Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அனேகன்

அனேகன்,Anegan
04 மார், 2015 - 14:17 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அனேகன்

தினமலர் விமர்சனம்சின்னப்பிள்ளைகளுக்கு கூட சினேகமாக தெரியும் தனுஷ், அனேகனாக பல பாத்திரங்களில் பல ஜென்மங்களில் வாழ்ந்திருக்கும் திரைப்படம், அயன், கோ, மாற்றான் உள்ளிட்ட கமர்ஷியல் சினிமாக்களிலேயே மாற்று சினிமாவை தரும் இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வந்திருக்கும் படம், பிரபல எழுத்தாளர்கள் சுபாவின் எழுத்துக்களில் வந்திருக்கும் மற்றுமொரு வித்தியாச படம், ஹாரீஸ் ஜெயராஜின், டங்கமாரி ஊதாரி... எனும் சூப்பர்ஹிட் பாடல் தந்திருக்கும் படம், பிரமாண்ட நிறுவனமான ஏ.ஜி.எஸ்.தயாரிப்பில் வௌிவந்திருக்கும் மற்றொரு பிரமாண்டம்... இப்படியாக அனேகன் பற்றி அனேக எதிர்பார்ப்புகளை இப்படம் எவ்வாறு பூர்த்தி செய்திருக்கிறது என்று இனி பார்ப்போம்...!கதைப்படி, பர்மா போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் அனேகன் கதையும், காட்சிகளும் ஆரம்பமாகிறது. தனுஷ் பல வருடங்களுக்கு முன் பர்மா வாழ் தமிழர். அங்கு கொத்தனார்... இல்லை இல்லை சித்தாள் வேலை பார்த்தபடி வயிற்றை கழுவும் அவர் மீது காதல் கொள்கிறார் பர்மா பாதுகாப்பு அதிகாரி வீட்டு பெண் அமைரா தஸ்தூர். இச்சமயத்தில் பர்மா வாழ் தமிழர்களுக்கு எதிரான போர் தொடங்குகிறது.அந்த பர்மா போரின் போது அங்கிருந்து அகதியாக தாய்நாட்டுக்கு கிளம்பும் தனுஷ், தன்னுடன் தன் காதலியையும் கூட்டிக்கொண்டு சென்னை வர கப்பல் ஏறுகிறார். ஆனால் கப்பல் கிளம்பும் நேரத்தில், உடனிருக்கும் தோழியே பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனுஷ்-அமைரா ஜோடியை காட்டி கொடுக்க, அந்த பாதுகாப்பு அதிகாரியின் தொடர் துப்பாக்கி குண்டுகளுக்கு பயந்து கப்பலில் இருந்து கடலுக்குள் பாய்கிறது இந்த காதல் ஜோடி. ஆனாலும், பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு தனுஷ் இரையாகிறார், உடன் நாயகி அமைராவும் தன் உயிரை மாய்த்து கொள்கிறார்.