல்எல்பி எனும் இந்திப் படத்தின் அச்சு அசல் தமிழ் ரீ-மேக் இது!
உதயநிதி ஸ்டாலினுடன் ஹன்சிகா மோத்வானி, காக்கா முட்டை" ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாரவி, பிரகாஷ்ராஜ், மயில்சாமி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும் நடித்து வெளிவந்திருக்கும் இப்படத்தை ஜீவா நடித்த "என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய ஐ.அஹமத் இயக்கி இருக்கிறார்.
கதைப்படி, கோவை - பொள்ளாச்சி பகுதி நீதிமன்றங்களில் சரியாக வாதிடும் திறமையற்ற இளம் வக்கீலாக வாழ்க்கை நடத்த முடியாது, காமெடி பீஸ் ஆகத்திகழ்கிறார் சக்திவேல் எனும் உதயநிதி ஸ்டாலின். அதனால் தன் முறைப் பெண் ப்ரியா - ஹன்சிகா மோத்வானியின் காதலையும் மனமுவந்து ஏற்க முடியாமல் தவிக்கிறார். சரியான வாதத்திறமையில்லாததால் காதலி முன், எண்ணற்ற ஏளனத்தை எதிர்கொள்ளும் சக்தி - உதயநிதி, ஒரு கட்டத்தில், கோவை பொள்ளாச்சி கீழ்கோர்ட்டே வேண்டாம்... சென்னை ஐகோர்ட்டில் ஒரு பெரும் லாயராகி விட்டு வருகிறேன் பேர்வழி... என சூளுரைத்து விட்டு பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறுகிறார்.
சென்னை வந்து இறங்கி சில மாதங்கள், சக வக்கீல்கள் விவேக் - செல் முருகன் அண்ட் கோவினருடன் தங்கி, வயிற்றுபசியாற்றி, வாடகை தந்து வாழ்க்கை நடத்தவே கஷ்டப்படும் உதயநிதி, நீதித்துறையில் தான் விரும்பிய லட்சியத்தை அடைந்தாரா.? ஊரில் இவருக்காக காத்திருக்கும் காதலி கரம் பற்றினாரா? என்பது தான் மனிதன் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.
கேஸுக்கு அலையும் வக்கீலாகவும், பின், மாஸூக்கு சமூக அக்கறையுடன் ஒரு பொது நல வழக்குப்போட்டு இந்தியாவே கொண்டாடும் லாயர் ஆதிசேஷனன எதிர்த்து அலட்டலில்லாமல் ஜெயிக்கும் நியாயவான் சக்தியாக, இளம் வக்கீலாக உதயநிதி ஸ்டாலின் கச்சிதம்! இது நாள் வரை உதயநிதி நடித்தப் படங்களிலேயே
இந்தப் படத்தில் தான் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர் எனும் அளவிற்கு உதய் இயல்பாக, நன்றாக நடித்திருக்கும் படம் தான் மனிதன் என்றால் மிகையல்ல.
ப்ரியா - ஹன்சிகாவுக்கும் உதயநிதிக்குமான காதலும், மீடியா பர்ஸன் ஐஸ்வர்யா ராஜேஷுக்குமான புரிதலும், இருவருடனான நாயகரின் இணக்கமும், சுணக்கமும் கூட ரசனை!
ப்ரியாவாக ஹன்சிகா மோத்வானி வழக்கம் போலவே வழுவழு பொம்மை டைப்பில் சிரித்து சிரித்து ரசிகனை சிறையிலிடுகிறார். கூடவே உதயநிதியையும்...
செய்தி சேனல் நிருபர் ஜெனிபராக ஜஸ்வர்யா ராஜேஷ் அழகு, அறிவு நிருபராக உதயநிதிக்கு உதவியிருக்கிறார்.
உதயநிதியை விட இந்தியாவின் பிரபல வக்கீலாக ஆதிசேஷனாக வரும் பிரகாஷ் ராஜுக்கு நிறைய பன்ச் டயலாக்குகள். அதிலும் "என் தகுதிக்கு என்ன சம்பளம்னு நான் தான் டிசைட் பண்ணுவேன்...., உங்களுக்கு தெரியாத விஷயத்தில் உங்க அறிவை பயன்படுத்தாதீங்க... " உள்ளிட்ட பளிச் - பன்ச்களில் பிரகாஷ்ராஜின் பிரமாதமான நடிப்பையும் தாண்டி வசனகர்த்தா அஜயன் பாலா ரசிகனை அம்சமாய் வசீகரிக்கிறார். வாவ்!
கோணல் மாணலாக பேசினாலும், நேர்மை தவறாத நீதிபதி தனபாலாக வரும் ராதாரவி, மகளை இழந்த சோக சொருபீ மூர்த்தியாக சங்கிலி முருகன், விவேக், மயில் சாமி உள்ளிட்டவர்களும் நச் - டச்.
அஜயன் பாலாவின் அர்த்த புஷ்டி வசனங்கள், மதியின் யதார்த்த ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணின் பிரமாதமான இசை, ஜே.வி.மணி பாலாஜியின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் படத்திற்கு பெரும் பலம்.
