தினமலர் விமர்சனம் » அம்பிகாபதி
தினமலர் விமர்சனம்
பள்ளி பருவ பால் ஈர்ப்பை பக்குவமான காதலாக காண்பித்து காண்போர் கண்களை பொய்யாக்கும் வித்தை தெரிந்த தனுஷின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு படைப்பு! காசி வாழ் பிராமினான தனுஷின் காதலுடன், அகில இந்திய மாணவ அரசியலையும் கலந்து இந்திப்பட ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட "அம்பிகாபதி", ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தனுஷின் தமிழ் ரசிகர்களுக்காக தமிழும் பேசி வெளிவந்திருக்கிறது!
கதைப்படி தனுஷ்க்கு காசி வீதிகளில் சிறுபிராயத்தில் ராமர், கிருஷ்ணர் வேடமணிந்து வீதி நாடகம் போட்ட காலத்திலிருந்தே அதே ஏரியாவில் வசிக்கும் இஸ்லாமிய சிறுமி சோனம் கபூர் மீது ஒரு வித ஈர்ப்பு. அதை பள்ளி நாட்களில் காதலாக கருதி சோனம் பின் அலைகிறார் தனுஷ்! சோனம் கையால் பளார் பளார்... என கன்னத்தில் ஒரு டஜன் அறைகளுக்கு மேல் தனுஷ் வாங்கிய பின்பு, அவர் மீது சோனத்திற்கும் ஒரு வித அன்பு ஏற்படுகிறது! விஷயம் சுற்றத்திற்கும், நட்பிற்கும் தெரிந்து சோனம் கபூரின் வீட்டிற்கும் தெரிய வந்து விபரீதமாகிறது. அதன் விளைவு சோனம், ஆக்ராவிற்கும் அதைத்தொடர்ந்து டில்லிக்கும் மேற்படிப்பு படிக்க அனுப்பப்படுகிறார். தனுஷ் தன் படிப்பை பாதியில் நிறுத்தி சோனத்தின் வீட்டிற்கு தான் யார்? எனக் காட்டிக்கொள்ளாமல் எடுபிடியாக எல்லா உதவிகளும் செய்கிறார். கூடவே சோனம் கபூரின் வருகைக்காக காதலுடன் காத்திருக்கிறார். எட்டு வருடங்கள் உருண்டோடுகிறது. சோனம் திரும்பி வருகிறார். தனுஷை, தன் கல்லூரி காதல் கைகூடிட உதவிட வேண்டுகிறார். தனுஷ், சோனம் விரும்பும் அவரது டில்லி கல்லூரி புரட்சி மாணவருடன் அம்மணியை சேர்த்து வைத்தாரா...? அல்லது அவர்களது காதலுக்கு தீயை வைத்தாரா? என்பதுடன் மாணவர் அரசியல் ஓட்டுக்காக கையேந்தும் இந்திய அரசியல்வாதிகளின் நரித்தனங்கள், காசி-கங்கையின் அழகுகள்.. என இன்னும் பலவற்றை கலந்துகட்டி வித்தியாசமும், விறுவிறுப்புமான காதல் படம் தர முனைந்திருக்கிறார் இந்திப்பட இயக்குனர் ஆனந்த் எல்.ராய்! அதில் இயக்குனர் ஆனந்த் எல்.ராயைக்காட்டிலும் கதாநாயகராக நடித்திருக்கும் தனுஷ் பெரும் வெற்றி பெற்றிருப்பது படத்தின் பலம்!
