நாயகன் - கல்யாண் ராம்
நாயகி - சோனல் சௌகன்
இயக்குனர் - மல்லிகார்ஜுனா
டோலிவுட்டில் பட்டாஸ் படத்தின் வெற்றியுடன் இவ்வருடத்தை துவக்கிய நடிகர் கல்யாண் ராம், ஷேர் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக திரையில் தோன்றியிருக்கிறார். கல்யாண் ராம், ஷேர் படத்தில் எந்த அளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் என இனி காண்போம்.
கல்யாண் ராம் எதற்கும் கவலைப்படாத யதார்த்த இளைஞன், தன் குடும்பத்திற்கு ஏதும் பிரச்சனை இருந்தால் எதையும் செய்ய துணிபவன். ஒரு நாள் எதிர்பாராத விதத்தில் தாதாவான விக்ரம்ஜீத் உடன் சிறு சண்டை நிகழ்கிறது, தாதாவின் கல்யாணத்தில் சிறு தடங்கலும் ஏற்படுகிறது. இதனால் கோபம் அடையும் விக்ரம்ஜீத் எல்லா தெலுங்கு பட வில்லனை போல சவால் விடுகிறார். உன் வாழ்கையில் யார் வந்தாலும் அது காதலியாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி நான் கொலை செய்வேன் என்கிறார். இதற்கு கல்யாண் என்ன செய்தார்? நாயகி சோனல் சௌகனை எப்படி காப்பாற்றுகிறார் என்று தெரிய திரையரங்கிற்கு தான் சென்றாக வேண்டும்.
எப்போதும் போல் கல்யாண் ராம் தனது நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. பாடல்களில் நடன அசைவுகளில் அசத்துகிறார்.. சோனல் சௌகன் உடனான காதல் காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்துள்ளன. இது போக நகைச்சுவை நடிகர் பிரம்மாணந்தம் முதல் பாதியில் அனேக இடங்களில் சிரிக்க வைக்கிறார். சில சுவாரஸ்யமான காட்சிகளும் முதல் பாதியில் இருக்கிறது. சண்டை காட்சிகளை வடிவமைத்த ராம் லக்ஷ்மன் அவற்றை மிக நேர்த்தியாக அமைத்திருக்கிறார்கள்.
கல்யாணின் குடும்பத்தை பற்றிய காட்சிகளை இன்னும் நிறைய வைத்திருந்தால், கதையில் ஈடுபாடு கூடியிருக்கும். சில இடங்களில் உணர்வுகளை கடத்தவும் படம் தவறியிருக்கிறது. இப்படியாக கடக்கும் முதல் பாதியை தொடர்ந்து இரண்டாம் பாதி வழக்கமான மசாலா படம் பாணியில் அமைந்துள்ளது ஏமாற்றத்தை அளிக்கின்றது. யூகிக்க முடிந்த திருப்பங்கள். பழக்கப்பட்ட திரைக்கதை என நகர்கிறது இரண்டாம் பாதி. தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது குறிப்பாக பாடல் காட்சிகளில்.
இயக்குனர் மல்லிகார்ஜூனை பற்றி சொல்லியே ஆக வேண்டும், மிகவும் ஸ்டைலிஸ்-ஆக காட்சிகளை கையாண்டிருக்கிறார். கல்யாணை அழகாக காட்டி இருக்கிறது. முதல் பாதியில் ரசிகர்களை படத்திற்குள் ஈர்த்த இயக்குனர் இரண்டாம் பாதியில் அந்த ஈர்ப்பை தக்கவைக்க தவறிவிட்டார். மொத்தாமாக, பார்த்தால் வழக்கமான கமர்ஷியல் படமான ஷேர் படத்தை கல்யாணின் நடிப்பு அதை நியாப்படுத்தியிருக்கிறது.