பட ஆரம்பத்தில் உதயநிதி கேஸ் கிடைக்காமல் அலையும் போது, கோர்ட்டில் ஒரு கை விலங்கு கைதி முக்கி முனகி கேஸ் ரிலீஸ் செய்வது.... உள்ளிட்ட தேவையற்ற, அர்த்தமற்ற நாராசமான ஒரு சில காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காசால நிறைய விஷயத்தை வாங்க முடியும் ஆனா மரியாதையையும், சந்தோஷத்தையும் வாங்க முடியாது..." உள்ளிட்ட கதையோடு ஒட்டிய தத்துவார்த்த வசனங்களுக்காகவும், ஒருபக்கம் கேஸ் கிடைக்காமல் அல்லாடும் இளம் வக்கீல்களின் அவல நிலையையும், மற்றொரு பக்கம், வெளியே அடித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, கூட்டு களவாணித்தனம் செய்யும் போலீஸையும், வக்கீலையும் துணிச்சலாக தோலுரித்து காட்டியிருப்பதற்காகவும் ஐ.அகமதுவின் எழுத்து, இயக்கத்தில் மனிதன், மாமனிதனாக ஜொலிக்கிறான்!
மொத்தத்தில், மனிதன் - புனிதன்!
------------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
'மை லார்ட்! முழுக்க முழுக்க நீதிமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தி, வழக்கறிஞரைக் கதாநாயகனாக்கி வெளிவந்த மனிதன் படத்தின் விமர்சனத்தை உங்கள் பரிசீலனைக்கு வைக்கிறேன். வாய்தா போடாமல் விசாரிக்க வேண்டுகிறேன்.'
சரி! சரி! படத்தைப் பற்றிச் சொல்ல அனுமதிக்கிறேன்.
இநதப் படத்தின் மூலம், ஹிந்தியில் வெளியான ஜாலி எல்எல்பி படம். அதற்கு மூலம், உண்மையில் ஒரு நடிகர் காரேற்றி நடைபாதைவாசிகளைக் கொன்றது. படத்தின் மூலம் நல்ல மெசேஜ் சொல்லியிருக்கிறார்கள்.
மூல ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு மனிதனைப் பற்றிப் பேசவும். கோர்ட்டாரின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
மை லார்ட்! இதுவரையில் வக்கீங்கள் மற்றும் கோர்ட் நடவடிக்கைகளை இந்த அளவுக்கு யாரும் ஆவணப்படுத்தியதில்லை. அதிலும் உதயநிதி தேங்காய்மூடி வக்கீலாகவும், பிரகாஷ் ராஜ் டெரர் வக்கீலாகவும் பின்னியிருக்கிறார்கள்.
அப்ஜக்ஷன் யுவர் ஆனர்! எதிர்க்கட்சி வக்கீலான என்னையும் பேச அனுமதியுங்கள். ஏற்கெனவே கௌரவம், விதி, இன்னும் பல படங்களிலும் இப்படி வந்திருக்கிறது. மேலும் பிரகாஷ் ராஜ் ஒரே கூச்சல். அப்ஜக்ஷன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கதாநாயகி ஹன்சிகா உதயநிதியை மோட்டிவேட் செய்யும் இடங்களில் மனதைக் கொள்ளை கொள்ளுகிறார். நமது மனத்தைக் கவரும் விதம் ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் நம் மனத்தை திருடிவிடுகிறது.
நீங்கள் சொன்ன கொள்ளை, கவருதல், திருட்டு இதற்கெல்லாம் தண்டனை கொடுக்க முடியாது.
மை லார்ட்! வாதி தரப்பில் படத்துக்கு ஆதரவாகவே பேசப்படுகிறது. படத்தின் நீளம் உலக ஜவ்வு. உதயநிதியின் சீரியஸான கோர்ட் சீன் வாதங்கள் நமுத்துப்போன பக்கோடா போல இருப்பதை மறுக்க முடியாது. மேலும் கதாநாயகன் ஆரம்பத்தில் வில்லன் பிரகாஷ் ராஷூடனே டீல் போட முயற்சிப்பதும், திடீரென்று கொள்கைவாதியாக மாறுவதையும் ஜீரணிக்க முடியவில்லை. முகப்புத் தோற்றம் மட்டும் சென்னை உயர் நீதிமன்றம். ஆனால் நீதிமன்றக் காட்சிகள் அனைத்தும் கோவை ஆர்.எஸ்.புரம் வனக் கல்லூரியிலேயே எடுத்து மேட்ச் செய்திருப்பது செக்ஷன் 420ன்படி குற்றமாகும்.
ஓகே மை லார்ட்! அசமஞ்சம் போல நடிப்பது ரொம்பக் கஷ்டம். அதை ராதா ரவி சரியாகச் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பிரபல வக்கீல் பிரகாஷ் ராஜை அடிக்கடிப் பாய்ந்தும் இருக்கிறார்.
அப்ஜக்ஷன் மை லார்ட். நீதிமன்ற நடவடிக்கைகளை மிகவும் கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்கள். நீதிபதியே அடிக்கடி, வழக்கு சுவாரசியமாகப் போகிறது என்பதும் அபத்தமாக இருக்கிறது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, புதுமையான கதைக்களம், சமூக அக்கறை இவற்றோடு உதயநிதியும் ஓரளவு நடிக்க முயற்சி செய்திருப்பதைப் பாராட்டி படம் வெற்றிப் படம் என்று தீர்ப்பளிக்கிறேன்.
திரையரங்கில் மேலூர் இந்திரஜித் கருத்து: ஹன்சிகா மாதிரி ஒருத்தர் மோட்டிவேட் செஞ்சா எல்லாருமே நல்லவனாயிடுவாங்க. படம் நல்ல கருத்தைச் சொல்கிறது. பிடிச்சிருக்கு.