தனுஷ் மீசை இல்லா பள்ளி மாணவராகவும், மீசை, தாடியுடன் கூடிய அசாத்திய துணிச்சல் கொண்ட இளைஞராகவும் இருவேறு பரிமாணங்களில் வழக்கத்திற்குமாறாக மிரட்டலாக நடித்து இருக்கிறார். தன் இளம் பிராய இஸ்லாமிய காதலியின் டில்லி கல்லூரி காதலனும் இந்து தான் என்று தெரிய வந்ததும், அதேநாளில் தன் முறைப்பெண்ணுடன் நடக்க இருந்த தன் திருமணம் தடைப்பட்டு போவது பற்றிக்கூட கவலைப்படாமல், அவர்களது திருமணத்தை தடுத்த நிறுத்த ஓடும் குரூர தனுஷைக்காட்டிலும், சோனம் கபூரிடம் பள்ளி நாட்களில் காதலை சொல்லப்போய் கன்னத்தில் அறை வாங்கி திரும்பும் மீசை கூட இல்லாத தனுஷ் பிரமாதம்! அதே நேரம் காதலியின் கல்லூரி புரட்சியாள காதலன் சாவுக்கு தான் காரணம் எனக் குற்றநெஞ்சு குறுகுறுக்க, அவர் விட்டு சென்ற பணிகளை அவர்களது நண்பர்களின் உதவியுடன் டில்லி சென்று செய்வது நம்பமுடியாத ஹம்பக் என்றாலும் லாஜிக் பார்க்காமல் ரசிக்க முடிவது இயக்குனர் ஆனந்த்.எல்.ராய்க்கும், தனுஷூக்கும் கிடைக்கும் வெற்றி! ஆனாலும் க்ளைமாக்ஸில் தனுஷின் பரிதாப முடிவு உச் கொட்ட வைத்துவிடுகிறது!
சோனம் கபூர், இந்தி நடிகர் அனில் கபூரின் வாரிசாம், 16 அடி பாய்ந்திருக்கிறார். இன்பாட்சுவேஷனுக்கும், லவ்வுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இவர் புரிந்து கொண்ட அளவுக்கு தனுஷ் புரிந்து கொள்ளாததை இவர் புரிந்து கொள்ளாமல், தன் கல்லூரி காதலனின் சாவுக்கு தனுஷ் தான் காரணம் என்று அவரை டில்லி அரசியல் பிணந்திண்ணிகளுடன் சேர்ந்து கொண்டு பலிகடா ஆக்குவது வேதனை.
தனுஷ், சோனம் மாதிரியே தனுஷின் காசி நண்பன், தனுஷின் முறைப்பெண், சோனத்தின் டில்லி காதலன், அவனது சகோதரி என எல்லோரும் வட இந்திய முகங்கள் என்றாலும் திறம்பட நடித்திருக்கும் சிறப்பான முகங்கள், சரியான சவாலான பாத்திரங்கள்!
"கங்கை நீராலோ, கண்ணீராலோ உன் பாவத்தை கழுவ முடியாது... போய் பொழைப்ப பாரு" உள்ளிட்ட ஜான் மகேந்திரனின் (விஜய் நடித்த சச்சின் பட இயக்குனர்) பளிச் - பன்ச் வசனங்கள், வைரமுத்துவின் வைரபாடல் வரிகள், ஏ.ஆர்.ரஹ்மானின் புரிந்தும் புரியாததுமான புதிரான இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், ஆனந்த் எல்.ராயின் இயக்கத்தில், ஒரு சில லாஜிக்-மிஸ்டேக் குறைகள் இருப்பினும்
"அம்பிகாபதி" - தனுஷின் கேரியரில் "அமராவதி - வற்றாத ஜீவநதி!!"
