தினமலர் விமர்சனம்
ஜெயம் ரவி, அவரது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் நடித்து சற்று பெரிய இடைவெளிக்குப்பின் வெளிவந்திருக்கும் திரைப்படம். ஜெயம் ரவி, நயன்தாரா ஜோடி நடித்திருக்கும் படம்.மாஜி காதல் நாயகன் அர்விந்த்சாமி வில்லனாக என்ட்ரி கொடுத்திருக்கும் படம். ஹிப் ஹாப் தமிழாவின் இசையால் இன்னும் அதிக எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும் படம் எனும் எக்கசக்க எதிர்பார்ப்புகளோடு இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் தனி ஒருவன்.
போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரியான ஜெயம் ரவி, ஐ.பி.எஸ். படிக்கும் காலத்திலிருந்தே நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென்ற உத்வேகத்திலும், இளம் ரத்த துடிப்பிலும் செயற்கரிய காரியங்களில் இறங்கி சில பல திருட்டு புரட்டு வழக்குகளை கண்டுபிடித்து அதில் சம்பந்தப்பட்டவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்து விட்டு தாம் தான் செய்கிறோம் என்பது தெரியாவண்ணம் பார்த்துக்கொள்கிறார். இதுமாதிரி தன் ஐ.பி.எஸ் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கும் காலத்திலேயே, பல நல்ல விஷயங்களை தொடர்ந்து நாட்டிற்காக செய்கிறார் ஜெயம் ரவி. அவர், ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, மருந்து துறையில் பெரிய மனிதர் போர்வையில் இருக்கும் பணத்தாசை பிடித்த அர்விந்த்சாமியாலும், அவரது ஆட்களாலும் செய்யப்படும் மனித உயிர்களை பறிக்கும் இமாலய ஊழல்களை கண்டுபிடித்து ஐ.பி.எஸ். அதிகாரி ஆனதும் அவரது கொட்டத்தை அடக்க புறப்படுகிறார். ஜெயம்ரவிக்கு உறுதுணையாக காதலி நயன்தாராவும் இருக்கிறார். கூடவே இன்னும் சில ஐ.பி.எஸ். பேட்ச் நண்பர்களும் இருக்கின்றனர். எல்லோரது உதவியுடனும் அரவிந்த்சாமியின் மருந்து ஊழல்களை, ஜெயம் ரவி கண்டு களையெடுத்தாரா? அல்லது அர்விந்த்சாமி, ஜெயம் ரவியின் தலையை எடுத்தாரா...? எனும் கதைதான் தனிஒருவன் படத்தின் கரு, கதை, களம், காட்சிபடுத்தல் எல்லாம். இதை எதிர்பாராத திருப்பங்களுடனும், வித்தியாசமும், விறுவிறுப்புமான புதுமையான திருப்ப முடிச்சுகளுடனும், ஜெயம் ராஜா கதை, திரைக்கதை எழுதி அசத்தலாக திரைப்படமாக்கி இருக்கிறார்.
ஜெயம் ரவி - மித்ரன் எனும் ஐ.பி.எஸ்., அதிகாரியாக படிக்கும் காலத்திலும், படித்து பதவிக்கு வந்தபின்னும், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ரசிகனின் நெஞ்சில் நிற்கும்படி, தன் பாத்திரத்தை உணர்ந்து பக்காவாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், நயன்தாரா உடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் கூட போலீஸ் அதிகாரியின் மிடுக்கு குறையாமல் மிரட்டியிருக்கிறார் மனிதர்.
தனி ஒருவனாகவும், நண்பர்களுடன் இணைந்தும் ஜெயம் ரவி செய்யும் சாகசங்களும், இயங்கும் ஃலிப்டின் மேல் ஒற்றை ஆளாக நின்றபடி, அர்விந்த்சாமியும், அலுவலகத்தை துப்பறிவதிலாகட்டும், தன் உடம்பில் தனக்கே தெரியாமல் வில்லன் அர்விந்த்சாமி வைத்து தைத்த மைக்ரோசிப் உளவுக்கருவியை சுமந்துகொண்டு தான் போடும் திட்டங்களையெல்லாம், அர்விந்த்சாமிக்கு தெரிவது கண்டு ஆத்திரப்படுவதிலாகட்டும்., அர்விந்த்சாமியின் போக்கிலேயே அவருக்கு போக்கு காட்டி, தன் நாயகி நயனையும், அர்விந்த்சாமியின் அழகி - காதலி மற்றும் அப்பா - தம்பிராமைய்யா உள்ளிட்டோரையும் அவரிடமிருந்து காப்பாற்றுவதிலாகட்டும்... அனைத்திலும் அசத்தலாக நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை...என கம்பீரம் காட்டியிருக்கிறார் மனிதர்! ஹேட்ஸ் ஆப் யூ ரவி!
நயன்தாரா மகிமா எனும் பாத்திரத்தில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்.சை இடையில் கைவிட்ட மாணவியாகவும், பாரன்சிக் படித்துமுடித்த கைரேகை நிபுணராகவும், பெரிய போலீஸ் அதிகாரியின் மகளாகவும் மிடுக்கு காட்டி துடுக்கு பெண்ணாக மிரட்டியிருக்கிறார். ஒரு காட்சியில் அமெரிக்க பெண் பிரபலத்திற்கு பதிலாக அவரது உயிரை காக்க வேண்டி காதலன் ஜெயம்ரவி தன்னை ஆள்மாறாட்டம் செய்து காரில் ஏற்றி அனுப்பும்போது "உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்... என்று சொன்னேன்... அதற்காக இப்படியா.?!" என கேட்டபடி, காரில் ஏறி துணிந்து செல்வது மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
ஜெயம் ரவி - நயன்தாரா மாதிரியே, வில்லனாக வரும் அர்விந்த்சாமி, அவரது அப்பா தம்பிராமைய்யா, நாசர், ஜெயம் ரவியின் ஐ.பி.எஸ். நண்பர்கள் கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண், வம்சிகிருஷ்ணா, சஞ்சனா சிங் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். அதிலும் அர்விந்த்சாமி ஜெனியூன் வில்லனாக உட்கார்ந்த இடத்தில் போலீஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிராளிகளையும், தனது ஆள்பலத்தாலும், பணபலத்தாலும் தீர்த்து கட்டுவது வியர்த்து விறுவிறுக்க வைக்கிறது!
