Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜில்.ஜங்.ஜக்

ஜில்.ஜங்.ஜக்,Jil.Jung.Juk
26 பிப், 2016 - 13:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜில்.ஜங்.ஜக்

தினமலர் விமர்சனம்


நடிகர் பாய்ஸ் சித்தார்த், "ஏடாகி எண்டர்டைன்மெண்ட் எனும் பட நிறுவனம் ஆரம்பித்து சொந்தமாக தயாரித்து., தீரஜ் வைத்தி எனும் புதியவரின் இயக்கத்தில் கதையின் நாயகராக நடித்தும் வெளிவந்திருக்கும் ஹாலிவுட் டைப் -ஜாலி டைம் பாஸ் படம் தான் "ஜில்.ஜங்.ஜக்.


கதைப்படி, பெரும் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் தெய்வா எனும் தெய்வநாயகம். நாட்டையே உலுக்கும் பொருளாதார தட்டுப்பாடு., குறிப்பாக பெட்ரோல் தட்டுப்பாட்டால் 2020-ம் ஆண்டில் தன் போதை மருந்து கடத்தல், கை மாற்றல்... தொழில் பெருவாரியாக ஸ்தம்பித்துப்போன நிலையில் அந்த போதை தாதா, தன்னிடம் கடைசியாக மிஞ்சி, எஞ்சி இருக்கும் சில, பலகோடி மதிப்புள்ள சரக்கை ஐதராபாத்துக்கு வரும் சீன போதை கும்பலிடம் கொடுத்து செம துட்டு பார்க்க நினைக்கிறார்.


போலீஸ் மற்றும் தொழில் போட்டியாளர்கள் கண்களில், காதுகளில் படாமல் சரக்கை ஐதராபாத் கொண்டு சென்று கை மாற்ற தன் பழைய கையாட்களையும், பழைய போதைப் பொருள் கைமாற்று முறையையும் நம்பாத தெய்வா அலைஸ் தெய்வநாயகம், புதிதாக பொறுக்கியெடுக்கும் மூன்று பேரும், ஒரு பழைய மாடல் காரும், அது சம்மந்தப்பட்ட காமெடி கதையும், காட்சிப்படுத்தலும்தான் ஜில்.ஐங்.ஜக் திரைப்படம் !


ஜில்லாக சித்தார்த், நாஞ்சில் சிவாஜி எனும் கேரக்டரில் கனகச்சிதம். தில்லாக இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து கூடவே இப்படத்தை தயாரித்தும் இருக்கும் சித்தார்த், கதைப்படி, பேச்சில் சாதுர்யர். ஆனால், படம் முழுக்க பேசுவதைக் காட்டிலும் நடிப்பில் நிறையவே ஸ்கோர் செய்திருக்கிறார் சித்தார்த்.


சித்தார்த் உள்ளிட்ட இப்படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தங்களது அழகு மூஞ்சியை அழுக்காக்கிக் கொண்டு அஷ்ட கோணலாக., கோணங்கி தனங்கள் செய்வது படத்திற்கு, பலமா? பலவீனமா.? சித்து விற்கும், இப்பட இயக்குனருக்குமே வெளிச்சம்.


சித்தார்த்தின் பிங்க் கலர் போதை கார், கூட்டாளிகளாக ஜங் - ஜங்குலிங்கமாக வரும் அவினாஷ் ரகுதேவனும், ஜக் - ஜாகுவார் ஜகன்னாக வரும் சனந்தும் கூட சித்தார்த்தையும் தாண்டி நடித்து ரசிகனை பிராண்டுகிறார்கள்.


இப்படத்தில் சித்து உள்ளிட்ட மேற்படி மூவர் தவிர ரோலெக்ஸ் ராவுத்தராக வரும் ராதாரவி, தெய்வா எனும் தெய்வநாயகமாக வரும் ஆர்.அமரேந்திரன், அட்டாக் ஆல்பர்ட்டாக வரும் எம்ஜி.சாய்தீனா, மருந்து - கே.பகவதி பெருமாள், நாசிம்மன் - நாகா, பைந்தமிழ் - பிபின், காளி - ஷரத், ஜக்கின் டிரைவர் அப்பா ஆர்எஸ்.சிவாஜி, ராவுத்தர் அடியாள் - விஜயமுத்து, குணா-ஆர்.பிரவீன், நடிகை சோனு சாவந்த்தாக வரும் ஜாஸ்மின் பாஸின் உள்ளிட்ட நட்சத்திரங்களில், நடிகை சோனு சாவந்த்தாக வரும் ஜாஸ்மின்னும் அவரையும் காட்டிலும் படம் முழுக்க இரு கேரக்டர்களாகவே பின்க் கலரிலும், சாம்பல் நிறத்திலும் வரும், வாழும் அந்த இரண்டு ஒல்டு மாடல் கார்களும் மட்டும்தான் கவனம் ஈர்க்கின்றான.


