தினமலர் விமர்சனம் » கிரிஷ்-3
தினமலர் விமர்சனம்
இயற்கை விதிக்கு எதிராக மரபணுவில் மாற்றம் செய்து நடந்த சோதனையில்... ஒரே தகப்பனின் இரு மகன்கள் நல்லவனாகவும், கெட்டவனாகவும் பிறந்து, ஒருவரை ஒருவர் அழிக்கப் போராடும் விஞ்ஞானப் படம்... க்ரிஷ் 3
விஞ்ஞானி ரோஹித் மெஹ்ராவின் (ஹிருத்திக்) ஒரே மகன் க்ரிஷ் (எ) கிருஷ்ணா (ஹிருத்திக் ரோஷன்), அற்புத சக்திகள் படைத்தவன்! அவனுடைய காதல் மனைவி பிரியா (பிரியங்கா சோப்ரா). பனிமலைகளின் சிகரத்தில், கொடூர வில்லன் கால் (விவேக் ஓபராய்), ஒரு சோதனைக்கூடம் அமைத்து, தனது மரபணுவோடு, மிருகங்களின் மரபணுவை இணைத்து, மனித மிருகக்கூட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். இவனும் ரோஹித்தின் மரபணுவில் உருவானவன்தான்! அவனது கைப்பாவையாக, நினைத்த நொடியில் உருவம் மாற்றும் காயா (கங்கனா ராவத்)! ஒரு நச்சுக்கிருமியை உண்டாக்கி, உலகில் பலரை சாகடிக்கும் கால்... அதற்கு மாற்று மருந்தையும் உண்டாக்கி, அதைப் பெரும் விலைக்கு விற்கிறான். இந்தியாவை நோக்கியும் அவன் பார்வை திரும்புகிறது. க்ரிஷ், இந்தியாவை காப்பாற்றுகிறான்!
ஹிருத்திக் 'கும்'மென்றிருக்கிறார். பக்கவாத்தியமாக வரும் பிரியங்கா 'ஜம்'! விவக் ஓபராய், கச்சிதம்! நம்மூர் 'திரு'தான் ஒளிப்பதிவு! மனிதரின் உழைப்பை, ஒவ்வொரு காட்சியும் சொல்கிறது. சபாஷ்!
கிராஃபிக்ஸ்... படத்தின் பலம்! அதை சரியாக செய்திருப்பதால் கொள்ளை போகிறது நம் மனம்!
மொத்தத்தில் 'க்ரிஷ் 3' - 'கிராஃபிக்ஸ் திருவிழா'
ரசிகன்குரல்: க்ரிஷுக்கு பொறந்த குழந்தை பறந்துருச்சு பார்த்தியா! கண்டிப்பா 'க்ரிஷ் 4' இருக்கு!------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
ஹீரோ ஒரு சூப்பர் மேன். அநியாயம் எங்கே நடந்தாலும் பறந்து போய் அதைதட்டிக்கேட்பவர். ஹீரோவோட அப்பா ஒரு சயிண்டிஸ்ட். சூரிய ஒளிக்கதிர்களை வெச்சு ஆராய்ச்சி பண்ணி புதுசா ஒண்ணு கண்டு பிடிக்கறாரு. இறந்து போன மனித உடல்ல அல்லது தாவர, விலங்கு உடல்ல சூரிய ஒளியை குறிப்பிட்ட விகிதத்துல செலுத்தினா இறந்த உடல் உயிர் பெறும். இந்த அபாரமான கண்டு பிடிப்பை அவர் உலகத்துக்கு டெமோ பண்ணி காட்டி நிரூபிக்கிறார். வில்லனின் லட்சியமே தன் செயல் இழந்த உடல் உறுப்புகளை எப்படி இயங்க வைப்பது? என்பது பற்றித்தான்.
அதுபோக அவர் உலகம் பூரா மனித உடல்ல வைரஸ் மூலமா நோயைப்பரப்பி மனித இனத்தைஅழிக்கணும், புதிய உயிர் இனங்களை உருவாக்கணும்னு நினைக்கிறார். வைரஸ் நோயை மனிதனிடம் பரப்பணும், பின் அந்த நோயை குணம் ஆக்க ஆண்ட்டி பயோடிக் மருந்தை விற்பனை செய்யணும். இந்த உயர்ந்த லட்சியத்தோட வில்லன் ஆராய்ச்சியாளர்களை வெச்சு வேலை வாங்கிட்டு இருக்கார். தன் திட்டப்படி உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள சீனாவை விட்டுட்டு இந்தியாவில் மும்பையில் வைரஸ் பரப்புறார். மும்பை மக்கள் எல்லாருக்கும் நோய் பரவுது. ஆனா ஹீரோ, அவங்கப்பாவுக்கு மட்டும் பரவலை.
