ஒன் டிராப் பவுண்டேஷன் தயாரிப்பில், நிலா மதாப் பாண்டே தயாரிப்பு இயக்கத்தில் தற்போது வெளிவந்திருக்கும் படம், " கவுன் கித்னே பானி மைன்". 21 ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பிரச்னையாக திகழும் தண்ணீரை அடிப்படையாக கொண்ட கதை தான், கவுன் கித்னே பானி மைன்.
பைரி மற்றும் உப்ரி என்ற எதிரும் புதிருமான கிராமங்களுக்கு இடையே நடக்கும் பிரச்னைகள் தான் படத்தின் கதை. பைரி கிராமம் வறண்ட பூமியை கொண்ட கிராமம். அதேசமயம் உப்ரி நீர்வளம் நிறைந்த, விவசாய பூமி. துவக்கத்தில் ஒரே ஊராக இருக்கும் இப்பகுதி பலம் மிகுந்த சாம்ராஜ்யமாக, பொருளாதாரத்தில் சிறந்ததாகவும் திகழ்கிறது. பல்வேறு பிரச்னைகளால் பிளவுபடும் இக்கிராமங்களில் பைரி கிராமம் அரசனுக்கு எதிரான கிராமமாக உள்ளது.
ராஜா பிராஜ் கிஷோர் சிங் தியோவாக வரும் சவ்ரப் சுக்லா, தான் ஆட்சி செய்யும் பைரி கிராமத்தை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக படத்தின் கதை துவங்குகிறது. ராஜாவின் மகன் ராஜ் கதாபாத்திரத்தில் ஹீரோ குணால் கபூர் நடித்துள்ளார். அந்த கிராமத்தில் உள்ள கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக யாரும் கிராமத்தை வாங்க முன்வரவில்லை. இதனால் செழிப்பானதாக திகழும், உப்ரி கிராமத்தின் தலைவர் காரு பகல்வனாக வரும் குல்சன் கிரோவரின் மகள் பாரோவை (ராதிகா ஆப்தே) தூக்கி வருமாறு தன் மகன் ராஜிடம் கிஷோர் சிங் தியோ கூறுகிறார்.
பெண்ணை கடத்தி வரச் செல்லும் ஹீரோ ராஜ், வழக்கம் போல் நாயகி பாரோ மீது காதல் வயப்படுகிறார். அவர்களின் காதல் வெற்றி பெறுகிறது? அந்த கிராமங்கள் ஒன்று சேர்க்கின்றனவா? அவர்களின் தண்ணீர் பஞ்சம் தீருகிறதா என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தை ஸ்வாரசியமாக கொண்டு செல்ல இயக்குனர் நிலா மதாப் பாண்டே தவறியது படத்தின் மிகப் பெரிய மைனஸ் என்றே கூறலாம். சீரியசாக போகும் கதையில், சம்பந்தமில்லாமல் காமெடியான க்ளைமேக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது படத்தின் மற்றொரு மைனஸ். சவ்ரப் சுக்லா மற்றும் குல்சன் க்ரோவரின் நல்ல நடிப்பை இயக்குனர் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார். மற்றபடி இசை, திரைக்கதை என எதிலும் புதிதாக ஒன்றும் இல்லை.
சவ்ரப் சுக்லா தனக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாகவே செய்துள்ளார். ராதிகா ஆப்தே ரசிகர்களை கவரும் விதத்தில் சிறப்பான நடிப்பாலும் நளினத்தாலும் தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார். இருப்பினும் குணால் கபூர் ரசிகர்களை ஈர்க்க தவறி விட்டார். குல்சன் கோவெர் உள்ளிட்ட குணசித்திர நடிகர்களின் நடிப்பை பாராட்டலாம்.
மொத்தத்தில் கவுன் கித்னே பானி மைன், பல ஆண்டுகளாக இரு கிராமங்களுக்கும் இடையே நடைபெறும் தண்ணீர் பிரச்னை சீரியசான காமெடி. நேரமிருந்தால் பார்க்கலாம்.
ரேட்டிங் : 2 ஸ்டார்.