தினமலர் விமர்சனம் » ஆரம்பம்
தினமலர் விமர்சனம்
அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் படும் பேராசையால்தான் இந்தியாவில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. மேற்படி இவர்களது உதவிகள் இல்லாமல் தீவிரவாதிகள் இங்கு திடுக்கிடும் சம்பவங்கள் நடத்த முடியாது... எனும் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லி வெளிவந்திருக்கும் ஆக்ஷ்ன் திரைப்ப(பா)டம் தான் அல்டிமேட்ஸ்டார் அஜீத்தின் ஆரம்பம்!
எம்.எஸ்ஸி., கோல்டு மெடலிஸ்ட் ஆர்யா, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மீடியாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற லட்சியத்துடன் உடன் படிக்கும் டாப்ஸியை ஒருதலையாக காதலிக்கிறார். படிப்பு முடிந்ததும் டி.வி. நிருபர், தொகுப்பாளினி எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா... டாப்ஸி மீது லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ் ஆர்யாவுக்கு. சென்னையில் படிப்பு முடித்து மும்பைக்கு வேலைக்கு போகும் ஆர்யா, அங்கு உடன் படித்த நயன்தாரா, டாப்ஸியால், அல்டிமேட் அஜீத்தின் நட்பை பெறுகிறார். ஆர்யாவின் நட்பை தப்பாக்கி அவர் கையாலேயே பிரபல டி.வி. சேனல் ஒன்றை செயலிழக்க செய்யும் அஜீத், அடுத்து ஆர்யாவின் கணிப்பொறி திறமை மூலம் சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டிருக்கும் அரசியல் புள்ளிகளுக்கும், அவர்களது காசுக்கும் குறி வைக்கிறார். கூடவே போலீஸிலும், அரசியலில் பெரும் பதவியிலும் இருந்து கொண்டு திருட்டுத்தனமாக தீவிரவாதிகளுக்கு உதவும் கருப்பாடுகளுக்கு கட்டம் கட்டுகிறார். இது ஏன்.? எதற்கு..? என்று நம்மை மாதிரியே புரியாமல், ஒரு கட்டத்தில் அஜீத்-நயன்தாரா கோஷ்டியை போலீஸில் மாட்டிவிடும் ஆர்யா-டாப்ஸி ஜோடி அவ்வாறு நடந்து கொண்டதற்காக அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வருந்துகின்றனர்.
காரணம், அஜீத் ராணா(த்ரிஷாவின் காதலரே தான் இதில் அஜீத்தின் நண்பராக கெஸ்ட் ரோலில் கொஞ்சநேரம் வருகிறார்...) இருவரும் வெடிகுண்டை செயலழிக்க செய்யும் மும்பை போலீஸ் உயர் அதிகாரிகள். உயிர் நண்பர்களான இவருவரும், ஒரு தீவிரவாத செயலை தடுக்க செல்கின்றனர். மயிர்கூச்செரிய செய்யும் அந்நிகழ்வில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வெளிநாட்டினரை இருவரும் உயிர் சேதம் இல்லாமல் காபந்து செய்தாலும், ஒரு தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுக்கு அஜீத் கண் எதிரேயே ராணா உயிர் துறக்கிறார். அவரது உயிரிழப்புக்கு காரணம் தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுகள் மட்டுமல்ல..., அவர் அணிந்திருந்த தரமற்ற புல்லட் புரூப் ஜாக்கெட்டும் தான் என கண்டு அதிரும் அஜீத், அந்நிகழ்வால் தனது உயர் அதிகாரிகள் தொடங்கி, மத்திய உள்துறை அமைச்சர் வரை பகைத்து கொள்கிறார். அதனால் தன் நண்பனின் உயிரை இழந்து, தன் உயிரை துச்சமென மதித்து இந்திய கெளரவத்தை காப்பாற்றிய அஜீத்துக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டு பதவியும் பறிக்கப்படுகிறது. அதில் வெகுண்டெழும் அஜீத், ராணா குடும்பத்தில் எஞ்சிய நயன்தாரா மற்றும் நியாயமான போலீஸ் நண்பர்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் உள்ளிட்ட வில்லன் கோஷ்டியை எப்படி பழிதீர்க்கிறார்? ஆர்யா - டாப்ஸியின் காதல் என்னவாயிற்று? நயன்-அஜீத்தின் உறவு என்ன? சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய பணத்தை அஜீத்-ஆர்யா என்ன செய்தனர்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது ஆரம்பம் படத்தின் பிரமாண்டமான மீதிக்கதை!
