தினமலர் விமர்சனம் » நடிகையின் டைரி
தினமலர் விமர்சனம்
தென்னிந்திய மொழி சினிமாக்களில், குறிப்பாக தமிழ் சினிமாவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடிகட்டிப்பறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் காதலும், கண்ணீரும் கலந்த சோக வாழ்க்கையை சொல்லியிருக்கும் படம்தான் "நடிகையின் டைரி" மொத்த படமும்!
சில்க், பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் டச்-அப் கேர்ளாக வேலை ஆளாக தன் வாழ்க்கையை தொடங்கி, பின்நாளில் பெரும் கவர்ச்சி நடிகையாக சக்கை போடுபோட்டு மர்மமான முறையில் இறந்தது வரை சகலத்தையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஸ்மிதா, ஒரு நடிகையின் வேலை ஆளாக வாழ்க்கையை தொடங்குகிறார். அந்த நடிகை படுத்தும் பாடும், ஸ்மிதாவின் அசாத்திய அழகும் அம்மணியை ஒரு பிரபல கவர்ச்சி நடிகை ஆக்குகிறது. நிஜமான பாசத்திற்கு ஏங்கும் ஸ்மிதாவின் வாழ்க்கையில் தொழில் அதிபர் சுரேஷ் கிருஷ்ணா புகுந்து தாலி கட்டாத கணவனாக உடன் வாழ்கிறார். ஸ்மிதாவிற்கு முதலில் இருக்க இடம் கொடுத்து பின் அவரது வரவு-செலவுகளையும் கவனித்து கொள்ளும் தொழில் அதிபர் சுரேஷ் கிருஷ்ணாவின் வாரிசு சுபினுக்கும் ஸ்மிதா மீது காதல் வருகிறது. வாழ்ந்தால் ஸ்மிதாவுடன் தான் வாழ்வேன் என்கிறார் சுபின். தந்தைக்கும் ஸ்மிதாவிற்குமிடையேயான உறவு புரியாமல் பேசும் சுபினை ஸ்மிதா தவிர்க்கிறார். சுபின் தவிக்கிறார். அப்பா - பிள்ளையிடையே அல்லாடும் ஸ்மிதா, என்ன செய்கிறார்? அதனால் என்ன ஆகிறார்? என்பது க்ளைமாக்ஸ்!
சனாகான் ஸ்மிதாவாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தான் வேலைக்காரியாக இருந்தபோது அறைந்த நடிகையை தான் முன்னணி நடிகையான பின் பழிவாங்கும் இடமாகட்டும், அன்புக்காக ஏங்கி தாடிக்காரரின் போதை வலையில் வீழ்வதிலாகட்டும், தாடிக்காருக்கும், தனக்கும் இடையேயான உறவை தன்னை விரும்புவதாக சொல்லும் அவரது மகனிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் இடத்திலாகட்டும் ஒவ்வொரு சீனிலும் சனா கான், சில்க் ஸ்மிதாவாகவே வாழ்ந்திருக்கிறார். பலே, பலே!
ஸ்மிதாவின் காதலராக, தாடிக்காரராக வரும் சுரேஷ் கிருஷ்ணனின் நடிப்பும் நச் என்று இருக்கிறது. சில்க்கின் ரசிகனாக அவரது மகனாக வரும் சுபினும் தன் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். அம்மா கேரக்டரில் வரும் சாந்தி வில்லியம்ஸ், அரவிந்த், டைரக்டர் கே.மது, லஷ்மி சர்மா, ரவிகாந்த், ராஜேந்திரன், இர்ஷத் உள்ளிட்ட ஒவ்வொரு வரும் தங்களது பாத்திரத்திற்கு சனா கான் மாதிரியே பலம் சேர்த்துள்ளனர். ஆனால் படத்தில் பலரது முகச்சாயலும் மலையாள வாடை தூக்கலாக தெரிவது பலவீனம்!
எஸ்.பி.வெங்கடேஷின் பின்னணி இசை, பெர்னி இக்னாடியஸின் பாடல்கள் இசை, சஜத் மேனனின் ஒளிப்பதிவு, ஸ்ரீஜா ரவியின் வசனம், "சிலந்தி" ஆதிராமின் பாடல் வரிகள், ஆண்டனி ஈஸ்ட்மெனின் கதை, கல்லூர் டென்னீஸின் திரைக்கதை உள்ளிட்டவைகள், மலையாள இயக்குனர் அனிலின் இயக்கத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன!
சில்க்ஸ்மிதாவின் கதையை நேரடியாகச் சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அதை படமாக எடுக்க விரும்பும் தயாரிப்பாளருக்கு, ஒரு இயக்குனரும் வசன கர்த்தாவும் கதை சொல்வது போன்று திரைக்கதை அமைத்திருக்கும் புதுமையான பாணி ஒன்று போதும் "நடிகையின் டைரி" நல்ல விதமாக எழுதப்படிருக்கி்றது. எடுக்கப்பட்டிடருக்கிறது... என்று சொல்வதற்கு! அதே மாதிரி ஸ்மிதாவை முதன்முதலாக மலையாள இயக்குநரிடம் அறிமுகப்படுத்தும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜென்ட்டிடம் "இத்தனை நாள் சினிமாவில் என்ன சம்பாதித்தாய் என அந்த இயக்குநர் கேட்கும் போது, 2மாசம் புள்ளதாச்சியாக ஒரு பொண்டாட்டி கிடைச்சா..." என அவர் சொல்லும் இடத்தில் சினிமா உலகின் அரக்கத்தனம் வெளிப்படுவது உள்ளிட்ட இன்னும் பல நிதர்சன காட்சிகள் "நடிகையின் டைரி" திரைப்படத்தை "நம்பிக்கை டைரி" ஆக்கிவிடுகிறது!
மொத்தத்தில், "நடிகையின் டைரி" - "திரையுலகின் நிதர்சன வெடி!"