தினமலர் விமர்சனம் » ஒரு ஊர்ல
தினமலர் விமர்சனம்
இளையராஜாவின் இசையில் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளிவந்திருக்கும் ஓர் தாலாட்டு காவியம், அழகிய குடும்பசித்திரம் தான் "ஒரு ஊர்ல மொத்த படமும்!
பழைய இரும்பு, பிளாஸ்டிக் பாட்டில்கள், செய்திதாள்கள் வாங்கும் காயலான் கடையில் வேலை பார்க்கும் மொடா குடிகாரன் தேரிச் செல்வன். லட்சியம் ஏதுமில்லாமல் சதா சர்வகாலமும் குடித்து தள்ளாடி நடந்து ரோட்டில் விழுந்து கிடக்கும் தேரிக்கு, தன் அண்ணன் மகள் பிறந்ததும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது.
அண்ணன் மகள் குட்டிம்மாவின் வாயிலாக தன் இறந்து போன தாயை திரும்ப பெற்றதாக கருதும் தேரிச்செல்வம், குடிப்பழக்கத்தில் இருந்து தேறி, அண்ணன் மகளே உலகம் என்று வாழ்கிறார். குழந்தை வளர்கிறது. பள்ளிக்கூடத்திற்கு அழைத்து போகிறார். பாசத்தை பொழிகிறார். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது குழந்தை கடத்தப்பட்டு காணாமல் போகிறது. குழந்தையை கடத்தியது யார்? குழந்தை திரும்ப கிடைத்ததா இல்லையா? குழந்தை கடத்தப்பட காரணம் என்ன.? என்பது உள்ளிட்ட இன்னம் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் யாரும் எதிர்பாராத கோணத்தில் திகிலாக பதில் சொல்கிறது ஒரு ஊர்ல படத்தின் மீதிக்கதை!
தேரிச்செல்வமாக புதுமுகம் வெங்கடேஷ், பாத்திரமாகவே பளிச்சிட்டிருக்கிறார். மொட குடிகாரனாகவும், பாசமுள்ள சித்தப்பாவாகவும் இருவேறு பரிமாணங்களில் சவாலாக நடித்திருக்கும் வெங்கடேஷ், பழயை ராஜ்கிரணை ஆங்காங்கே ஞாபகப்படுத்தும் விதமாக நடித்து சபாஷ் சொல்ல வைத்து விடுகிறார். அதிலும் திருந்திய பின் ஒருநாள் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் தன் அருகே வீட்டை விட்டு வெளியில் வந்து படுத்து கிடக்கும் குழந்தையை பாதி ராத்திரியில் பார்த்து பதறும் இடத்திலும், க்ளைமாக்ஸில் குழந்தை கடத்தப்பட்டது தெரிந்ததும் அவர் துடிக்கும் இடங்களும், இரக்கமில்லாதோர் கண்களிலும் கண்ணீர் வரழைத்து விடும் நடிப்பு!
வெங்கடேசை ஒரு தலையாக காதலிக்கும் நேகா பட்டேல் ஓ.கே. அதுவும் டெங்கு கொசு விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் உடன் வரும் பெண்கள் குழு செம காமெடி! குட்டிம்மாவாக வரும் பேபி சவுந்தர்யா செம க்யூட்! சித்தப்பாவிடம் அன்பு பொழிவதிலாகட்டும், அவரை அதட்டி உருட்டி வழிக்கு கொண்டு வருவதிலாகட்டும் ஜொலிக்கிறார் அம்மணி. கடைசியில் அவரது முடிவும், அவரால் சித்தப்பா எடுக்கும் முடிவும் கண்ணீர்!
அருள் வின்செண்ட், டி.எஸ்.வாசனின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் படம் பார்க்கும் நம்மையும் "ஒரு ஊர்ல படத்தோடு ஒன்றவைத்து விடுகின்றன.
வசந்தகுமாரின் இயக்கத்தில், ஹீரோவின் பெரிய மனித அண்ணனின் அந்தரங்க லீலைகளை வீடியோ படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டும் கும்பல், அவரது குழந்தையையும் கடத்த வேண்டிய அவசியம் என்ன.? எனும் கேள்வி எழுவது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும்,
"ஒரு ஊர்ல - உருக்கம் புள்ள.