------------------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
ஹீரோவுக்கு 6 வயசா இருக்கும்போதே 5 வயசான ஹீரோயினை லவ் பண்றாரு. யாரும் பயப்பட வேணாம். அது பப்பி லவ் தான். 5 நிமிஷம் தான் காட்டுறாங்க. இப்போ ஹீரோ 10-வது படிக்கறாரு. ஹீரோயின் 9 வது படிக்கறா. லவ்வை சொல்றாரு. பளார்னு அறை வாங்கறாரு. ஆனா அண்ணன் அசரலையே? மீண்டும் மீண்டும் லவ் சொல்லி 15 தடவை அறை வாங்கறாரு. 16 வது தடவை ஹீரோயினுக்கு லவ் வந்துடுது ( நீதி - ஒரு பொண்ணு கிட்டே 15 தடவை உதை வாங்குனா போதும் லவ் வந்துவிடலாம்)
2 பேரும் லவ் பண்ணிக்கும்போது ஹீரோ தன் காதலை நிரூபிக்க 4 டைம் தன் மணிக்கட்டை அறுக்கறாரு. ஹீரோயின் ஒரு டைம் அறுக்கறா. டைரக்டர் மட்டும் படம் பூரா அறுத்துட்டே இருக்காரு. 2 பேர் லவ்வும் 2 வீட்டுக்கும் தெரிஞ்சதும் வழக்கம் போல் பொண்ணு வீட்ல பொண்ணை வேற ஊருக்கு படிக்க அனுப்பிடுறாங்க. இங்கே தான் கதைல பயங்கரமான டுவிஸ்ட். ஹீரோயின் அங்கே போய் முறைப்படி ஹீரோவைத்தானே நினைச்சு ஏங்கனும்? தூங்கனும், அல்லது தூக்கம் வராம தலையணையை கட்டிப்பிடிக்கனும்?
ஆனா இது பாரதி கண்ட புதுமைப்பெண்ணுக்கு அக்கா போல. அங்கே வேற ஒரு பையனை காதலிக்குது. அது கூட தேவலை. 2 இஞ்சி மரப்பான் சாப்பிட்டு ஜீரணம் பண்ணிக்கலாம். அந்த கதையை ஹீரோ கிட்டே அதாவது பழைய காதலன் கிட்டே ஸ்கூட்டர்ல பின்னால உக்காந்து அவனை கட்டிப்பிடிச்சுக்கிட்டே பெருமையா சொல்லுது. படம் பார்க்குறவங்களுக்கு டவுட். ஹீரோயின் மெண்ட்டலா? படம் பார்த்துட்டு இருக்கும் நாம எல்லாம் கேனயன்களா? இப்போ படத்துல ஒரு டுவிஸ்ட். ஹீரோயினோட லேட்டஸ்ட் லவ்வர் திடீர்னு இறந்து போக, அதுக்கு ஹீரோ தான் காரணம்னு ஹீரோயின் நினைக்குது. அந்த லேட்டஸ்ட் லவ்வர் காலேஜ்ல சேர்மேன். கட்சி ஆரம்பிச்சு புரட்சி எல்லாம் பண்ணும் ஐடியா. ஹீரோயின் அவர் லட்சியத்தை நிறைவேத்த முயற்சி பண்றா. ஹீரோ அவளுக்கு உதவி பண்றாரு. மீண்டும் இந்த 2 பேரும் வாழ்க்கைல இணைஞ்சாங்களா? இல்லையா? என்பதை தில் இருக்கறவங்க தியேட்டர்ல போயும், டப் வேஸ்ட் பண்ண நினைக்காதவங்க டி.வி.லேயும் பார்த்து தெரிஞ்சுக்கலாம்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியதா சொல்லப்பட்டு, செல்வராகவன் இயக்கிய 3 படத்தின் 5 ரீல் அப்படியே முன் பாதில சுட்டுட்டாங்க. கே.பாக்யராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் கொஞ்சம், கமலின் மூன்றாம் பிறை கொஞ்சம், ரங்க் தே பசந்தி கொஞ்சம், பின் பாதில புதுப்பேட்டை பாதிப்பு என படம் ஒரு காக்டெயில் மாதிரி.
ஹீரோ தனுஷ் பிரமாதமான நடிப்பு. குறை சொல்லவே முடியாது. வழக்கமா சைக்கோ ஸ்பெஷலிஸ்ட்டா வரும் அவர் இதுல சாதா ஆளா வர்றதே திருப்தி. தனுஷ் கிட்டே என்ன ஸ்பெஷல்னா அவர் தாடி மீசை எடுத்தா ஸ்கூல் ஸ்டூடண்ட், வெச்சா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி ஒரு தோற்றம் வந்துடறது தான். பல இடங்களில் இவர் நடிப்பு பட்டாசு. வெல்டன் தனுஷ்!