அல்டிமேட் ஸ்டார் அஜீத், ஏ.கே.எனும் அசோக்காக வழக்கம் போலவே தனக்கு ஈடு இணை யாரும் இல்லை எனும் அளவில் முதல் பாதியில் பொல்லாதவராகவும், இரண்டாம் பாதியில் போலீஸாகவும் பொளந்து கட்டியிருக்கிறார். பலபேரை ஏமாற்றி அவங்க இரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்த பணம் எனும் சுவிஸ் வங்கி கருப்பு பணத்திற்கு அவர் கொடுக்கும் பன்ச் டயலாக்கில் தொடங்கி, க்ளைமாக்ஸில் சில சமயம் பழிவாங்கிதான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும்... என பேசும் பன்ச் டயலாக் வரை ஒவ்வொரு டயலாக்கிற்கும் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சப்தத்தில் அதிர்கிறது. மற்ற ஹீரோக்கள் மாதிரி தான் மட்டுமே பன்ச் டயலாக் பேசும்படி ஸ்கிரீன்பிளேவை இயக்குநர்களிடம் சொல்லி வடிவமைக்காமல் ஆர்யா, நயன்தாரா, அந்த ஊழல் அமைச்சர், அமைச்சரின் துபாய் அழகு பெண் உள்ளிட்ட எல்லோருக்கும் பன்ச் டயலாக் வழங்கியிருக்கும் அஜீத்துக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே தீர வேண்டும்.
அஜீத் மாதிரியே அர்ஜூன் எனும் ஆர்யாவும் பொளந்து கட்டினாலும் படத்தில் காமெடியன் இல்லாத குறையை ஆர்யாவை வைத்து இயக்குநர் தீர்த்து கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது! மாயா எனும் நயன்தாரா, அனிதா எனும் டாப்சி நாயகியரில் தொடங்கி ஆடுகளம் நரேன், கிஷோர், கிருஷ்ணா என ஒவ்வொரு நட்சத்திரமும் பலே தேர்வு! பலே நடிப்பு!!
ஆரம்பம் படத்தின் ஆரம்பத்தில் மும்பையில் மூன்று இடங்களில் வெடிக்கும் வெடிகுண்டுகளுக்கும், அஜீத்துக்கும் என்ன சம்மந்தம்?, அதேமாதிரி போலீஸ் அதிகாரிகளுக்கு ஏ.கே. அஜீத் ஒரு முன்னால் போலீஸ் அதிகாரி என்பது தெரியாதது எப்படி? உள்ளிட்ட சில பல வினாக்களுக்கும், படத்தின் ஆரம்ப காட்சிகளில் டாப்சியை கவர குண்டு ஆர்யா, குறும்பு எனும் போர்வையில் செய்த கோமாளித்தனங்கள் கொஞ்சம் இருட்டடிக்கப்பட்டிருந்தது என்றால் ஆரம்பம் மேலும் அமர்க்களமாக இருந்திருக்கும். ஆனாலும் ஓம் பிரகாஷின் பிரமாண்டமான ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர்ராஜாவின் பிரமாதமான இசை, விஷ்ணுவர்தனின் ஹாலிவுட் பட நிகர் ஆக்ஷ்ன் டைரக்ஷ்ன் எல்லாம் சேர்ந்து அஜீத்தின் ஆரம்பத்தை கோலாகலமாகவும், குதூகலமாகவும் ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!
மொத்தத்தில், ஆக்ஷ்ன் படங்களில் ஆரம்பம் - அபாரம் - அபூர்வம்!!-------------------------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
அஜித் ஒரு போலீஸ் ஆபீசர் கம் பாம் ஸ்க்வாடு ஆஃபீசர். அவரோட நண்பர் ராணாவும், அவரும் தீவிரவாதிகளைத்தாக்கும் ஒரு ஆபரேஷன்ல துப்பாக்கிக்குண்டு பட்டு ராணா செத்துடுறாரு. புல்லட் ப்ரூப் ஜாக்கெட் போட்டும் எப்படி குண்டு பாய்ஞ்சுது ?அப்டினு அஜித் மேலிடத்துல கேள்வி கேட்கறாரு. பொதுவா மேலிடத்தில் கேள்வி கேட்டாலே பிடிக்காதே. அதனால அஜித் ஃபேமிலியை கார்னர் பண்றாங்க. புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் தயாரிப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கு. அதில் கமிஷனர், மினிஸ்டர் எல்லாருக்கும் தொடர்பு இருக்கு. தன் நண்பனின் சாவுக்கு காரணமானவர்களை அஜித் எப்படி பழி வாங்கறார்? அந்த ஊழல் பணத்தை எல்லாம் இந்தியன் தாத்தா, சிவாஜி மாதிரி எப்படி ரிட்டர்ன் எடுக்கிறார் என்பதே திரைக்கதை.
