தினமலர் விமர்சனம்
பிரபல பெண் பின்னணி குரல் கொடுப்பாளர்(டப்பிங் ஆர்ட்டிஸ்ட்) ஹேமமாலினி, பத்திரிகை புகைப்பட கலைஞர் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஜே.வி.தம்பதியினரின் வாரிசு, மதுரகுராம் வில்லானிக், ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம், 'முருகா', 'பிடிச்சிருக்கு', 'கோழிகூவுது' படங்களின் நாயகர் அசோக், கதாநாயகராக நடித்திருக்கும் அடுத்தபடம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம்தான் 'காதல் சொல்ல ஆசை!'
போலீஸ் கான்ஸ்டபிள் அப்பாவுக்கு பிடித்த போலீஸ் வேலையில் சேர பிடிக்காத ஹீரோ அசோக், வீட்டை விட்டு வெளியேறி அதே ஊரில் நண்பர்களுடன் தங்கி, வேறு வேலை தேடி அலைகிறார். ஒருநாள் ஒரு பெரும் பணக்கார தொழில்அதிபரின் உயிரை, அவரை கொல்ல வருபவர்களிடமிருந்து காபாற்ற அவர், அசோக்கிற்கும், அவர் நண்பர்களுக்கும் தனது கம்பெனியிலேயே நல்ல சம்பளத்தில் உத்தியோகம் தருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகி வஷ்னா மீது அசோக்கிற்கு காதல். வஷ்னாவுக்கும், அசோக் மீது காதல்! ஆனால் இருவரும் காதலை வெளிப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பணக்கார தொழில்அதிபரின் ஒற்றை வாரிசு மதுரகுராம், அப்பாவின் தொழிலை கவனித்துக் கொள்ள வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்புகிறார். வந்த இடத்தில் வஷ்னா, மதுரகுவின் இறந்துபோன காதலி மாதிரியே இருப்பது கண்டு அவர் மீது, அவருக்கும் காதல் வருகிறது. சில சூழ்நிலை சந்தர்ப்பங்களால் வஷ்னாவும், மதுரகுராமும் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கருதும் அசோக், இருவருக்கும் இடைஞ்சலாகத்தான் அங்கு அதே அலுவலகத்தில் இருக்கக்கூடாது எனக்கருதி, அப்பா ஆசைப்பட்ட போலீஸ் வேலைக்கு முயற்சித்து வேறு ஊருக்கு போகிறார். மதுரகுராமும், வஷ்னாவும் மாலை மாற்றிக் கொண்டனரா? அல்லது வஷ்னாவின் மனம் அசோக்கிற்கு புரிந்து காதல் தெரிந்ததா...? என்பது நீட்டி முழங்கும் மீதிக்கதை!
அசோக், வழக்கம்போலவே நிறைய உழைத்திருக்கிறார், நிறைவாய் நடித்திருக்கிறார். மதுரகுராம், புதுமுகம் என்று தெரியவில்லை... இயல்பாய் பெரிய இடத்து பிள்ளையாக கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.
வஷ்னாவுக்கு பெரிசா வாய்ப்பில்லைன்னா. பணக்கார தொழில்அதிபராக மதுரகுராமின் அப்பாவாக ரவிராகவேந்தர், வில்லன் ராஜேந்திரன், அசோக்கின் நண்பர் காமெடி காளி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
அசோக் விரும்பும் நேரத்தில் போலீஸ் தேர்வு தயாராக இருப்பதும், வில்லன் ராஜேந்திரனின் காமெடி பேர்வழியா? கடுகடு பேர்வழியா? என குழப்பங்கள் ஏற்படுவதையும், படம் சற்றே இழுவையாக தெரிவதையும் குறையாக கருதாமல் பார்த்துவிட்டு வந்தோமென்றால், எம்.லேகாவின் இசை, ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு, கே.எஸ்.தமிழ்சீனுவின் இயக்கம் எல்லாம் இனிக்கும்!
ஆகமொத்தத்தில், 'காதல் சொல்ல ஆசை' - கடுப்பேற்றவுமில்லை - கருத்து சொல்லவுமில்லை! ''கலர்புல் ஆசை!''