உடனே ஹீரோவோட அப்பா தன் ரத்தத்துல ஏதோ சக்தி இருக்கு, அந்த ரத்தம் மூலமா மருந்து கண்டு பிடிக்கணும்னு ஆராய்ச்சி பண்ணி மருந்து கண்டுபிடிச்சு எல்லாரையும் குணம் ஆக்கிடறார். வில்லன் செம காண்ட் ஆகிடறான். இது எப்படி நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க தன் கிட்டே இருக்கும் ஒரு லேடியை அனுப்புறான்.
புராண கதைல சூர்ப்பனகை கேள்விப்பட்டிருப்பீங்க. தன் விருப்பப்படி தோற்றம் எடுக்கும் சக்தி உள்ள பெண். அந்த மாதிரி சக்தி உள்ள பெண் ஹீரோ இடத்துக்குப்போய் அங்கே மாசமா இருக்கும் ஹீரோவோட மனைவியை வில்லன் ப்ளேஸ்க்கு அனுப்பி ஹீரோ மனைவி மாதிரி ஆள் மாறாட்டம் பண்ணி அங்கே இருக்கிறார்.
ராவணன் ராமர் உருவம் எடுத்து சீதையை அடைய நினைக்கும்போது ராமன் குணம் ராவணனுக்கும் வந்த மாதிரி வில்லிக்கு ஹீரோ மேல ஏற்பட்ட காதலாலோ அல்லது ஈர்ப்பினாலோ வில்லனுக்கு சாதகமா எதுவும் செய்யலை.
ஹீரோ தன் மனைவி மாறிடுச்சுன்னு கண்டு பிடிச்சாரா? ஹீரோவும், வில்லனும் அண்ணன் தம்பி தான் என்ற சஸ்பென்ஸை தெரிஞ்சு ஹீரோ என்ன செஞ்சார் ? என்பதை எல்லாம் வெண் திரையில் காண்க..
ஹிருத்திக் ரோஷன் தான் ஹீரோ. டபுள் ஆக்டிங்க். கமல் தான் இவருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கனும். பாடி லேங்குவேஜ், குரல் எல்லாத்துலயும் நல்ல வித்தியாசம் காட்டி நடிச்சிருக்கார். ஹிந்திப்படம் அதிகம் பார்க்காதவர் படம் பார்த்தால் அப்பா, மகன் இருவரும் வேறு வேறு ஆள் என்று நினைப்பாங்க. வெரிகுட் நடிப்பு. ஆனா அவர் ஒரு பாடல் காட்சியில் குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு லோ லோ ஹிப் ஜீன்சில் டாப்லெஸ்சாக வருவதெல்லாம் ஓவரோ ஓவர் . அதுக்கு டீன் ஏஜ் பொண்ணுங்க விசில் வேற
ப்ரியங்கா சோப்ரா தான் நாயகி. நாயகனுக்கு மனைவியா வர்றார். பிரமாதமான நடிப்பு என அள்ளிக்கவும் முடியாது, மோசமான நடிப்பு என தள்ளிவிடவும் முடியாது . வந்தவரை ஓக்கே . பாடல் காட்சிகளில் இவர் பெரிதாக கிளாமர் காட்டாமலேயே கண்ணியம் காட்டியது ஆச்சரியம் .
ஒல்லி நல்ல வில்லியாக கங்கனா ரணாவத். இவர் படம் முழுக்க புறமுதுகு முழுவதும் காட்டிய இளவரசியாக வலம் வருகிறார். செம கிளாமர் நடிப்பு .
வில்லனாக விவேக் ஓபராய். எக்ஸ்மேன் படங்களில் வருவது போல் இவர் படம் முழுக்க வீல் சேரிலேயே வந்தாலும் கடைசி அரை மணி நேரம் பட்டாசு கிளப்பி விடுகிறார்.
பாடல் காட்சிகள் பிரமாதம் என்று சொல்லும் அளவு இல்லை. கிராபிக்ஸ் காட்சிகள் கன கச்சிதம். ட்ரெய்லரில் மிரட்டிய அளவு படத்தில் மிரட்டவில்லை. பின்னணி இசை சுமார் தான்.
சி.பி.கமெண்ட் : முன் பாதி சுமார், பின் பாதி வேகம். பல ஹாலிவுட்டின் காக்டெய்ல் - பாலிவுட்டில் செம ஹிட் ஆகிடும். பெண்கள், குழந்தைகள் பார்க்கும் விதமாத்தான் இருக்கு. ஃபேண்ட்டசி, மேஜிக் ரியலிசம் வகையறாப்படங்கள் ரசிப்பவர்கள் பார்க்கலாம்.