‛‛ஒவ்வொரு மூச்சும் புதிய துவக்கம்'': ஓவியா | சீனாவில் ரூ.56 கோடி வசூலைக் கடந்த மகாராஜா! | மதுரை அழகர்கோயிலில் மனைவியுடன் தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் | அஜித்தின் விடாமுயற்சி படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? | ஹனிமூனுக்காக ஐஸ்லாந்த் நாட்டுக்கு செல்லும் நாகசைதன்யா- சோபிதா! | பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயல் - டீப் பேக் வீடியோ குறித்து பிரக்யா நாக்ரா அதிர்ச்சி | ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் அறிமுகமாகும் ‛தி டைரி ஆப் மணிப்பூர்' | குருவாயூரில் நடந்த காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்! | மீண்டும் எல்ரெட் குமார் தயாரிப்பில் சூரி! | எப். பி. ஜோர்ன் வாட்ச் மேக்கரை சந்தித்த தனுஷ்! |
உலகம் முழுவதும் இவர் பாடல் ஒலிக்காத நிமிடங்கள் இல்லை. இவரின் படைப்புகள் வராத வருடங்களும் இல்லை. இசை உலகில் நானே ராஜா, என 80களில் தொடங்கி இன்றைய இளசுகளின் இதயங்களிலும் ஊடுருவிய இந்த இசைஞானிக்கு வானமே எல்லை. அவர் விரல் பட்ட ஏழு கட்டையும், எட்டு கட்டையும் நம்மை கட்டிப்போட்ட தருணங்களை மறக்க முடியுமா? ஒவ்வொரு உறவுக்கும் ஒரு ராகம், ஒரு தாளம் என உணர்வுகளுக்கு இசையால் உயிர் தந்த அந்த ராகதேவனுக்கு பெயர் இளையராஜா.
'ஆத்ம ராகம் ஒன்றில் தான் வாழும் உயிர்கள் என்றுமே, உயிரின் ஜீவ நாடியே நாதம், தாளம் ஆனதே! உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே...! பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை! ராகங்கள் கோடி, கோடி... அதுவும் புதிதில்லை! எனது ஜீவன் ஒன்று தான் என்றும் புதியது!' என, இசையோடு இசையாய் வாழ்ந்து வரும் அந்த அற்புத கலைஞனை, உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் பட்டியலில் சேர்த்து மகுடம் சூட்டியுள்ளது இசை உலகம்.
ஒலியை வழிநடத்திச் செல்லும் 'இசை'ராஜாவின் மதுரை வருகையின் போது அவரை சந்தித்தோம். 'தினமலர்' வாசகர்களுக்காக சில நிமிடம் மனம் திறந்தார்...
* மதுரையில் சில நாட்கள்... எப்படி உணர்கிறீர்கள்?
என் மீது பாசம் கொண்ட மக்களை திருப்திபடுத்த வேண்டும் என எனது மகன் கார்த்திக்ராஜா விரும்பினார். மதுரையில் கண்டிப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என என்னை சம்மதிக்க வைத்தார். நானும் ரசிகர்களை சந்திக்க விரும்பியதால் சம்மதித்தேன்.
* உங்கள் சொந்த மண்ணின் மக்கள் முன் இசைக்கும் தருணம்...
பண்ணைப்புரத்திலிருந்து எனது இசை நிகழ்ச்சியை பார்க்க வருகிறார்கள் என தெரிந்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
* 'கிராமியம்' இருந்தும் அன்றைய பாடல்கள் உலகளாவிய வரவேற்பை பெற்றது எப்படி?
எனது எந்த பாடலாக இருந்தாலும் கிராமம், நகரம் என்பதை கடந்து இதயத்திற்குள் அல்லவா செல்கிறது. அது தான் முக்கியம். எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, பிரச்னையும் அல்ல.
* பிற இசையிலிருந்து இளையராஜாவின் இசை எப்படி வேறுபடுகிறது?
பாடல் என்பது மனதை தொடுகிறதா, இதயத்தை தொடுகிறதா, ஆறுதல் தருகிறதா, தூங்க வைக்கிறதா, சோகத்தை போக்குகிறதா, வருந்தவிடாமல் தடவிக் கொடுக்கிறதா, தாலாட்டுகிறதா என்பது தான் முக்கியம். மற்றவர்கள் இசையில் நிகழாத சமாச்சாரம், என் இசையில் நிகழ்ந்தது இது தான்.
* கலாசாரம், பண்பாடு மாறுபடும் போது இசை மட்டும் ஏன் மாறுபடவில்லை?
உணர்வு என்பது அனைவருக்கும் ஒன்று தான். அடித்தால் அழுவோம், இல்லையேல் அடிப்போம். உணர்வும், இசையும் ஒன்று தான். உயிர்களை உயர் நிலைக்கு அழைத்துச் செல்லும் விஷயமாக இசை உள்ளது.
* 'டிரெண்ட்' மாறும் போது இசை மாறுகிறதா?
'டிரெண்ட்' என்பது எதுவுமே இல்லை. அப்போது இருந்த 'டிரெண்டை' இப்போது கேட்பதில்லையா? காலங்காலமாக இருப்பது தான் இசை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 'டிரெண்ட்' இல்லாததது தான் நல்ல இசை. 'டிரெண்ட்' இருந்தால் அது இசையே அல்ல. அது அன்றே அடித்துச் செல்லும் சிறிய தூறல் போன்றது.
* 'பேன்ஸ் கிளப்' ஐடியா எப்படி வந்தது?
உலகம் முழுவதிலும் உள்ள என் ரசிகர்களை ஒன்றிணைத்து பணியாற்ற விரும்பினர். நோக்கம் அறிந்து நானும் சம்மதித்தேன். என் மகள் பவதாரணி தான் அதன் தலைவராக செயல்படுவார்.
* மதுரையில் மறக்க முடியாத இடம்?
மீனாட்சி அம்மன் கோயில். இவ்வளவு சுத்தமான கோயிலை வேறு எங்குமே பார்க்க முடியாது. கலாசாரம், பாரம்பரியத்தை கொண்ட சிலைகளை சிறப்பாக பராமரிக்கின்றனர். அது பாராட்டக்கூடியது.
இவ்வாறு கூறினார்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட, மதுரை தமுக்கத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில், ''இந்த மதுரையில் ஆர்மோனியத்துடன் என் கால் படாத இடமே இல்லை... ஒவ்வொரு தெருவும் எனக்கு தெரிந்தவை...'' என, உலகமே பேசும் அந்த இசைஞானி மதுரையை பேசியது ரசிகர்களை மட்டுமல்ல நம்மையும் உருக வைத்தது.