Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

36 வயதினிலே

36 வயதினிலே,36 Vayathinile
  • 36 வயதினிலே
  • ரகுமான்
  • ஜோதிகா
  • இயக்குனர்: ரோஷன் ஆண்ட்ரூஸ்
25 மே, 2015 - 15:42 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » 36 வயதினிலே

ஜோதிகா, ஜோதிகா சூர்யா ஆனதற்கு பிறகு, ஏழெட்டு ஆண்டுகள் கழித்து நடித்து, வௌிவந்திருக்கும் திரைப்படம் என்பதில் இருந்தே தெரிந்திருக்கும் எத்தனை கணமான கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் பொருந்திய படமாக இருக்கும் 36 வயதினிலே? என்பது! கணவர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், மனைவி ஜோதிகாவே நடித்து வந்திருக்கும் 36 வயதினிலே திரைப்படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ மலையாளப் படத்தின் தழுவல் என்றாலும், தமிழுக்கு தக்கபடி தகதக தங்கமாக ஜொலித்திருக்கும் ஜோவின் 36 வயதினிலே படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை இனி பார்ப்போம்...!

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சக மாணவிகளுக்கு எடுத்துக்காட்டாக பொதுப்பிரச்னைகளில் போராடி ஜெயிக்கும் குணம் நிரம்பியவராக திகழ்ந்த வசந்தி எனும் ஜோதிகா, தமிழ் செல்வன் எனும் ரகுமானின் மனைவியாகவும், பருவ வயதை எட்ட இருக்கும் ஒரு மகளுக்கு தாயாகவும் ஆனபின், குடும்ப தலைவியாக பொறுப்புகளை சுமந்து ரெவின்யூ ஆபிஸில் சக ஊழியர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகும் கிளார்க்காக தானுண்டு, தன் வேலையுண்டு என மகளுக்காகவும், கணவருக்காகவும், குடும்பத்திற்காகவும், சராசரி நடுத்தர வர்க்கத்து அம்மாஞ்சி அம்மாவாக தன் உலகை சுருக்கி கொண்டு வாழ்கிறார், அதுவே அவருக்கு வினையாகிறது.


ஆசை கணவரும், அன்பு மகளும், அலுவலக ஊழியர்கள் சிலரும் ஜோதிகாவை இஷ்டத்திற்கு அலட்சியப்படுத்த ஏகத்துக்கும் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஜோ, அதிலிருந்து மீண்டு எவ்வாறு? தன் கனவுகளிலும், திறமைகளிலும் ஜெயித்து ஜொலிக்கிறார்.? என்பது தான் 36 வயதினிலே படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!


வசந்தி தமிழ் செல்வனாக ஜோதிகா நடிக்கவில்லை... தமிழ் சினிமாவில் ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் கதாநாயகி யார்.? என்று எங்காவது கேட்டால் ஜோ என்று தான் சொல்ல வேண்டும் எனும் அளவிற்கு! அத்தனை அற்புதமாக வசந்தி தமிழ் செல்வன் பாத்திரத்தை தன்னுள் வாங்கி ஏக்கம், ஏமாற்றம், ஏற்றம் எல்லாவற்றிலும் அது அதற்கு ஏற்புடைய முகபாவங்களை காட்டி நடித்து ரசிகனை சீட்டோடு கட்டிப்போடுகிறார் அம்மணி!


சுயநல கணவரின் ஏச்சு, பேச்சுகளை தாங்கி கொள்ளும் மனைவியாக, பல மாணவிகளுக்கும் ரோல் - மாடல் மாணவியாக, அலட்சியப்படுத்தும் மகளுக்கு அன்பாக புரியவைக்கும் தாயாக, மாமனார்-மாமியாரை மதிக்கும் மருமகளாக, சக ஊழியர்களின் உதாசீனங்களை உதறித்தள்ள முடியாது பொங்கி பொறுமும் அலுவல்வாசியாக, மகளின் சாதனைக்காக ஜனாதிபதியை பார்க்க போய் மயங்கி விழும் பத்தாம்பசலியாக, பின்நாளில் தங்கள் குடியிருப்பு பகுதி வீட்டு மொட்டை மாடிகளில் காய்கறி தோட்டம் அமைத்து உர விஷம் பாயாத ஆர்கானிக் காய்கறிகளை மகசூல் செய்து சாதனை படைத்து ஜனாதிபதியை சந்தித்து பரிசு பெறும் பாக்கியசாலி சாதனையாளராக பல்வேறு முகம் காட்டி, 36 வயதினிலே படத்தில் பக்காவாக பவனி வந்திருக்கும் ஜோதிகாவிற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம், பலப்பல சபாஷ் சொல்லலாம்! கூடவே ஜோவை மீண்டும் நடிக்க வைத்து இதுமாதிரி ஒருநல்ல படத்தை தயாரித்தமைக்காக ஜோவின் கணவர் சூர்யாவுக்கும் ஒரு வெல்கமும், தேங்ஸூம் சொல்லியே ஆக வேண்டும்.