ஸ்வார்டு ஃபிஷ் என்ற ஆங்கிலப்படத்தின் தாக்கம் ஆங்காங்கே தெரியுது. அது சாதா ரசிகனுக்குத்தெரியாம இருக்க ரொம்பவே மெனக்கெட்டு சுத்தி வளைச்சு கதை சொல்லி இருக்காங்க.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் கலக்கல். அவர் படத்தில் பேசும் காட்சிகள் குறைவு, ஆனால் அவர் வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல். மேக் இட் சிம்ப்பிள் என்பது இந்தப்படத்தில் அவர் பேசும் பஞ்ச் வசனம். கோட் சூட் கூலிங்க் கிளாஸ் போட்டு படம் பூரா நடக்கிறார் என்ற புகார்கள் தலை தூக்காமல் இருக்க இந்தப்படத்தில் அவர் ஜீன்ஸ் பேண்ட் - டி சர்ட்டில் தான் படம் முழுக்க வர்றார். ஃபைட் சீனில் ஒரு ரிஸ்க் ஜம்ப், காரில் தொங்கி சண்டை இடும் காட்சி என 2 இடங்களில் ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சக நடிகர்களுக்கு சமமாக சான்ஸ் கொடுக்கும் பண்பு அஜித்திடம் இய்லபாகவே உண்டு.
ஆர்யா க்ஷ, படத்தின் முன்பாதிக்கு இவர் தான் ஹீரோவா என கேட்கும் அளவு படம் முழுக்க வியாபிக்கிறார். டாப்ஸியிடம் லவ்வுவது, லவ் பிரபோசிங்க் சீன் எல்லாம் இளமை ஏரியா. அவர் பாய்ஸ் குண்டுப்பையன் மாதிரி கெட்டப் சேஞ்ச் செய்தது எல்லாம் பெரிதாக எடுபடவில்லை. முன் பாதியில் அவர் அஜித்தை வில்லன் ஆக நினைத்து நீ வா போ என ஒருமையில் பேசியவர் பின் பாதியில் ஜீ என அழைப்பது அக்மார்க் ரஜினி ஃபார்முலா.
நயன்தாரா, அஜித்துக்கு ஜோடி இல்லை, ஆனால் தோழி மாதிரி. டூயட் வாய்ப்பு இல்லை. நயன்தாரா ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக வலிய திணிக்கப்பட்ட ஒரு கவர்ச்சிக்காட்சி உண்டு. அது இல்லாமலேயே நயன் கிக்காகத்தான் இருக்கிறார்.
டாப்சி இளமைத்துள்ளல். ஆர்யா காதலை வெளிப்படுத்தும்போது யோசிப்பவர் பின் இயல்பாய் மனதில் காதல் மலரும்போது ஆஹா போட வைக்கிறார்.
போலீஸ் ஆஃபீசர்களாக கிஷோர், அதுல் குல்கர்னி என திறமைசாலிகள் ஆங்காங்கே அட்டெண்டென்ஸ் போடுகிறார்கள்.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 1. படத்தின் ஜீவநாடிக்காட்சியே அந்த ஊழல் பணத்தை ட்ரான்ஸ்பர் பண்ணும் பேங்க் சீன் தான். கலக்கலான ஐடியா. படமாக்கம், எடிட்டிங்க், நடிப்பு, இயக்கம், பி ஜி எம் எல்லாம் கன கச்சிதம், நீண்ட நாட்களுக்கு டாப் சீன்களில் இடம் பிடிக்கும்.
2. அஜித்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் ஆரம்பத்தில் அதாவது படத்தின் ஆரம்பத்தில் ஆர்யாவை முன்னிறுத்தி காட்சிகளை அமைத்தது.
3. படம் முழுக்கவே ஸ்டைலிஷான அஜித், மேக்கிங்க் எல்லாம் பக்கா. ஒளிப்பதிவு, லொக்கேஷன் செலக்சன் எல்லாம் பக்கா.
4. போனில் டாப்சி ஐ லவ் யூ என வெவ்வேறு மாடுலேஷனில் சொல்வது அபாரம்.
இயக்குநரிடம் சில கேள்விகள் 1. இந்த மாதிரி ஆக்சன் படத்துக்கு ஹீரோ அறிமுகக்காட்சி ஹீரோ ஓடி வருவது மாதிரி இருக்கனும், பாட்டு சீனாக இருக்கக்கூடாது. வெற்றி விழா கமல் ஓப்பனிங்க் சீன் நல்ல உதாரணம். அதேப்போல் ஓப்பனிங்க் சாங்க் பெரிதாக எடுபடவில்லை.
