இசை நிகழ்ச்சி ரத்து - வருத்தம் தெரிவித்த விஜய் ஆண்டனி | 2024 - பாடல்களில் ஏமாற்றிய இசையமைப்பாளர்கள் | தேவிஸ்ரீ பிரசாத் இசையில் முதல் முறையாக பாடிய தனுஷ் | சுந்தர பாண்டியன் இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி | பொங்கல் போட்டியிலிருந்து விலகும் 'வணங்கான்'? | 'இந்தியன் 3' பஞ்சாயத்து : சிக்கலில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' | ஜெயிலர் 2வில் தமன்னாவும் இருக்கிறார் | கவின் நடிக்கும் கிஸ் படத்திலிருந்து வெளியேறிய அனிருத்? | தோல்வியை நோக்கி 'தெறி' ஹிந்தி ரீமேக் | மீண்டும் வெளிவருகிறது 'தாம் தூம்' |
2024ம் ஆண்டில் 230 நேரடி தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது சுமார் பத்து படங்கள் வரை குறைவான எண்ணிக்கை. ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு திரைப்படங்களின் வசூலும் குறைவாகவே இருந்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான இத்தனை படங்களில் ஒரு படம் கூட 500 கோடி வசூலைக் கடக்கவில்லை என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் வருத்தமான ஒரு விஷயம்.
இருந்தாலும் இந்த வருடம் எதிர்பாராத விதத்தில் சில படங்கள் நல்ல வசூலைக் குவித்து, குறிப்பிடத்தக்க லாபத்தையும் கொடுத்துள்ளன. லாபம் ஒரு பக்கம் இருந்தாலும் வசூலைக் குவித்த படங்கள் எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் லாப நஷ்டக் கணக்கை விடவும் அந்த வசூல் பேசப்படும். அப்படி இந்த ஆண்டில் வசூலைக் குவித்த படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
தி கோட்
வெங்கட் பிரபு - விஜய் கூட்டணி முதன் முறையாக இணைந்த படம். கூடவே பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். ஏஐ மூலம் இளமையான விஜய்யும் படத்தில் உருவாக்கப்பட்டார். விஜய் படம் என்றாலே வழக்கமாக வசூலைக் குவிக்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தமிழகத்தில் லாபத்தையும் மற்ற மாநிலங்களில் நஷ்டத்தையும் கொடுத்ததாகத் தகவல் வெளியானது. இருந்தாலும் இந்த ஆண்டு வெளியான படங்களில் நம்பர் 1 வசூலைக் குவித்த படம் இதுதான்.
அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம். வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை உணர்வுபூர்வமான படமாகக் கொடுத்து ஒட்டு மொத்த தமிழகத்தையும் கலங்க வைத்த படம். இந்த ஆண்டில் அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் இந்தப் படத்திற்குத்தான் முதலிடம். சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோரது படங்கள் மட்டுமே 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்த 300 கோடி கிளப்பில் நான்காவது நடிகராக சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கில் டப்பிங் ஆகி அங்கும் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்த படம். சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டையும், இமேஜையும் உயர்த்திவிட்ட படம்.
வேட்டையன்
ரஜினிகாந்த் படம் என்றாலே வசூலுக்குப் பஞ்சமிருக்காது. இந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்கள் குறிப்பிடும்படியான வசூலைக் கொடுக்கவில்லை என்பது உண்மை. சிறப்புத் தோற்றம் என்றாலும் படம் முழுவதும் வரும்படி அவர் நடித்த 'லால் சலாம்' படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து வெளிவந்த 'வேட்டையன்' படம் 250 கோடி வசூலைக் கடந்தது. ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வெளியான 'ஜெயிலர்' படத்தின் வசூலுடன் ஒப்பிடும் போது அதில் பாதியளவு கூட வசூலாகவில்லை. அமிதாப்பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட மற்ற மொழிகளின் முன்னணி நடிகர்கள் இருந்தாலும் இந்தப் படம் முழுமையான ரஜினிகாந்த் படமாக இல்லாமல் போனதுதான் படத்தின் வசூல் குறைவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மகாராஜா
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம். இந்த ஆண்டில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக இந்தப் படம் அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கான வரவேற்பு மிகச் சிறப்பாக அமைந்தது. ஒரு குடும்பப் பாங்கான கதையை இந்த அளவிற்கு பரபரப்பான திரைக்கதையுடன் கொடுக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்தார்கள். தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது ஓடிடியில் வெளியான பிறகு உலக சினிமா ரசிகர்களையும் வியக்க வைத்தார்கள். கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டு அங்கும் பெரிய வசூலைக் குவித்தார்கள். சுமார் 200 கோடி வரையில் இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்களில் முதல் 100 கோடி படம் இது.
ராயன்
தனுஷ் இயக்கம் நடிப்பில் வெளியான படம். அண்ணன், தம்பிகளுக்கு இடையிலான பாசம்தான் படத்தின் கதை. ஆனால், முழுக்க முழுக்க ரத்தக் களறியாக இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார் இயக்குனர் தனுஷ். அதிகப்படியான பிரமோஷனில் இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றிப் படமாக அமைந்தது. ஓடிடியில் வெளிவந்த பின்பு பார்த்தவர்கள் இந்தப் படம் எப்படி அவ்வளவு வசூலித்தது என்று ஆச்சரியப்பட்டார்கள். எந்தவிதமான படத்தையும் சரியான பிரமோஷன் மாற்றிவிடும் என்பதற்கு இந்தப் படம் இந்த வருடத்தின் முக்கிய உதாரணம். இப்படி சரியான பிரமோஷன் செய்யாத காரணத்தால்தான் சில நல்ல படங்கள் வசூல் செய்யாமல் தடுமாறிவிடுகின்றன. அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்வது சிறப்பு.