இந்நிலையில், சென்னையில் பல வருடங்களுக்கு பின் அனேகன் கதையும், காட்சிகளும் விரிகிறது. வசதியான குடும்பத்து பெண்ணாக அமைரா, கார்த்திக் முத்துராமன் நடத்தும் புதுபுது கணிப்பொறி விளையாட்டுகளை உருவாக்கும் ஐடி., கம்பெனியில் கைநிறைய சம்பளத்துடனும், மனம்நிறைய மகிழ்வுடனும் வாழ்கிறார். அவருக்கு பூர்வ ஜென்மத்து ஞாபகங்கள் அடிக்கடி வந்து போகிறது. அதற்காக அந்த ஹைடெக் ஐடி., கம்பெனி செலவிலேயே அடிக்கடி ஒரு பெண் மனநல மருத்துவரை சந்திக்கிறார் அமைரா. ஆனாலும், தன் பூர்வ ஜென்மத்து காதலன் தனுஷை மீண்டும் சந்திப்போம்... எனும் மனநிலையிலேயே இருக்கிறார் அம்மணி.இச்சமயத்தில், வசதிகுறைவான வீட்டிலிருந்து வரும் தனுஷூம் இந்த ஐடி., கம்பெனியில் முக்கிய பொறுப்பேற்கிறார். தனுஷை பார்த்ததும் தன் புனர் ஜென்மத்து காதலன் கிடைத்துவிட்டான் என... அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் அமைரா. இவர் சொல்லும் பூர்வ ஜென்ம பிளாஸ்பேக் கதைகள் தனுஷூக்கு., அமைராவை ஐடி ஒர்க் டென்ஷனால் ஏதோ மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் பெண்ணாகவே காட்சியளிக்க செய்கிறது. இதனால் இந்த ஜென்மத்தில் அமைரா மீது காதல் இருந்தும் இல்லாத மாதிரி காட்டிக் கொள்ளும் தனுஷ், ஒருகட்டத்தில் உண்மைகளை உணருகிறார். அதன்பின் தடை பல கடந்து, இன்னும் இரண்டு ஜென்மங்களை கடந்த இந்த காதல் ஜோடி, இந்த ஜென்மத்திலாவது ஒன்று சேர்ந்ததா இல்லையா..? என்பது தான் அனேகன் படத்தின் மீதிக்கதை!பூர்வ ஜென்மமா..? சாகசங்களை ஊக்குவிக்கும் வீரிய மருந்தின் விளைவா..? பிரமையா...? கனவா..? நிஜம்தானா..? இல்லை அதீத காதலா...? என்பதை யூகித்தும், யூகிக்க முடியாமல் மேற்படி வித்தியாசமும், விறுவிறுப்புமான விஷயங்களை அனேகன் கதையுடன் கலந்துகட்டி ரசிகர்களை பிரமிக்க வைத்திருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.தனுஷ் - அமைரா தஸ்தூர் ஜோடி முருகன்-சமுத்திரா, காளி-கல்யாணி, இளமாறன்-செண்பகவள்ளி, அஸ்வின்-மது என நான்கு ஜென்ம பாத்திரங்களிலும் பலே சொல்லும் அளவிற்கு பளிச்சிட்டிருக்கின்றனர்.அதிலும் தனுஷ், சவாலான பாத்திரங்களை ஏற்று நடிக்கவே பிறந்தவர் என்பது போன்று பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். டங்கமாரி ஊதாரி... பாடலில் வரும் காளி பாத்திரத்திலாகட்டும், ஐடி., இளைஞர் அஸ்வினாவதிலாகட்டும், பர்மாவாழ் மூணா ருணாவாக (முருகன்) கப்பலில் இருந்து காதலியுடன் கடலில் பாயும் காட்சிகளில் ஆகட்டும்... என ஒவ்வவொரு சீனிலும் ஒவ்வொரு உயரத்தை தனது நடிப்பிலும், துடிப்பிலும் தொட்டிருக்கிறார் தனுஷ். பேஷ் பேஷ்!