ஹீரோயின் சோனம் கபூர், மாசு மருவே இல்லாத மொசைக் தரையில் ஐஸ்க்ரீம் வழிய விட்ட மாதிரி ஒரு முகம். சிரிப்பு, கோபம், அழுகை என எல்லா காட்சிகளிலும் ஜொலிக்கிறார் (அதாவது சோக சீனிலும் பாப்பா ஃபுல் மேக்கப்), டிரஸ்சிங் சென்ஸ் பக்கா. மொத்தத்தில் நடிப்பு கலக்கல்.
இன்னொரு ஹீரோவா வரும் அபய் தியோல், ஆள் பர்சனாலிட்டி தான். ஆனா அப்பாஸ், ஷாம் மாதிரி மைதா மாவு கேஸ். செல்லாது செல்லாது!!
தனுஷின் தோழியாக வரும் ஃபிகர் யாரு? நல்ல அழகு, நடிப்பு என கவனிக்க வைக்க்கிறார் (நாம எந்த ஃபிகரை கவனிக்காம இருந்தோம்?)
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 1. படத்தின் முன் பாதி இளமை கலக்கல். செம ஜாலியான திரைக்கதை. செம ஸ்பீடு. சின்ன சின்ன முக பாவனைகளில் ஹீரோ - ஹீரோயின் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க.
2. ஒளிப்பதிவு - ஹோலிப்பண்டிகை காட்சிகளில், காசி நகரின் அழகை அள்ளும் காட்சிகளில் அபாரம். கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்
3 , இசை - ஏ.ஆர்.ரஹ்மான். பிரம்மாண்டமான இசை, பி.ஜி.எம்.மில் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். 2 பாட்டு ஹிட்டு. ஹிந்தி ராஞ்சனாவுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் வர ஒரே காரணம் ஏ.ஆர்.ஆர்., தான்
4 ஹீரோயின், ஹிரோவின் தோழி மற்றும் பெண் கதாபாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு, உடை உடுத்திய விதம் எல்லாம் அருமை. பிரம்மாண்டம், கலை நயம்
5. அப்ளாசை அள்ளும் தனுஷ் நடிப்பு, 3 இடங்களில் பின்னிப்பெடல் எடுத்து விட்டார்.
1. இனி உன்னைப்பார்க்க வந்தேன் நான் ஒரு அப்பனுக்கு பொறக்கலை என அவரிடம் பல்லைக்கடித்து பேசும் இடம்.
2. பின் பாதியில் ஹீரோயினைப்பார்க்க காலேஜில் காம்பவுண்ட் ஏறிக்குதிக்கையில் மாட்டி யார் என விசாரிக்கப்படுகையில் தான் ஒரு திருடன் என சமாளிப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடிக்காட்சிகளும் தமிழுக்கு புதுசு
3 . அருமையான வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்
இயக்குநரிடம் சில கேள்விகள் 1. பிரமாதமான ஜாலியான எபிசோடாக வரும் முன் பாதி திரைக்கதைக்கும், பின் பாதி குழப்படி திரைக்கதைக்கும் சம்பந்தமே இல்லை. ஏன் இந்த தேவை இல்லாத வேலை?
2. காலேஜ் சேர்மேனாக வருபவர் எப்படி தொகுதி மக்களைக்கவர்ந்து கட்சி ஆரம்பிக்கும் அளவு பெரிய ஆளாக முடியும்?
3. தனுஷ் எப்படி திடீர் என கட்சியில் செல்வாக்கு பெறுகிறார்? அவர் என்ன நாஞ்சில் சம்பத்தா? பரிதி இளம் வழுதியா?
4. ஹீரோயின், ஹீரோ கிட்டே “ நீ ஜெயிச்சுட்டா உனக்கு உன் கன்னத்துல முத கிஸ் தர்றேன் கறா. ஆனா ஆல்ரெடி அவ 2 டைம் குடுத்திருக்கா ( நான் எண்ணிட்டே இருந்தேன்) அது எப்படி?