அரண்மனை 4
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கான வரவேற்பு இன்னும் குறையாமல் உள்ளது என்பதை நிரூபித்த ஒரு படம். என்னென்னமோ கதை சொன்னாலும் ஒரு பரபரப்பு, ஒரு விறுவிறுப்பு, திகிலான திரைக்கதை அமைந்தால் படம் ரசிகர்களைக் கவர்ந்துவிடும். அப்படியான ஒரு படத்தைக் கொடுத்து 100 கோடி வசூலைக் கடக்க வைத்துவிட்டார் இயக்குனர் சுந்தர் சி. இந்த ஆண்டு வெளிந்த படங்களில் முதலில் 100 கோடி வசூலைக் கொடுத்த படம். இந்தப் படத்தின் வரவேற்பு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. சுவாரசியமான பேய்ப் படங்களை ரசிகர்கள் கைவிட மாட்டார்கள் என்பதை மற்ற பேய்ப் பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் இந்தப் படம் புரிய வைத்தது. அதனால், இன்னும் சில வருடங்களுக்கு பேய்ப் படங்கள் தமிழ் சினிமாவை விட்டுப் போகாது. அரண்மனை 5 கூட விரைவில் உருவாகலாம்.
டிமாண்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த படம். இந்த ஆண்டில் வெளியான படங்களில் மற்றுமொரு ஆச்சரிய வெற்றி இந்தப் படம். இதன் முதல் பாகம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பாகத்திற்கு கொஞ்சம் குறைவான வரவேற்புதான். ஆனால், தியேட்டர்களில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டில் வெளிவந்த பேய்ப் படங்களில் இரண்டாவது வசூலைப் பிடித்த படம். சுமார் 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து லாபத்தைக் கொடுத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லப்பர் பந்து
நட்சத்திரங்களை நம்பாமல் கதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பு உண்டு என்பதை நிரூபித்த மற்றுமொரு படம். அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், இந்தப் படத்தில் நடித்த தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு அற்புதமான பாராட்டுக்கள் கிடைத்தது. கிரிக்கெட்டுடன் இணைந்த காதல் கதை, அதுவும் கிராமத்துப் பின்னணியில். இம்மாதிரியான பல கதைகள் இன்னும் பல திறமைசாலிகளால் கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவர்களை சரியாக அடையாளம் கண்டு, வாய்ப்புகளைக் கொடுத்தால் தமிழ் சினிமாவின் தரம் மேலும் உயரும். 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய படம்.
கருடன்
2023ல் வெளியான 'விடுதலை 1' படம் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்தவர் நகைச்சுவை நடிகர் சூரி. அடுத்து அவர் கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த இந்தப் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பையும், வசூலையும் பெற்றது. காமெடி நடிகராக இருந்த சூரி ஆக்ஷனிலும் அசத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சரியான வாய்ப்புகள் கிடைத்தால் திறமைசாலிகள் வெளிச்சத்திற்கு வருவார்கள். அப்படியான ஒரு வாய்ப்பு சூரிக்கு கிடைக்க ஆரம்பித்துவிட்டது. அதை அப்படியே பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவார் என எதிர்பார்க்கலாம். படத்தில் நடித்த சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் பேசப்பட்டார்கள். இயக்குனர் துரை செந்தில்குமாரிடம் இருந்து ஒரு மாறுபட்ட படைப்பு. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம்.
வாழை
இந்த ஆண்டில் சிறுவர்களை மையப்படுத்தி அதிகமான படங்கள் வரவில்லை. வந்த ஒரு சில படங்களில் முக்கியமான படமாக இப்படம் அமைந்தது. வாழை தோட்டத்தில் வேலை செய்யச் செல்லும் ஒரு சிறுவனை மையப்படுத்திய கதை. இயக்குனர் மாரி செல்வராஜ் வழக்கம் போல ஒரு யதார்த்தமான படமாக இந்தப் படத்தைப் பதிவு செய்திருந்தார். படத்தில் நடித்த சிறுவன் பொன்வேல், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோரது நடிப்பு விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜின் நான்காவது வெற்றிப் படம் இது. இந்தப் படமும் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
மேலே குறிப்பிட்ட படங்களைத் தவிர ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'இந்தியன் 2' படம், சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த 'கங்குவா', பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'தங்கலான்' ஆகிய படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் படங்களின் லாபக் கணக்கு எதிர்பார்த்தபடி ஆரம்பமே ஆகவில்லை என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது. அந்தப் படங்களை விட சிறிய படங்கள் சில குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்ததால்தான் அவை மேலே உள்ள பட்டியலில் இடம் பெற்றது.
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்கள் கடந்த சில வருடங்களில் 1000 கோடி வசூல் என்பதைக் கடந்து சாதனை படைத்துள்ளன. ஆனால், தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் தலைநகராக விளங்கிய சென்னையில் இருந்து உருவாகும் தமிழ்ப் படங்கள் இன்னும் அப்படியான ஒரு சாதனையைப் படைக்காமல் உள்ளன. அது வரும் ஆண்டுகளில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புடன் நமது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.