சிவஷங்கரின் கலை இயக்கம், குருட்ஸ்ஸ்னைடரின் படத்தொகுப்பு, ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, மோகன் ராமகிருஷ்ணன், தீரஜ் வைத்தியின் எழுத்து, மற்றும் தீரஜின் இயக்கம் ஆகியவற்றில் ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு மட்டுமே ஆஹா, ஓஹோ பதிவு! மற்றவையில் இல்லை போதிய தெளிவு.


தமிழுக்கு ஒவ்வாத ஹாலிவுட் ஸ்டைலில் காமெடி படமாக இருக்கும் ஜில்.ஜங்.ஜக் கில் இல்லை பெரிதாக கிக்!


மொத்தத்தில், ஏடாகி எண்டர்டைன்மெண்ட் என, தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்த நேரத்தில் சித்தார்த் பெயர் சூட்டினாரோ? பாவம், ஜில்.ஜங்.ஜக் படமும் ஏடாகூடமாகவே இருக்கிறது. வெரி,சாரி ...சித்து!


--------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்


காதலன் படத்தில், பெண்களை வடிவேலு வகைப்படுத்தியதைத் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். மூன்று திருடர்களின் பெயர்களின் சுருக்கம் தான் தலைப்பே தவிர வேறு எதுவும் இல்லை.


ஏராளமான துக்கடா பாத்திரங்களை மாறி மாறிக் காட்டி இம்சிக்கிறார்கள். சிரிப்பை வரவழைக்க எவ்வளவோ கடுமையாகப் படக் கழுவினர் முயற்சிக்கிறார்கள். சில காட்சிகளில் மட்டுமே சிரிப்பு. அதுவும் கதாபாத்திரங்களே சிரித்துக் கொள்(ல்)கின்றன. வெண்ணிற ஆடை மூர்த்திக்கே சவால்விடும் வகையில் இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்ப உண்டு.


டிரைவராக நடிப்பவரின் கொடுமை போதாது என்று அவரது அப்பா திடீரென்று படத்தில் நுழைந்து, ஏற்கெனவே மெதுவாகப் போகும் படத்தின் வேகத்தை மேலும் மட்டுப்படுத்துகிறார். வேகமா நகர்கிறது என்று சொல்ல வேண்டுமானால் படத்தில் வரும் இரண்டு கார்களைச் சொல்லலாம். அதிலும் ஒரு கார் பாதியிலேயே வெடித்து விடுகிறது.


படம் முழுக்க மண்வாசனை உடனே பாரதிராஜா பாணிப் படமோ என்று கேட்டு விடாதீர்கள். கௌபாய் படங்களில் வருவதைப்போல வறண்ட நிலப் பரப்பின் மண்வாசனையைத்தான் சொன்னேன். மற்றபடி பெண்வாசனையே இல்லாத படம். அதாவது கதாநாயகியே இல்லை.

கதாபாத்திரங்களின் பெயர்கள்தான் புதுமை. மற்றபடி கோமாளித்தனத்தைத்தான் எல்லோரும் வெளிப்படுத்துகிறார்கள்.


இணையத்தில் கொஞ்ச காலம் முன் வைரலாகப் பரவிய 'ஹரிஹர மஹாதேவஹி' புகழ் குரலை பை என்ற பாத்திரத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சென்னை திரையரங்கில் அந்தக் கரல் ஒலிக்கும்போது எல்லாம் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் ஊளைச் சத்தம் கேட்கிறது. சென்னைக்கு நூறு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் திரையரங்கில் ரசிகர்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது ன்று தெரிந்து கொள்ள மறுமுறையும் இதே படத்தைப் பார்த்தேன். பை கட்சிகளின்போது நிசப்தமாக இருந்தது. ஏ சென்டர்களில் பாதிப் படம் புரியும். பி அண்ட் சி மையங்களில் படம் பெரும்பாலும் புரியாது. படத்தின் டைட்டில் கார்டே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!


உகாண்டா காட்சி தேவையில்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சி மிக நீளம் மற்றும் நீலம். ராதாரவி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களைக்கூட அசையும் சொத்து, அசையாச் சொத்து என்று வசனம் பேசவிட்டிருக்கிறார்கள்.


இசைப் போன்ற கல்ட் காமெடி படங்கள் தமிழுக்குப் புதிது. காட்சி அமைப்பு, அரங்க நிர்மாணம் எனப் பல புதுமைகளைத் துணிந்து இறக்கியிருக்கிறார்கள். பாராட்டித்தான் ஆக வேண்டும்! அறிமுக இயக்குநர் தீரஜ் வைத்திக்கும் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயா கிருஷ்ணனுக்கும் ஒரு சபாஷ்! பின்னணி இசை அமர்க்களம். சித்தார்த்தின் சென்னை சிங்காரத் தமிழ் ஷோக்கா கீது!

வெளியாவதற்கு முன்னாலேயே பிரபலமான ஷூட் தி குருவி பாடலைப் படத்தில் உரிய இடத்தில் பயன்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், திரையரங்கைவிட்டு வெளியே வந்து டூ வீலரைக் கிளப்பும் வரை, முடிந்துபோன படத்தில் ஒலிக்கவிட்டிருப்பது ஏனோ?


ஜில் ஜங் ஜக் - புதுமை, இழுவை, அறுவை!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in