சிகர மனிதன் என்று அழைக்கப்படும் தசரத் மஞ்சியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருக்கும் படம் தான் மஞ்சி தி மவுண்டைன் மேன். நவாசுதீன் சித்திக், தசரத்தாக நடித்துள்ளார், இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...
தசரத் மஞ்சி எனும் நவாசுதீன் சித்திக், ஒரு சாதாரண மனிதன். அவரது மனைவி ஃபகுனியா எனும் ராதிகா ஆப்தே. ஒருசமயம் ராதிகா ஆப்தேவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் சுமார் 70 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும், அதனால் தான் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள மலையை உடைத்து சாலை அமைக்கும் முயற்சியில் இறங்குகிறார். சுமார் 22 ஆண்டுகள் ஒரே ஆளாக, கையில் ஒரு உளி மற்றும் சுத்தியலை வைத்து மலையை உடைக்கிறார். அவரது எண்ணப்படி மலையை உடைத்து சாலை அமைத்தாரா.? என்பது வித்தியாசமும், காதலும் கலந்த மீதிக்கதை.
மஞ்சி தி மவுண்டைன் மேன் படத்தின் மொத்த கதையையும் நவாசுதீன் சித்திக் ஒரே ஆளாக சுமந்து இருக்கிறார். ஒரு ஆளாக மலையை 22 ஆண்டுகளாக உடைக்கும் கதாபாத்திரத்தில் தசரத் மஞ்சியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
நவாசுதீனின் மனைவியாக ராதிகா ஆப்தே. படத்தில் அவர் வந்து செல்லும் காட்சிகள் குறைவு தான் என்றாலும், அதை அவ்வளவு அழகாக செய்திருக்கிறார்.
பத்திரிகையாளராக வரும் கெளரவ் திவேதி, திக்மான்சு துலியா, பங்கஜ் திரிபாதி ஆகியோரும் தங்களது ரோலை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
மஞ்சி தி மவுண்டைன் மேன் படத்தை கேத்தன் மேத்தா இயக்கியிருக்கிறார். சிகர மனிதன் தசரத்தின் வாழ்க்கையை அவர் படமாக எடுத்து அதை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் படத்தின் திரைக்கதையில் நிறைய கோட்டை விட்டுள்ளார். குறிப்பாக படத்தின் பின்பாதியில் தேவையில்லாமல் நிறைய காட்சிகள் இருப்பது ரசிகனை சலிப்படைய செய்கிறது. ஆனாலும், ஒரு நல்ல கதை என்பதற்காக இந்தப்படத்தை அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.
மொத்தத்தில், ''மஞ்சி தி மவுண்டைன் மேன் - மஞ்சி தி கிரேட் லவ்வர் மேன்!''