தினமலர் விமர்சனம்
"பட்டாளம்", "சுண்டாட்டம்" படங்களின் நாயகர்களில் ஒருவரும் விஜய் டிவி புகழ் சரவணன்-மீனாட்சி தொடரின் சமீபத்திய சரவணனுமாகிய இர்பான், ஸோலோ நாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "பொங்கி எழு மனோகரா".
மனைவியை தவறாக புரிந்துகொண்டு அடித்து, துரத்தி விட்டு தன் முரட்டு சுபாவத்தால், மகனை கொடுமை செய்யும் தந்தைக்கும், தாயின் அன்பிற்காக ஏங்கி அவரும், அவரது அன்பும் கிடைக்காமல் தன்னை ஏமாற்றும் காதலிகளிடம் அம்மாவின் அன்பைத் தேடும் மகனுக்குமான பாசப்போராட்டமும், காதல் போராட்டமும் தான் பொங்கி எழு மனோகரா படத்தின் மொத்தக்கதையும்!.
அம்மாவை தெரியாமல், அம்மாவின் அன்பிற்கு ஏங்கும் அப்பா வளர்த்த பிள்ளையாக இர்பான் கச்சிதம். அர்ச்சனா, அருந்ததி நாயர் என அடுத்தடுத்த கதாநாயகிகளிடம் தன் தாயை தேடி ஏமாறும் இடங்களும் இதம்!. அதற்காக அப்பா சம்பத்ராமின் பால் வியாபாரத் தொழிலில் உதவுகிறேன் பேர்வழி... என அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் பில்-டப் காட்டுவதெல்லாம் ரொம்ப ஓவர் சுத்த போர்!.
பஞ்சுமில்லில் வேலைசெய்தபடி இர்பானை, டாவடித்து., பணக்கார மாப்பிள்ளை கிடைத்தும் எஸ் ஆகும் அர்ச்சனாவும் சரி., பெட்டிக்கடை அழகி அருந்ததி நாயரும் சரி, தாயின் அன்பிற்கு ஏங்கும் இர்பானின் மனதை புரிந்துகொண்டார்களோ இல்லையோ...ரசிகர்களின் மனதை நன்கு புரிந்துகொண்டவர்களாக ஆடல், பாடல் காட்சிகளில் கிளாமரில் கிக் ஏற்றுவது ஆறுதல்!.
சம்பத்ராம் மனைவியை தவறாக புரிந்துகொண்டு விரட்டிவிட்டு., மகனை விரட்டி விரட்டி அடித்து உதைக்கும் முரட்டு சுபாவ அப்பாவாக கச்சிதம்!. சிங்கம்புலி, சிரிப்பு புலியாக சில இடங்களில் சீறுகிறார். பல இடங்களில் கடித்து குதறி இருக்கிறார். இர்பானின் அம்மா குற்றமற்றவர்..என பிளாஷ்பேக் சொல்லும் ஆதேஷ் நடிப்பும் அபாரம்!. கண்ணனின் பின்னணி இசை, சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிளஸ் பாயிண்டுகள் இருந்தும் ரமேஷ் ரங்கசாமியின் இயக்கத்தில் இருக்கும் நாடகத்தன்மையும், படம் முழுக்க இருக்கும் காட்டு கூச்சலும், "பொங்கி எழு மனோகரா"வை பார்த்து, ரசிகர்களை பொங்கி அழ வைத்துவிடுகிறது!. பாவம்!!.
கல்கி சினி விமர்சனம்
காதல் மற்றும் அம்மா சென்டிமென்ட்டைக் குழப்பி, எதுவும் சரிவராமல் பொங்கி வழிந்திருக்கிறது படம். நாடகம் போடுவது பற்றிய கதையைச் சொல்லும் படம் என்பதாலோ என்னவோ படம் முழுவதும் நாடக பாணியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. நாடகங்களின் பின்னணியில் சில படுதாக்களையே மாற்றி மாற்றிக் காட்டி சீன் போடுவதைப்போல பல காட்சிகளும் ஒரு சில லொகேஷன்களிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. சில நடிகர்கள் பேசுகிறார்கள். பேசுகிறார்கள்... பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பேச்சில் நகைச்சுவையை சிரமப்பட்டுத் தேடினாலும் சிக்கமாட்டேன் என்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் அசரீரியாக ஒரு குரல் ஒலித்துக் கதை பற்றி பில்ட் அப் கொடுக்கும் அரதப் பழசான உத்தியையும், பார்த்துத் தேய்ந்து போன டாஸ்மாக் காட்சிகளையும், கதாநாயகனுடன் கூடவே சுற்றும் வெட்டி நண்பர்களின் கோமாளித்தனத்தையும் படமாக்குவதை எப்போதையா நிறுத்தப் போகிறீர்கள்?
ஆறுதலான விஷயமே இல்லையா என்கிறீர்களா? ம்ம்ம்... மளிகைக் கடைக்காரப் பெண்ணாக வரும் அருந்ததி நாயரின் அழகு மற்றும் தெளிவான ஒளிப்பதிவு, மனதை வருடும் பாடல் வரிகள்... இவற்றைச் சொல்லலாம்.
பொங்கி எழு மனோகரா - தூங்கி வழியும் அரோகரா!