2. ஹீரோ அஜித் ஒரு பேரத்துக்காக ஆள் மாறாட்டம் செய்கிறார். அந்த ஆளை வில்லன் ஆள் ஃபோட்டோவில் கூட பார்த்திருக்க மாட்டாரா? இப்பவெல்லாம் நவீன யுகம் , எம்.எம்.எஸ்.ஸில் செல் மூலம் ஃபோட்டோவை அனுப்பிவைக்கலாமே?
3. அஜித்தின் ஃபிளாஸ்பேக் காட்சியில் ஆல்ரெடி பார்த்துப்பழகிப்போன கேப்டன், சரத்குமார் படங்களின் வாசனை. அதையும், ஆர்யா-டாப்ஸி காட்சிகளையும் கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.
சி.பி.கமெண்ட் - ஆரம்பம் - முன் பாதி வேகம், பின்பாதி ஸ்லோ- பில்லா,மங்காத்தாவுக்கு ஒரு மாற்று கம்மி.
--------------------------------------------
குமுதம் விமர்சனம்
தல ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும்?
1. அஜித் சும்மா வந்து ஸ்கிரீனில் நின்றாலே பிடிக்கும்!
2. அஜித் ஸ்டைலாக கூலிங் க்ளாஸ் மாட்டினால் பிடிக்கும்!
3. அஜித் பிரமாண்டமான பைக்கை ஓட்டினால் பிடிக்கும்!
4. கார் ஓட்டினால் பிடிக்கும். போட் ஓட்டினால்... ஏன், என்ன ஓட்டினாலும் பிடிக்கும்.!
5. கெடிகார முள் போல் டிக் டிக் என்று சொட்டு கொட்டினால் பிடிக்கும்!
6. துப்பாக்கியை அஸால்ட்டாய்த் தூக்கிச் சுட்டால் ரொம்பப்பிடிக்கும்!
7. பஞ்ச் டயலாக் பேசினால் பிடிக்கும்!
8. எதிரியைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்து ஃபைட் செய்தால் பிடிக்கும்!
9. ஹீரோயினுடன் ரொமான்ஸாய் டூயட் பாடினால் பிடிக்கும்!
இவற்றில் ஒன்பதாவது ஐட்டத்தைத் தவிர மீதி எல்லாமே இந்தப் படத்தில் இருக்கிறது. தல ரசிகர்களுக்குப் போதாதா என்ன?
புல்லட் புரூஃப் ஜாக்கெட் தயாரிப்பில் ஊழல் நடந்ததால் அதை அணிந்துகொண்ட உயிர் நண்பன் இறந்துவிட, ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார் அஜித். அதற்கு காரணமான தன் மேலதிகாரியிலிருந்து மந்திரி வரை அத்தனை பேரையும் துவம்சம் செய்து, அவர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் கோடி கோடிகளை இந்திய அரசாங்கத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கிறார். கதையில் ஒன்றும் புதிதாக இல்லைதான் என்றாலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. இயக்கம் விஷ்ணுவர்தன்.
அதிரடி அஜித்!
சால்ட் அண்ட் பெப்பர் முடியில் அஸால்ட்டாக அவர் தலை தெரிந்தாலே தியேட்டர் விஸிலில் வெடிக்கிறது. ரொம்ப பேசாமல், கொஞ்சம் பேசினாலும், பளிச்சென்று மின்னல் வெட்டுகிறது. அந்த தெனாவெட்டு பார்வையும், அலட்டிக் கொள்ளாத மெல்லிய அலட்சியமும் பல காட்சிகள் நம்ப முடியாத ரீல் என்றாலும் அதை அஜித் செய்வதால் நம்ப முடிகிறது! வில்லி, அஜித் கண்ணாடியைக் கழற்றச் சொல்லும்போது ரசிகர்கள் ஏய் என்று கூச்சலிடுகிறார்கள்.
நயன்தாரா பெயரை டைட்டிலில் பார்த்ததும் விஸில் சப்தம். மெளஸு அதிகரித்திருக்கிறது போல! கவர்ச்சியும் ஏகத்துக்கு அதிகரித்திருக்கிறது. எதிரியின் மேல் தொடை தெரிய ஏறி உட்கார்ந்து மிரட்டும் காட்சி - கண்கொள்ளாக் காட்சி!