ஜோவின் கணவர் தமிழ் செல்வனாக ரகுமான், நடுத்தர வர்க்கத்து சுயநல கணவர்களை சரியாக தோலுரித்து காட்டியிருக்கிறார். அதிலும் ஜோவின் டிரைவிங் லைசென்ஸ் காலாவதியானது என தெரிந்ததும் தன் அயல்நாட்டு கனவு அதோகதி ஆன வருத்தத்தில் ரகுமான் கொடுக்கும் ரியாக்ஷ்ன் சாட்த் சாட்த் நடுத்தர வர்க்கத்து கணவன்மார்களை பக்காவாக பிரதிபலித்திருப்பது சூப்பர்ப்!


ஜோதிகாவின் கல்லூரி சினேகிதியாக, திருப்புமுனை கேரக்டரில் வரும் அபிராமி, அலுவலக தோழி தேவதர்ஷினி, அலுவலக சீனியர் பிரேம், ஜோவின் பருவ வயது மகளாக வரும் அமிர்தா, மாமனார் டெல்லி கணேஷ், போலீஸ் கமிஷனர் நாசர், போக்குவரத்து காவலர் எம்.எஸ்.பாஸ்கர், ஜோவின் மாடித்தோட்டத்து காய்கறி பிஸினஸூக்கு பிள்ளையார் சுழி போடும் வேலைக்காரம்மா, அலட்டல் ராணியாக கோலி சோடா சுஜாதா, போஸ்வெங்கட், க்ளைமாக்ஸில் முக்கிய கருத்துகளுக்கு முகம் காட்டாமல் பின்னணியில் மட்டும் குரல் கொடுத்திருக்கும் நடிகர் சிவக்குமார்(மருமகளுக்காக.?) உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்! பலே, பலே!


ஆர்.திவாகரனின் ஔிப்பதிவில் படத்தில் இடம்பெறும் டெல்லியும், சென்னையும் கில்லியாக தெரிவது பலம்! சந்தோஷ் நாராயணின் இசையில், வாடி ராசாத்தி... பாடலும், பின்னணி இசையும் பிரமாதம்!


இன்னொரு வசந்தியாக என் மகள் இருந்திட கூடாதுன்னு... என் கணவர் சொல்றார், அப்படீன்னா.? இத்தனை காலமும் வசந்தி அந்த வீட்டில் என்னவாக இருந்தாள்.? என்று தோழி தேவதர்ஷினியிடம் ஜோ குமுறி அழும் காட்சி உட்பட ஒவ்வொரு நச்-டச் வசனகாட்சிகளிலும் வசனகர்த்தா யார்.? என கேட்க வைக்கிறார் வசனகர்த்தா விஜி! வாவ் விஜி!!


ரோஷன் ஆண்ட்ரூஸின் இயக்கத்தில், ஆர்க்கானிக் காய்கறியின் நன்மை உள்ளிட்ட நல்ல விஷயங்களை கூறும், சமூக அக்கறையுடன் கூடிய குடும்ப படமாக வௌிவந்திருக்கும் 36 வயதினிலே திரைப்படம், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ப(பா)டம்!


மொத்தத்தில், பெண் அடிமைத்தனத்தை பேராண்மையுடன் களைய முற்பட்டிருக்கும் 36+ வயதினிலே - அனைத்து வயதினரும் ஆண்-பெண் இரு பாலினரும் பார்க்ககூடிய, பார்க்க வேண்டிய நல்லதொரு பாடமாகும்!


குமுதம் விமர்சனம்




36 வயதினிலே




வாங்க ராசாத்தி!


ஜோதிகாவைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு! அத்தனைக்கும் சேர்த்து காட்சிக்குக் காட்சி அப்ளாஸ் வாங்குகிறார் திருமதி சூர்யா.

பஞ்ச் டயலாக், குத்தாட்டம், அரைகுறை ஆடை, இரட்டை அர்த்த வசனம், ஒரே பாடலில் கோடீஸ்வரனாவது, அரிவாள், துப்பாக்கி, ரத்தம் என்று எல்லாவற்றையும் தூக்கி கடாசிவிட்டு பெண்களை மையப்படுத்தி துணிச்சலாய் யதார்த்தமாய், தன்னம்பிக்கையாய் ஒரு படம் கொடுத்ததற்காகவே தாராளமாய்ப் பாராட்டலாம்.

36 வார்த்தைகளில் கதையைச் சொல்லிவிடலாம். கல்லூரிக் காலத்தில் துடிப்புடனும், தைரியத்துடனும் இருக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு அத்தனையையும் தொலைத்து சோர்ந்து போகிறார்களே ஏன்? என்ற கதைக்களத்தை சமூகப் பிரக்ஞையோடு தந்ததற்காகவே இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு ஒரு கைகுலுக்கல். (ஹவ் ஓல்ட் ஆர் யு மலையாளப் படத்தை தமிழிலும், இவரே ரீமேக் செய்திருக்கிறார்.)

கணவனாலும் மகளாலும் 'ஒன்றும் தெரியாதவள்' என்று புறக்கணிக்கப்படுவதால் புழுங்குகிறார் ஜோதிகா. அவர் தோழியின் தூண்டுதலால் குடியரசுத் தலைவரே கூப்பிட்டுப் பாராட்டும் அளவுக்கு உயர்வதுதான் கதை.

வீட்டாரால் புறக்கணிக்கப்படும்போது காட்டும் கோபம், தன் மேல் என்ன தவறு என்று துடிக்கும் ஆதங்கம், 'ஆன்ட்டி' என்று ஒருவன் கூப்பிடும்போது உண்டாகும் அதிர்ச்சி, பிரசிடெண்ட் முன்பு மயங்கி விழுவதால் ஏற்படும் கேலிகளால் கூனிக்குறுகி வெம்புதல், தோழியின் தன்னம்பிக்கை வார்த்தைகளால் மெல்லத் தலை நிமிர்தல், ஃபேஸ்புக் மனிதர்களுக்கு தடாலடியாய்த் தயக்கமே இல்லாமல் பதில் சொல்லும் துணிச்சல் என்று காட்சிக்குக் காட்சி மனதைக் கொள்ளைக் கொள்கிறார் ஜோதிகா. இத்தனை திறமை வாய்ந்த நடிகையை இவ்வளவு ஆண்டுகள் மறைத்து வைத்திருந்ததற்காக சூர்யா மேல செல்லமாய்க் கோபம் வருகிறது!

ரஹ்மானும், சிறுமி அமிர்தாவும் ஓகே. ஜோதிகா புயலில் இவர்கள் கரை ஒதுங்குவதே அதிசயம்தான்! அபிராமி, மிடுக்கு.

பிரசிடெண்ட்டிடம் ஜோதிகாவின் மகள் என்ன சொன்னாள்? என்பது சுவாரஸ்யம்தான். ஆனால் அதை இத்தனை இழு இழுத்திருக்க வேண்டாம்!

'அஞ்சு சந்தோஷங்களை அடைஞ்சு, அம்பது விருப்பங்களைக் குடும்பத்துக்காக விட்டுக் கொடுத்திருக்கேன்'. விஜியின் வசனங்கள் சோர்ந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை டானிக்!

சந்தோஷ் நாராயணின் பாடல்களோடு ரீரெக்கார்டிங்கும் பக்கா ரியலிஸம்!


36வயதினிலே - திருமணமான ஆண்கள் பார்க்க வேண்டிய படம்!


குமுதம் ரேட்டிங் - நன்று


ஆஹா - ஜோதிகா ஜோதிகா ஜோதிகா

ஹிஹி - இங்கிலீஷ் விக்கிலீஷ் படம் நினைவுக்கு வருகிறது. பிரசிடெண்ட் கேள்வி சஸ்பென்ஸ்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

36 வயதினிலே தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in