'பிக்கு' படத்தை தொடர்ந்து பாலிவுட்டின் பிக்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தாண்டு துவக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'வசீர்'. அமிதாப் உடன் பர்கான் அக்தரும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு ஈர்த்தது என்று இனி பார்ப்போம்...
பயங்ரவாத தடுப்பு படையில் பணியாற்றும் அதிகாரியான டேனிஷ் அலி எனும் பர்கான் அக்தர், அன்பான மனைவி ருஹானா எனும் அதிதி ராவ், அழகான குழந்தை என மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். ஒருநாள் துப்பாக்கி சூடு ஒன்றில் தனது மகளை பறிகொடுக்கிறார் பர்கான். குழந்தையின் சாவுக்கு பர்கான் தான் காரணம் என தவறாக புரியும் அதிதி, பர்கானை விட்டு பிரிந்து தனது அம்மா விட்டு சென்று விடுகிறார். இந்தச்சூழலில் மாற்றுதிறனாளியான செஸ் மாஸ்டர் ஓம்காரநாத் தார் எனும் அமிதாப் பச்சனின் நட்பு கிடைக்கிறது. இருவரும் தங்களது வாழ்வில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அமிதாப்பை சந்தித்த பிறகு பர்கானுக்கு தன் வாழ்க்கையில் ஒரு புதிய விடியல் தோன்றியது போன்று உணர்கிறார். இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர். அமிதாப், நலத்துறை அமைச்சர் யாஷாத் குரேஷி எனும் மானவ் கவுலை கொல்ல நினைக்கிறார். இதற்கு பர்கானும் உதவ முன்வருகிறார். எதற்காக அமிதாப், அமைச்சரை கொல்ல நினைக்கிறார்.? அமைச்சரை அமிதாப் கொன்றாரா.?, அவருக்கு பர்கான் எவ்வாறு உதவுகிறார், பர்கான் மீண்டும் தன் மனைவியுடன் இணைந்தாரா.? எனும் கேள்விகளுக்கு விடையளிக்கிறது வசீர் படத்தின் மீதிக்கதை.
'பிக்கு' படத்தை தொடர்ந்து அமிதாப், மீண்டும் ஒரு பவர்புல் வேடத்தில் நடித்திருக்கிறார். ''பிக்-பி - பிக்-பி'' தான்.
அமிதாப்பை போலவே பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரியாக வரும் பர்கானும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவர்களை போலவே அதிதிராவ், சிறப்பு தோற்றத்தில் வரும் ஜான் ஆபிரஹாம், நீல் நிதின் முகேஷ் மற்றும் அமைச்சராக வரும் மானவ் கவுல் ஆகியோரது நடிப்பும் பிரமாதம்.
சைத்தான், டேவிட் போன்ற படங்களை இயக்கிய பிஜய் நம்பியார், வசீர் படத்தை இயக்கி உள்ளார். படம் நன்றாக இருக்கிறது, ஆனால் அதை முழுமையாக ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டார் இயக்குநர். படத்தில் அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்று முன்கூட்டியே ரசிகர்கள் அறிந்து கொள்ள முடிவது படத்தின் பலவீனம். அதேசமயம் அருமையான திரைக்கதை அமைப்பும், தெறிக்கும் வசனமும், அருமையான ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் மற்றும் இசையும் படத்தை ஒருமுறை பார்க்க ரசிகனை தூண்டுகிறது.
மொத்தத்தில் ''வசீர் - உணர்ச்சி நாடகம்!''