ஹீரோ : நிகில்
ஹீரோயின் : திரிதா சௌத்ரி
இசை: சத்யா மகாவீர்
ஒளிப்பதிவு, இயக்கம் : கார்த்திக் கட்டமனெனி
தயாரிப்பு: மல்காபுரம் சிவகுமார்
பேனர்: சுரக்ஷ் என்டர்டெயின்மென்ட்
பிரபல நடிகர் நிகில் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டு ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் படம், மிகவும் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படம், திறமையான கேமரா மேன் கார்த்திக் கட்டமனெனியின் முதல் படம் என பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள படம், சூர்யா வெர்சஸ் சூர்யா. கோடியில் ஒருத்தருக்கு வரக்கூடிய ஜெனிடிக் டிஸ்ஆர்டரான பொர்பைரியாவால் அவதிப்படும் வேடம் நிகிலுக்கு, அதன் விளைவாக ஹீமோக்குளோபின் உற்பத்தி ஆகாமல் நிகிலால் வெயிலில் செல்ல முடியாது. அப்படியே வெளியே சென்றாலும் 15 நிமிடங்களில் இறந்து போய்விடுவார். இந்த தகவலை நிகிலிடம் டாக்டராக சிறு வேடத்தில் நடிக்கும் ராவ் ரமேஷ் தெரிவிப்பார். இதனால் நிகில் இரவு நேர கல்லூரியில் சேர்ந்து படித்து வருவார். அப்போது அவருக்கு இரண்டு நண்பர்கள் கிடைப்பார்கள். அதில் ஒருவர் அருணா சாய் (சத்யா) ஆட்டோ டிரைவராக வருகிறார். மற்றொருவர் எர்சம் (தனிகெல்ல பரணி) சிறு பலசரக்கு கடை நடத்துபவர். மூன்று பேரின் வாழ்க்கை முறையும் வெவ்வேறு பாதையில் சென்றாலும் அவர்கள் ஒன்றாக இணையும் தருணம் அடிக்கடி நிகழ்கிறது. இந்நிலையில் டி வி ஆங்க்கரான சஞ்சனா (திரிதா சௌத்ரி) மீது காதல் ஏற்படுகின்றது. நிகிலால் சாதாரணமாக வாழமுடியுமா? அவரது காதல் கை கூடுமா? என்பதே மீதி கதை.
கார்த்திகேயாவில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நிகில், இந்த படத்திலும் நன்றாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக அவருடைய குழப்பமான நடவடிக்கை ஆகட்டும், சோம்பேரித்தனமாகட்டும் நிகில் அசத்தவே செய்கிறார். எனினும் இன்னும் அவர் சிறப்பாக நடித்திருக்கலாம்.
திரிதா சௌத்ரி இன்றைய மாடர்ன் பெண்களை அப்படியே பிரதிபலிக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் நேர்த்தியானவர்.
நிகிலின் தாயக நடிக்கும் மதுபாலா தனது மகனுக்கு உள்ள குறைபாட்டை சரி செய்ய கடுமையாக முயற்சி செய்கிறார். பல இடங்களில் அவரது நடிப்பு ஓவர் ஆக்ஷனாகவே மாறி விடுகின்றது .
சத்யாவும், தனிகெல்ல பரணியும் சூர்யாவின் நண்பர்களாக நன்றாகவே நடித்து இருக்கின்றனர். அவர்கள் விவா ஹர்ஷா, தாகுபோது ரமேஷ் மற்றும் ஜுபைர்ராக வரும் நடிகரோடு இணைந்து காமெடியில் கலக்கி உள்ளனர். திரிதா சௌத்ரியின் அப்பாவாக சாயாஜி ஷிண்டே சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
முதல் படத்திலேயே வித்தியாசமான கதை களத்தை வைத்து கொண்டு இயக்கிய கார்த்திக் கட்டமனெனியை பாராட்டியே ஆகவேண்டும். படத்தின் முதல் பாதியை இயக்குனர் நன்றாகவே கொண்டு சென்று இருக்கிறார். நிகிலின் கதாப்பாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்க்க இயக்குனர் தவறி விட்டார். மேலும் நிகில் திரிதா சௌத்ரி காதல் மோதல் காட்சிகளை கூடுதல் விறுவிறுப்பு கொடுத்திருக்க வேண்டும்.
வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். இசையும், பாடல்களும் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்க வேண்டும்.
மொத்தத்தில், சூர்யா வெர்சஸ் சூர்யா மூலம் ஹாட்ரிக்கை தவற விட்டுவிட்டார் நிகில்!