5. ஹோலிப்பண்டிகை கொண்டாட்ட காட்சியில் ஊரே முகத்தில் கலர்ப்பொடியோட இருக்கு, ஹீரோயின் மட்டும் படுக்ளினா இருக்கே? எப்படி? கூட்டத்துக்கு நடுவே தான் நிக்குது
6. ஹீரோ “ டூயட் பட வசனமான சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்’’ அப்டினு வைரமுத்து கவிதையை வாசிக்கும் சீனில் பேப்பர்ல ஹிந்தி எழுத்து. ஒண்ணு அதை கட் பண்ணி இருக்கனும், அல்லது தமிழ்ப்பேப்பர் வெச்சு ஒரு ஷாட் எடுத்திருக்கனும்
7. ஹீரோயினின் 2 வது காதலன் முஸ்லீம் அல்ல என்பதை ஹீரோதான் கண்டு பிடிக்கனுமா? ஹீரோயின் பெற்றோர் ஏன் விசாரிக்கலை? இத்தனைக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுது. வீட்டுக்கு போக வர இருந்திருப்பாங்களே?
8. ஹீரோயினின் 2 வது காதலன் இறந்ததை நேரில் பார்க்கும் ஹீரோ, ஏன் வாமிட் எடுக்கறாரு? முறைப்படி வருத்தப்பட வேண்டிய ஹீரோயினே பெருசா அலட்டிக்கலை. இவரு ஏன் ஓவரா ஃபீல் ஆகறாரு?
9. ஹீரோயின், ஹீரோ மேல உண்மையான காதலே வைக்கலை. ஹீரோவோட காதலை யூஸ் பண்ணிக்கறாரு. அதனாலேயே ஆடியன்சால அவங்க காதல் கதைல லயிப்பு வரலை
10. கூட்டத்தில் நடக்கும் வெடிகுண்டு காட்சிகள், பெரிய அரசியல் தலைவி ஹீரோயினுடன் பேச வருவது எல்லாம் படு செயற்கை
மனம் கவர்ந்த வசனங்கள் 1. இந்த உலகத்தில் எல்லாருக்கும் எல்லாமும் சமம் கிடையாது
2. என்னைக்கு தான் லவ் பண்ற பொண்ணு இன்னொருத்தனை லவ் பண்ணுதோ அப்பவே அவனோட லவ் செத்துடும்
3. இதுவரை எந்த ஆணும் உணர வைக்காத புது உணர்வை எனக்கு உணர வெச்சான். அதை அவனுக்கு உணர வைக்கனும்னு நினைக்கறேன்
4. புதுசா எது வந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு அது பின்னால ஓடறதுதான் நம்ம பழக்கம்
5. நான் ரத்தம் சிந்தறேன். நீ கண்ணீர் சிந்தறே. ஆனா நமக்குள்ளே காதல் நடக்கவே இல்லை. விசித்திரமா இல்ல?
6. பிகரை கரெக்ட் பண்ண 2 வழி. 1.கடின உழைப்பு, விடாம அவ பின் சுத்துவது. 2. அவளை பயமுறுத்துவது
7. தொழுது கொண்டிருப்பது என்னவோ நீ தான்.ஆனால் இறைவன் வரம் கொடுத்தது என்னவோ எனக்குத்தான்
8. ஒரு பொண்ணாலயும், ஒரு ராக்கெட்டாலயும் தான் நம்மை எந்த உயரத்துக்கும் கூட்டிட்டுபோக முடியும்
9. ஏய்.. உன் பேரையாவது சொல்லிட்டுப்போ... நாளைக்கு எப்படியும் என் கிட்டே அறை வாங்க வருவே தானே? அப்போ சொல்றேன்
10 அது லவ்வே இல்லைடா, நான் அப்போ டென்த் படிச்சுட்டு இருந்தேன். நான் மட்டும் காலேஜ்லயா படிச்சேன்?