தனுஷ், வீட்டோட மாப்பிள்ளையா சோறு தின்பதற்கு நான் என்ன கேவலமான பிறவினு நினைச்சியா..., ரூ.20 கோடி ரூ.200-னு பணமும், சொத்தும் வச்சுகிட்டு எதுக்குடா ரூ.50 ஆயிரம் சம்பளத்திற்கு உங்க வீட்டு பொண்ணுங்கள வேலைக்கு அனுப்புறீங்க... என பரபரப்பாய் பன்ச் டயலாக் பேசுவது யார் வீட்டு பெண்களை குத்துகிறார்.? யார் வீட்டு மாப்பிள்ளைகளை சொல்கிறார்.? என்பது தனுஷூக்கே வௌிச்சம்.


அமைரா தஸ்தூர் அமைதியே உருவாக வரும் காட்சிகளிலும் சரி, ஐடி., யுவதியாக அல்ட்ரா மாடர்ன் கேரக்டரில் வரும் காட்சிகளிலும் சரி, புதுமுகம், அறிமுகம் என்பதே தெரியாதவாறு அசத்தியிருக்கிறார். அதிலும், அந்த வியாசர்பாடி பிராமணத்து பெண்ணாக மணக்கிறார், கமகமக்கிறார்.


இதுநாள் வரை காதல் கதாநாயகராக நமக்கு தெரிந்த கார்த்திக் முத்துராமன், அனேகனில் எதிர்பாராத அளவிற்கு வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருப்பது ஹைலைட்!


மேற்படி நட்சத்திரங்களை போன்றே மீராவாக வரும் ஐஸ்வர்யா தேவன், ராதாகிருஷ்ணன்-முகேஷ் திவாரி, கோபிநாத்-ஆஷிஸ் வித்யார்த்தி, ஓவியர் மூர்த்தி-தலைவாசல் விஜய், ஜெகன்-செம்புலி ஜெகன், டாக்டர் ராதிகா-லெனா, வினயா-வினயா பிரசாத், பாவனா-கிருஷ்ணவேணி, கிரண்-ரஞ்சித் உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் அனேகன் படத்தில் பக்காவாக பேசி நடித்திருக்கிறது.


ஓம்பிரகாஷின், தமிழ்சினிமா இதுவரை பார்த்திராத அழகிய லொக்கேஷன்களை உள்ளடக்கிய ஒளிப்பதிவு, ஹாரீஸ் ஜெயராஜின் இனிய இசையில், அனேகன் முதல்பாடலில் மரியான் படத்தில் ஏ.ஆர்.ஆர். இசைத்த, இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன... பாடலின் ராகம் பாமரனுக்கும் தெரியும் அளவு ஒலித்தாலும், அடுத்தடுத்த பாடல்களில் சில இங்கிலீஷ் மியூசிக் ஆல்பங்களின் டியூன்கள் ஜொலித்தாலும், பின்னணி இசையில் அங்காங்கே இளையராஜா தெரிந்தாலும், அனேகன் மொத்த படத்திற்கும் டங்கமாரி ஊதாரி... எனும் ஒற்றை குத்துப்பாடலில் தனித்து பளபளத்திருக்கிறார் ஹாரீஸ்.ஒருபடம் ஒரே கதை என்றாலே நம் படத்தொகுப்பாளர்கள் வெட்டக்கூடாத இடத்தில் வெட்டியும், ஒட்டக்கூடாத இடத்தில் ஒட்டியும் ஏகத்துக்கும் சொதப்புவார்கள். ஆனால் ஒரேபடம் நான்கு ஜென்ம காதல் கதைகள் என விளம்பரப்படுத்தாமல் வௌிவந்திருக்கும் அனேகன் படத்தை அழகாக வெட்டி ஒட்டி படத்தொகுப்பு செய்திருக்கும் ஆண்டனியின் பங்கும், பாங்கும் அலாதியானது.


அனேகன் படத்தில் நான்கு ஜென்மங்களை குழப்பாமல், சொதப்பாமல் படம் பிடித்து காட்டியிருக்கும் கே.வி.ஆனந்த், அடுத்தடுத்த ஜென்மத்திலும் தனுஷ்-அமைரா ஜோடி இல்லாமல் பிற நட்சத்திரங்களையும் ரசிகர்களுக்கு அலுப்பு தட்ட செய்யாமல் மீண்டும் மீண்டும் பங்கேற்க செய்திருப்பது இப்படத்திற்கு பெரும் பலமாக தெரிகிறது! இதுமாதிரி விஷயங்கள் படத்தில் ஆங்காங்கே தெரியும் ஒன்றிரண்டு குறைகளையும் ஒன்றுமில்லாமல் செய்து விடுவது அனேகனுக்கு கூடுதல் பலம்!!தனுஷ்-அமைரா உள்ளிட்டவர்களின் நடிப்பு, ஹாரீஸ் ஜெயராஜ், ஓம்பிரகாஷ், ஆண்டனி உள்ளிட்டவர்களின் தொழில்நுட்பம், எழுத்தாளர்கள் சுபாவின் எழுத்து, கனல் கண்ணனின் அதிரடி ஆக்ஷ்ன் பிளாக்குகள்... உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், கே.வி.ஆனந்த் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு ஜென்மங்கள் உண்டு எனும் கதையை, நான்கு ஜென்மங்களாக சுருக்கி அனேகன் மூலம் தந்திருக்கிறார். அனேகமாக மீதி மூன்று ஜென்மங்களை இன்னும் அழகாக அனேகன் பகுதி-2-ஆக அவர் தந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.மொத்தத்தில், அனேகன் - அனைத்து தரப்பு ரசிகர்களின் சினேகன்!!