காமெடி நடிகர் இல்லாத குறையை அங்கங்கே நிரப்பி குஷிப்படுத்துகிறார் ஆர்யா.
டாப்ஸி, ஒரு காதல் பேபி! ஆர்யாவும் டாப்ஸியும் பாடும் அந்த தேவதைப் பாடல் நைஸ்!
ஒரு பச்சைக் குழந்தையை அயர்ன் பாக்ஸால் பொசுக்க முயலும் அளவு பயங்கரமாக நடப்பவரின் ஃப்ளாஷ் பேக் ரொம்பப் பெரிதாய் இருக்குமென்று நினைத்தால் ஏமாற்றம்.
ஆரம்பம் - அஜித் ரசிகர்களுக்குத் தல தீபாவளி!
குமுதம் ரேட்டிங் - நன்று
-------------------------------------------------------------------
கல்கி திரைவிமர்சனம்
பல ஆண்டுகளுக்கு ஒரு படம் வந்தாலும் அஜித் மேஜிக்குக்கு மவுசு அதிகம். ஆரம்பத்தின் முதல் பாடல் தொடங்கினவுடனே, அஜித்தின் ஒவ்வொரு அசைவுக்கும் அப்படியொரு ஆரவாரம். எவர்கிரீன் மாஸ் ஹீரோவுக்கான கட்டிப்போடும் கவர்ச்சி அஜித்துக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது "பில்லாவுக்குப் பின் விஷ்ணுவர்த்தனோடு மீண்டும் "ஆரம்பம் கூட்டணி அமர்க்களம்!
ஓப்பனிங்கில் மூன்று மும்பைக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டவுடனே படம் விறுவிறுப்பாகி விடுகிறது. அப்புறம் ஆர்யா, டாப்ஸியைக் கடத்தி, காரியங்கள் சாதித்துக் கொள்ளும்போது, இவர் வில்லனா? நல்லவனா? என்று லேசாக சந்தேகம் எழ, பின்பாதியில் அதற்கான ப்ளாஷ் பேக் கதையும், சுபமும்.
அஜித் ஸ்டைலுக்குப் புது டிக்ஷனரியே போடலாம். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை திரையை நோக்கி நடந்து வருகிறார் அஜித். தியேட்டரில் விசில் பறக்கிறது. பாடிலேங்குவேஜ், பேசும் முறை என்று கொள்ளை கவர்ச்சி. ஆக்ஷன் சீன்களில்கூட ஸ்டைல்.
வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால், அதைச் சரியான திரைக்கதையில் கோர்த்து வாங்கி, சலிக்காமல் திரையில் மெருகேற்றியிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். முதல் பாதியில் செம ஸ்பீட். இன்டர்வெல் வந்ததே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் அழுத்தம் அதிகம்.
நயன்தாரா, கிளாமரும் கேரக்டரும் பிசைந்தெடுத்த ராணிதேனீ. டாப்ஸியின் பளிச் சிரிப்பும், அசட்டுக் குழந்தைத்தனமும் சூப்பர். முதலில் அஜித்தோடு மோதிவிட்டு, பின்னர் "சீஃப் என்று குழையும் ஆர்யாவுக்கு, இயல்பாகவே நகைச்சுவை வருகிறது. அதுவும் கிராபிக்ஸில் அவரை பப்ளிமாஸாக காட்டிவிட்டு, பின்னர் கச்சித ஹீரோவாகும்போது, ரசிகைகள் ரசிப்பது உறுதி.
எழுத்தாளர்கள் சுபாவின் வசனங்கள் பல இடங்களில் நச். பின்னணி இசையில் செலுத்தப்பட்ட கவனம், பாடல்களில் லேது! யுவனுக்கு என்னாச்சு? ஆர்யா, டாப்ஸியின் காதல் பாடலில் செய்யப்பட்டுள்ள கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இறக்கைகள், உற்சாகக் கற்பனை.
ஆரம்பத்தில் இருந்து துளித்துளியாகப் பேசி வந்த அஜித், கிளைமாக்ஸில் மொத்தமாகப் பேசிவிடுகிறார். கெட்ட அமைச்சரோடு நடக்கும் விவாதத்தில் அனல் பறக்கிறது. பொதுவாக மாஸ் ஹீரோ படங்களில் லாஜிக் ஓட்டைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. ஆரம்பம் அதற்கு விதிவிலக்கல்ல!
தம் ரசிகர்களை திருப்திப்படுத்த, அஜித் செய்திருக்கும் அத்தனை சாகஸங்களும் வீண்போகவில்லை.
அஜித் ரசிகர்களுக்கு - ஆ(ஹா)ரம்பம்!