11. உன்னைப்பார்த்தாலே அந்தப்பொண்ணு சிரிக்குதே... ஏன்? வெட்கம், சந்தோஷம்
12. ஒரு பெண்ணை சராசரி கல்யாணப்பொண்ணா தயார் பண்ற வீடாத்தான் என் அத்தை வீடு இருந்தது
13. இவன் வீட்ல இல்லைன்னா வேற எங்கேயும் தேட வேண்டாம். நேரா ஹாஸ்பிடல் வந்துடுங்க. அங்கே தான் இருப்பான். அடிக்கடி தற்கொலை முயற்சி பண்ணிக்குவான்
14. என் மேல தப்பு இருந்தப்பவே எங்க அப்பா கிட்டே கூட சாரி கேட்டதில்லை. இப்போ என் மேல தப்பும் இல்லை, நீ என் அப்பாவும் இல்லை, உன் கிட்டே ஏன் நான் சாரி கேட்கனும் ?
15. இப்போ இருப்பது 2 வகை அரசியல் தான். ஒன்று இருக்கும் ஆட்சியை சதி பண்ணி கவுத்துட்டு புது கட்சி ஆட்சி அமைப்பது, இன்னொன்று புது அரசியல் கட்சி ஆரம்பிப்பது
16. சவால்களை எல்லாம் தாண்டி ஜெயிப்பவனே தலைவன்
17. நான் வாழ்க்கைல கத்துக்கிட்ட பாடம் - பொண்ணுங்களை நம்பி எப்பவும் எந்தக்காரியத்திலும் இறங்கக்கூடாது
18. கரைல நின்னுக்கிட்டே முத்தை எடுக்க முடியாது
19. இங்கே இருக்கும் சாமியார்கள் எல்லாரும் பாவிகள். ஏதாவது தப்பைப்பண்ணிட்டு வந்து இங்கே (காசியில்) ஒளிஞ்சிக்கறாங்க
20. நாம செஞ்ச பாவத்தை கங்கையாலயோ, கண்ணீராலயோ கழுவிட முடியாது
21. தம்பி, நீ யாரு? இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? நான் ஒரு திருடன், திருட வந்திருக்கேன்.
22. இந்த தேசத்துல தலைவருக்கு பஞ்சம், என்னை மாதிரி மாக்கான் சொல்றதையே ஜனங்க கேட்கறாங்கன்னா...
படம் பார்க்கும்போது டுவிட்டரில் போட்ட டுவீட்ஸ் அம்பிகாபதி - முன் பாதி காதல் கலாட்டா, பின் பாதி அய்யய்யோ நான் கிளம்பட்டா?
ஒரு படத்தை உல்டா அடிச்சா ரீ-மேக். பல படங்கள்ல இருந்து உருவி கதம்பமாக்குனா ஓன்மேக்- சினிமா விதி
40% - 3 , 30% - டார்லிங் டார்லிங் டார்லிங். 30 % - புதுப்பேட்டை = அம்பிகாபதி ( ரங்க் தே பசந்தி, மூன்றாம் பிறை ஆங்காங்கே )
ராஞ்சனா ஹிந்தியில் ஹிட் ஆனதில் ஆச்சரியமே இல்லை.ஆனால் தமிழில் அம்பிகாபதி ஹிட் ஆக வாய்ப்பே இல்லை.
ஏ.ஆர்.ஆர். துள்ளாட்ட இசை பி.ஜி.எம். பின்றாரு
சி பி கமெண்ட் - படம் பார்த்தே ஆகனும்னு அடம் பிடிப்பவங்க இடைவேளை வரை பார்த்துட்டு ஓடியாந்துடுங்க. ஏ.ஆர்.ஆர்ன் தீவிர ரசிகர்கள் மட்டும் முழுசா பாருங்க. முன் பாதி ரதி, பின் பாதி பேதி. ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன். 1300 பேர் அமரும் தியேட்டரில் 278 பேர் இருந்தாங்க.
----------------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
நல்ல சிவப்பு, கட்டுமஸ்தான உடம்பு, ஆரவாரக்குரல் என்றே கதாநாயகர்களைப் பார்த்து சலித்துப்போன வடக்கு ரசிகர்களுக்கு மாநிறம், உசுப்பேற்றும் குரல், ஒல்லிக்குச்சி உடம்பு பூராவும் நடிப்பு என்று தனுஷைப் பிடித்துப் போவதில் ஆச்சரியமே இல்லை.
