முழுக்க முழுக்க நம்மூரில் உள்ள உலகப்புகழ் வாய்ந்த மகாபலிபுரம் எனும் சுற்றுலா தளத்தையே மையமாக கொண்டு வௌிவந்திருக்கும் திரைப்படம், டான் சாண்டி எனும் புதியவரின் இயக்கத்தில், புதிய பாணியில் வௌிவந்திருக்கும் க்ரைம், த்ரில்லர் திரைப்படம் தான் மகாபலிபுரம்.
கதைப்படி, மகாபலிபுர வீதிகளில் கைடாகவும், அங்கு உருவாகும் சிற்பங்களை ஏற்றி சென்று விற்பனை செய்யும் ட்ரை சைக்கிள் ரைடராகவும், அந்த ஊர் பெரும் புள்ளியின் கையாளாகவும், கிடைத்த வேலைகளை எல்லாம் செய்யும் நான்கு லோக்கல் இளைஞர்கள், நண்பர்கள்! இவர்கள் நால்வருக்கும் நல்ல உத்தியோகம் பார்க்கும் ஒரு காஸ்ட்லீ நண்பனும் இருக்கிறார். அவருக்கு காதல் திருமணமாகி அவரது மனைவி, இவர்களுடன் சகோதரியாக பழகுகிறார். மேற்படி நான்கு நண்பர்களில் இரண்டு பேரின் பணத்தாசையாலும், பதவி ஆசையாலும் அந்த காஸ்ட்லீ காதல் கல்யாண ஜோடியும், இந்த நால்வரில் ஒருத்தரின் காதலியும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக்கப்படுவதும், அது வீடியோவாக வௌிவருவதும், அதனால் அந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொல்வதும், தன் காதலியும், தன் கைகளாலேயே... கொல்லப்படுவதும் கண்டு வெகுண்டெழும் ஹீரோ, பெரும்புள்ளிக்கு எதிராக பொங்கி எழுவதும் அவரையும், அவரது அயல்நாட்டு சகாக்களையும் போட்டு தள்ளுவதும் தான் மகாபலிபுரத்தின் கரு, கதை, களம் எல்லாம்...!
ஒத்தவடையாக கருணாகரன் நட்புக்குள்ளேயே துரோகியாக கச்சிதமாக நடித்திருக்கிறார். அவரை மாதிரியே சதீஷ்-வெற்றி, குப்பன்-ரமேஷ், பஞ்சா-விநாயக், சாமி-கார்த்திக் உள்ளிட்டவர்களும் கச்சிதம்! அதிலும் பஞ்சாவாக வரும் புதுமுகம் விநாயக் மகாபலிபுர வாசியாகவே வாழ்ந்து, காதலியை தன் கையாலேயே கொல்வதும், வில்லன்களை பழிவாங்குவதும் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருப்பது மகாபலிபுரம் படத்தின் பெரும்பலம்! கனடா பெண்ணுடன் செட்டிலாகும் குப்பனின் வாழ்க்கை காமெடி சுவாரஸ்யம்! கடைசிவரை அவரது அயல்நாட்டு வாழ்க்கையும் பாத்திரமும் கதையுடன பின்னப்பட்டிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்!
நாயகியர் மகாலட்சுமியாக வரும் விருத்திகா, சங்கீதாவாக வரும் அங்கனா இருவரது பாத்திரமும் பங்களிப்பும் உருக்கம்! துரையாக பெரும்புள்ளியாக வரும் ஜெயக்குமார் நல்லவர் மாதிரியான கெட்டவர் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்!
கேயின் இசை, சந்திரன் பட்டுசாமியின் ஔிப்பதிவு, கிம் ஆமின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் டான் சாண்டியின் எழுத்து, இயக்கத்தில் அழகிய மகாபலிபுரத்தில் அரங்கேறும் கொடூர யதார்த்தத்தை சொல்லியிருக்கும் மகாபலிபுரம் பெயருக்கேற்ற மாதிரியே மகாபலிபுரமாக தெரிகிறது! பின்பாதியில் இருக்கும் விறுவிறுப்பையும், வித்தியாசத்தையும் இயக்குநர் முன்பாதியிலும் இன்னும் சற்றே கூட்டி காட்டியிருந்தார் என்றால் மகாபலிபுரம் மேலும் மனங்கவர்ந்திருக்கும்! அவ்வாறு இல்லாதது மகாபலிபுரத்தை வெறும் பலிபுரமாகவே காட்டுகிறது பாவம்!!
கல்கி விமர்சனம்
பெண்களைக் கேவலமாகப் படம் எடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் படம் என்று சுற்றி வளைத்துப் பட இறுதியில் அசரீரி ஒலிப்பதை வைத்து படம் அருமை என்று நினைத்துவிட வேண்டாம்.
வழக்கம்போல படத்தின் ஆரம்பத்தில் படத்தைப் பற்றிய பில்ட் அப், வெட்டித் தடியர்களாக ஐந்து நண்பர்கள், டாஸ்மாக் கட்சிகள் என்று பழைய நெடி வீச்சமாய் அடிக்கிறது. பாதியிலேயே ஒருவர் செத்துப் போகிறார். ஒருவர் கனடா போய் அடிக்கடி போனில் மட்டும் பேசுகிறார். இன்னும் இரண்டு பேர் வில்லன்கள். மிச்சம் இருக்கும் பேர்வழி கதாநாயகன் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். பட்டப் பகலில் கொலையான பிணத்தைப் புதைப்பது, சரியாகக் கொலையாகாமல் கோணிப் பைக்குள் இருக்கும் உருவத்தை மண்டையில் பொடேர் என்று தாக்கிக் கொல்வது இவைதான் மிச்சமிருக்கும் கதாநாயகத் தம்பியின் குணாதிசயம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
படத்தின் முன்பகுதி சரியான ஜவ்வ்வ்வ்வு இழுவை. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளைக் கொண்டே முழுப்படத்தையும் சொல்லியிருக்க முடியும். சந்தர்ப்பம் தெரியாமல் பாடல்களை நுழைத்திருப்பது படத்தின் இன்னும் ஒரு மைனஸ் பாயின்ட்.
ஏறக்குறைய திரைப்படத்தின் அத்தனை காட்சிகளிலும் மதுக்கோப்பைகளுடன் கதாபாத்திரங்கள் வலம் வருவது பார்க்கவே அருவருப்பு. திராபையாக ஒரு நியூ இயர் கொண்டாட்டப் பாட்டு வேறு இம்சிக்கிறது. பாடல்களின் வரிகள் நினைவில் நிற்கவில்லை.
மகாபலிபுரம்: மகாவலிபுரம்!