கல்கி சினி விமர்சனம்


பொதுவாக மறுஜென்ம கதைகளுக்கென்று நமத்துப்போன ஃபார்முலா ஒன்று இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை முற்றிலும் மாறுபட்டதாக - விறுவிறுப்பாக இருப்பதற்கு முதலில் வாழ்த்துக்களைச் சொல்லலாம். தனுஷூம், அமைராவும் சில பல முன்ஜென்மங்களில் காதலில் தோல்வியுற்றாலும் இறுதியில் சேர்வதுதான் கதையின் ஒன் லைன்.

ஆரம்பத்தில் பர்மாவில் நடக்கும் கதையைச் சொன்ன விதம் அட்டகாசம்! 1962ஆம் ஆண்டு பர்மாவை அப்படியே கண்முன்கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார்கள். கதையோடு அந்தக் காலகட்டத்தின் வரலாறும் திகட்டாமல் சொல்லப்பட்டிருப்பதற்கு ஒரு சபாஷ்! காதலர்களை வில்லி காட்டிக் கொடுப்பது எதிர்பாராத டிவிஸ்ட்!

மிக முன்னேற்றம் அடைந்த ஐ.டி. கம்பெனி காட்சிகளாகட்டும், வியாசர்பாடி மார்க்கெட் காட்சிகளாகட்டும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகின்றன.ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் நேர்த்தியாக இருக்கின்றன.

மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு இருக்கும் பணிச்சுமையும், மன இறுக்கமும் லேசாகத் தொட்டு காட்டப்பட்டிருக்கின்றன. காதலர்கள் கடலில் விழும் காட்சி, லிஃப்ட் விபத்து போன்றவை மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் படமாக்கப்பட்டுள்ளன. நுணுக்கமான காட்சிகளின் மூலமே உணர்வுகளைப் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர். வில்லனின் கையாள் ஒருவனை மீன்கள் இருக்கும் கண்ணாடிச் சுவரில் மோதப் போகும் தனுஷ், அதைத் தவிர்த்து வேறு சுவரில் மோதுவதாகக் காட்சி இருக்கும் காட்சி இதற்கு நல்ல உதாரணம்.

மூனாரூனா தனுஷூக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது காளி தனுஷ்தான்! டங்காமாரி பாட்டின்போது தியேட்டரே ஒரு ட்ரான்ஸ் மனநிலைக்குச் செல்வது தெரிகிறது. கார்த்திக் ஸ்டைலிஷ் வில்லனாகக் கலக்குகிறார்.

கதாநாயகிக்குத் தோன்றும் இல்யூஷன்கள் தமிழ்த் திரையுலகுக்குப் புதிது! கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்த்தாலும் கதை புரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அப்படி வேறு எங்கும் ஒரு நிமிடம்கூடத் திரும்பாமல் படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்கள் அநேகனின் பணிபுரிந்த அநேகம் பேரும்! குறைகள் ஏதாவது சொல்லியே ஆகவேண்டும் என்றால் மேன்டலாகி - சாரி - மென்டலி சிக் ஆகி, விடுதியில் அப்பிராணியாக சுவரில் கிறுக்கிக் கொண்டிருக்கும் தலைவாசல் விஜயைக் கார்த்திக் தேடிப் போய்க் கொல்வது வேஸ்ட் என்பதைச் சொல்லலாம்.

