தினமலர் விமர்சனம்
நாயகன் - பாலகிருஷ்ணா
நாயகிகள் - அஞ்சலி, சோனல் சௌகன்
இயக்குனர் - ஸ்ரீவாஸ்
டோலிவுட்டின் மாஸ் ஹீரோவான பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான டிக்டேட்டர் பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ளது.
வாழ்க்கையை தனகே உரிய நியாயதர்மங்களுடன் வாழ்ந்து வரும் பாலகிருஷ்ணா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். ஒரு நாள் எதேர்ச்சையாக நடிகையான சோனல் செளஹானிற்கு உதவ நேரிடுகிறது அதுவும் ஒரு சிரமமான பிரச்சனையில்.
நடிகைக்கு உதவப்போக பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார் பாலகிருஷ்ணா. இந்த நிகழ்விற்கு இடையில் அவரது குடும்பத்திற்கு அவரது புதிரான கடந்த காலம் பற்றி தெரியவருகிறது. அப்படி என்ன கடந்த காலம்? இவர் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? இந்த கதையில் அஞ்சலியின் கதாபாத்திரம் என்ன என்பதை அறிய திரையரங்கிற்கு சென்றாக வேண்டும்.
படத்தை ஒற்றை ஆளாக சுமக்கிறார் பாலகிருஷ்ணா அவரது ரசிகர்கள் விசிலடிப்பதற்காகவே அனேக இடங்க்களில் பஞ்ச் வசனங்கள் வருகிறது. அதுவும் இடம் அறிந்து பொருத்தப்பட்டிருப்பதால் திரையரங்குகளில் கைத்தட்டல்களுடன் விசில் பறக்கிறது. பாலகிருஷ்ணா முந்தைய படங்க்களில் இருந்த நடை உடைகளை சற்றே மாற்றியிருக்கிறார். சோனல் அழகாக வந்து அக்கட தேசத்து ரசிகர்களை வாய்பிளக்க வைக்கிறார்.
எதிர்பாராத இடைவேளையும், அதன் பின் டெல்லியின் பின்புலத்தில் வரும் கடந்த கால காட்சிகளும் சுவாரஸ்யமானவை. படத்தின் பழக்கப்பட்ட கதை தான் ஆகப்பெரிய பலவீனம். பல நூறு படங்களுக்கு மேல் அடித்து துவைத்து போட்ட கதையை பாலீஷ் செய்திருக்கிறார்கள்.
அதுவும் பெரிதாக இல்லை கதை நடை பெறும் பின்புலத்தையும் வில்லன்களையும் ஒரு நகரத்தில் உலாவ விட்டிருக்கிறார்கள் அவ்வளவே. இப்படிபட்ட ஒரு படத்தில் பாலகிருஷ்ணா போன்ற ஒரு பெரும் ரசிகர் கூட்டம் உடைய நடிகர் நடிக்கும் பட்சத்தில் படத்தில் வில்லனின் கதாபாத்திரம் வலுவானதாக இருக்க வேண்டும் அல்லவா?? இங்கே அப்படி இல்லை அதுவும் ஒரு பலவீனம்.
பின்னணி இசையால் தமன் படத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறார். ஒளிப்பதிவாளரும் அனைத்து காட்சிகளையும் அழகாக காட்டியிருக்கிறார் அது சண்டை ஆனாலும் சரி பாடலானாலும் சரி. வசனங்களை, பாலகிருஷ்ணாவின் ரசிகர்களை மனதில் வைத்தே எழுதியிருக்கிறார்கள் போல. அதை சற்றே குறைத்திருக்கலாம்.இயக்குனர் ஸ்ரீவாஸ் பழக்கப்பட்ட கதையை கையில் எடுத்தாலும் தன்னால் முடிந்த வரை சுவாரஸ்யம் குறையாமல் சொல்ல மெனக்கெட்யிருக்கிறார். மொத்தமாக படம் ஒரு வழக்கமான காரசாரமான மசாலா படம். வழக்கமான காட்சிகள் பரவாயில்லை என்றால் நிச்சயம் பார்க்கலாம்
டிக்டேட்டர் - மசாலா படம்