தனது சிறுவயதில் தன் அப்பா எம்.எல்.ஏ.ஆக வேண்டி சி.எம். கண் எதிரிலேயே செய்யும் கொலையில் தொடங்கி, தன் மனதிற்கு பிடித்தவளை கைப்பிடிக்க, அப்பெண்ணின் அப்பாவையே தீர்த்துக்கட்டி அவளை தன்னிடம் மதிமயங்க செய்வதில் தொடர்ந்து., தன் பெரிய மனுஷ தோரணை தோற்றுவிடக்கூடாது... என்பதற்காக பெற்ற அப்பாவையே தீர்த்துக்கட்ட துணிவது வரை சகலத்திலும் ஹீரோ ஜெயம் ரவிக்கு ஈக்வோலாக சக்கைபோடு போட்டிருக்கிறார் அர்விந்த்சாமி. வாவ்! ஜெயம் ரவி, அர்விந்த்சாமி இருவரையும் தன் எதார்த்த நடிப்பால் எக்குதப்பாய் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் தம்பிராமைய்யா என்பதும் குறிப்பிடத்தக்கது. வாரே வா!!
எழுத்தாளர்கள் சுபா மற்றும் இயக்குநர் ராஜாவின் பொருள் பொதிந்த வசனவரிகள், ஹிப் ஹாப் தமிழாவின் இனிய இசை, ராம்ஜியின் அழகிய ஒளிப்பதிவு, கோபிகிருஷ்ணாவின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகளுடன் சமீபமாக ஜெயம் ராஜா எனும் பெயரிலிருந்து மோகன் ராஜா எனும் பெயர் மாற்றத்திற்கு வந்திருக்கும் இயக்குநர் ராஜாவின் எழுத்து, இயக்கத்தில் தனி ஒருவன், ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் உள்ளிட்ட ஜனரஞ்சக விஷயங்கள் அனைத்திலும் பர்ஸ்ட் கிளாசில் பாஸ் ஆவதால் தனி ஒருவன் - ரசிகர்களின் தரணி ஆள்வான் என்றே தோன்றுகிறது.
தனி ஒருவன் - தரணி ஆள்வான்!!
குமுதம் சினி விமர்சனம்
பரபரவென ஒரு பக்கா ஆக்ஷன் படம்.
எல்லா அக்ரமங்களையும் செய்யும் வில்லனை தனி ஒருவனாக திட்டம் போட்டு காலி செய்யும் கதாநாயகனின் கதைதான். ஆனால் திரைக்கதை, திடீர் திருப்பம் என்று ஜெகஜாலம் காட்டியிருக்கிறார், மோகன் ராஜா.
காக்கி உடுப்பு, ஜெயம் ரவிக்கு செமை மிடுக்கு. ஆக்ஷன், காதல், கோபம் என்று முன்னேற்றம்.
நயன்தாரா வீட்டு கடிகாரம் மட்டும் ரிவர்ஸில் சுற்றும் போலிருக்கிறது. ஆமாம், நாளுக்கு நாள் வயது குறைந்து கொண்டே போகிறது. செல்லக் கோபமும் மெல்லிய காதலும் லவ்லி!
கொடூர வில்லனாக அரவிந்தசாமி! கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத அந்த அனாயாசம் ஆசம்! சாகும்போது ரகசியத்தை "நீ கேட்டே! நான் கொடுத்தேன் என்று சொல்வது சிலிர்ப்பு!
ஊரில் அடிக்கடி நடக்கும் செயின் பறிப்புக்குக் காரணம் வெறும் நகைத் திருட்டல்ல, வேறு ஒரு பெரிய பின்புலம் என்ற சஸ்பென்ஸும், ரவி தன் உடலில் பொருத்தப்பட்ட சிப்பைக் கண்டுபிடித்தபின் அது அரவிந்தசாமிக்கு தெரியக்கூடாது என்பதால் நயன்தாராவிடம் கோபம் போல காட்டி கட்டியணைத்து காதல் புரிவதும் (சு) திரைக்கதை(பா)யின் ஜொலிஜொலிப்பு!
வசனம் கத்திமுனை!
வில்லனின் அப்பாவாக தம்பி ராமய்யா, அந்த அப்பாவித்தனமும் மெல்லிய தவிப்பும் அபாரம்யா!
ஜெயம் ரவியின் நண்பர்கள் ஓகே. அதில் ஒருவரின் கொலையை இத்தனை கொடூரமாகக் காட்டியிருக்க வேண்டாம்.
ராம்ஜியின் ஒளிப்பதிவும் ஹிப்ஹாப் தமிழனின் ஆர்ஆரும், கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங்கும் தனித்துத் தெரிகிறது.
ராஜாவுக்கு ஓர் அன்புக் கட்டளை! இனி டப்பிங் படங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு தனி ஒருவனாக இதேபோல் படம் எடுங்கள்!
தனி ஒருவன், க்ரியேட்டிவ்!
குமுதம் ரேட்டிங் - நன்று