அதே போலக் காற்றில் நடந்து சண்டையிடுவதைத் தனுஷ் தொடருவதையும் குறிப்பிடலாம். கதாநாயகிக்குத்தான் இல்யூஷன் பிரச்னை என்றால் வில்லிக்குமா அதே பிரச்னை? அல்லது மாத்திரை விளைவா? அவர் ஏன் பேய் உருவங்களுக்குப் பயந்து மாடியில் இருந்து குதித்துச் சாகவேண்டும் என்பதும், பிணமானபின் அவர் போடும் சபதம் என்னானது என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு ஏதாவது இல்யூஷன் வந்தால்தான் விளங்கும் போல!


குமுதம் சினி விமர்சனம்


பேய்க்கதை, முன் ஜென்மக்கதை ஃபீவர் - கே.வி. ஆனந்த்தையும் விட்டு வைக்கவில்லை.

1962ல் பர்மாவில் இருந்து தொடங்குகிறது கதை. வழக்கமான ஏழை தனுஷ், அதிகாரத்திலிருக்கும் பணக்காரப் பெண்ணை ஆபத்திலிருந்து தடுக்க, லவ் ஆகிறது. அதை அப்பா வில்லன் ரூபத்தில் தடுக்க, மரணத்தோடு முடிகிறது பர்மா கதை.

சென்னையில் இருக்கும் ஹீரோயின் கனவில் இந்த முன்ஜென்மக்கதையைக் கூற, யாரும் நம்பாதபோது, தற்கால தனுஷ் அவர் வேலை செய்யும் ஐ.டி. கம்பெனியில் சேர அங்கேயும் லவ்வுகிறார்கள். இடையே இன்னொரு முன்ஜென்மக்கதை. 25 வருடங்களாக தீர்க்கப்படாத, ஒரு போலீஸ் கேஸை தோண்டி எடுக்க இந்தக் கதை உதவுகிறது. அதிலும் தனுஷூம் அந்த ஹீரோயினும் வியாசர்பாடி காளியாகவும் அய்யர் ஆத்துப் பெண்ணாகவும் வந்து அதே காதல், அதே சோக முடிவு. இப்படி நான்கு வெவ்வேறு ஜென்மக்கதையை ஒரே புள்ளியில் இணைத்ததில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது இயக்குநருக்கு.

பர்மா ஏழை, ஐடி இளைஞன், வியாசர்பாடி ரவுடி, ஒரு பாடலில் மட்டும் மன்னன் என நடிப்புக்குத் தீனிபோடும் வெரைட்டி கேரக்டர்கள். புகுந்து விளையாடுகிறார் தனுஷ். வியாசர்பாடி காளி கேரக்டரில் ஸ்கோர் செய்கிறார். கெட்டப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நவரச நாயகன் தான் இரண்டு ஜெனமங்களிலும் வில்லன். பெரிய இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் அதே துள்ளல். ஐ.டி. கம்பெனி முதலாளி வேடத்தில், அவரது உடல்மொழி அசத்தல், வில்லத்தனத்தில் வெறித்தனம்.

ஹீரோயின் அமைரா பளிச் பளிச். இவரைச் சுற்றியே கதை நகர்வதால், நடிப்புக்கு அதிக வாய்ப்பு, அழகான நடிகைகள் வரிசையில் இடமுண்டு.

ஆசிஷ் வித்யார்த்தியும், ஐஸ்வர்யா தேவனும் ஜெகனும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜூம் சுபாவும் இயக்குநருக்கு பக்கபலம். ரசிக்கும்படியான ஒளிப்பதிவு.

அட்டகாசமான கான்செப்ட், வலுவான திரைக்கதை, பர்மா உள்ளிட்ட பிரமிக்கவைக்கும் சீன்கள் எல்லாம் இருந்தும் அந்தக் காலத்து நெஞ்சம் மறப்பதில்லை, தளபதி காட்சிகளை ஞாபகப்படுத்துவது நெருடல்.


அனேகன்: சுவாரஸ்யன்


குமுதம் ரேட்டிங் - நன்று
வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

அனேகன் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in