கமல்ஹாசனுக்குப் பிறகு ஹிந்தியில் தன் கால்களை அழுந்தப் பதித்திருக்கிறார் தனுஷ்! ராஞ்ச்சனாவின் டப்பிங் வடிவம் இந்த அம்பிகாபதி!
காதலிக்காக எதையும் தியாகம் செய்யும் ஒரு சின்னப் பையனின் - இளைஞனின் கதை. எதையும் என்றால்? தன் உயிரையும் கூட!
இந்துப் பையன், முஸ்லிம் பெண், காதல் என்று வடக்கத்திக்காரர்களுக்குப் பழக்கமான சப்ஜெக்ட்தான் என்றாலும் தனுஷின் நடிப்பால் வித்தியாசம் தெரிகிறது. (இயக்கம் ஆனந்த் எல்.ராய்)
பள்ளிப்பருவ காசி நகரத்துக் காதலில் தனுஷ் வாழ்ந்திருக்கிறார். தினமும் தவறாமல் காதலியிடம் அடி வாங்குவதென்ன, அவளுக்காக ஆண்டுகளாய்க் காத்திருப்பதென்ன, அவள் வேறு யாரையோ காதலிக்கிறாள் என்பது தெரிந்தவுடன் அப்படியே ஸ்கூட்டரை கங்கை நதிக்குள் இறக்குவதென்ன, காதலியை இறுக்கமாய்க் கட்டிப்பிடித்து ‘உன் கல்யாணம் நடக்கற அன்னிக்கே எனக்கும் நடக்கும்டி. இல்லேன்னா நான் ஒரு அப்பனுக்குப் பொறக்கலை’ என்று உறுமுவதென்ன? படத்தைத் தூக்கி நிறுத்துகிறார் தனுஷ்.
கொஞ்சம் அதிகமாய்ப் புன்னகைக்கும் மோனலிசா ஓவியம் போலிருக்கிறார் சோனம் கபூர். தனுஷுக்குச் சரியான ஈடு. ஆனால் அவரைக் கடைசியில் ஒரு வில்லி போல சித்தரிக்க முனைந்திருக்க வேண்டாம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இதம்.
நம்ம ஊர் ‘மிளகா’ ஹீரோ நடராஜ் சுப்ரமணியனின் கேமரா ஹோலி கொண்டாடியிருக்கிறது. அதுவும் காசி நகரத்தை இத்தனை யதார்த்தமாய் நட்டியைப் போல் யாரும் காட்டியதேயில்லை.
இடைவேளைக்கு அப்புறம் படம் தடுமாறுகிறது. சோனம் கபூரின் டெல்லிக் காதலன் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறாராம். அவர் இறந்தபிறகு சோனம் அதைக் கவனிக்க தனுஷ் அதன் தலைவர் போல ஆக முயல, இன்னொரு கட்சியின் தலைவி சோனத்தைக் கூப்பிட்டு தனுஷைப் பழிவாங்க அனுப்பச் சொல்ல, ஹப்பா... தியேட்டரில் கும்பலாகக் கொட்டாவி விடுகிறார்கள் பாஸ்!
டப்பிங் படம் என்ற உணர்வே வராமல் வசனம் எழுதிய ஜான் மகேந்திரனைப் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், தனுஷ், தன் காதலியைப் பார்த்துப் படிக்கும் கவிதையையும், சோனத்தின் டெல்லிக் காதலன் பற்றி பேப்பரில் வந்த செய்தியையும் ஹிந்தியிலேயே காட்டியிருப்பது செமை எரிச்சல். தமிழில் மாற்றியிருக்கலாமே? குறைந்தபட்சம் தனுஷின் பெயரான குந்தன் என்பதைக் கந்தன் என்றாவது மாற்றியிருக்கலாம். இதில் நான் தமிழண்டா என்று வேறு சொல்கிறார். டைட்டிலில் கூட தமிழ் பாண்ட் டான்ஸ் ஆடியிருக்கிறது!
அம்பிகாபதி - தனுஷுக்காக வேண்டுமானால் பார்க்கலாம்.
குமுதம் ரேட்டிங் - ஓகே.