''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2023ம் ஆண்டு ஏறக்குறைய 230 படங்கள் ரிலீஸாகி உள்ளன. இந்தவார வெளியீடும்(தியேட்டர், ஓடிடி, டிவி) சேர்ந்தால் 250-ஐ தாண்டும். இந்த படங்களில் 200 படங்கள் வரை சிறிய திரைப்படங்கள் தான். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இல்லாமல், பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் பெரும்பாலான படங்கள் வெளிவந்தன.
கதைகளையும், கதாபாத்திரங்களையும், அதில் நடித்த நடிகர்கள், நடிகைகளின் திறமைகளையும் நம்பி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உருவாக்கிய படங்களில் சில படங்கள் ரசிகர்களையும், விமர்சகர்களையும் கவனிக்க வைத்தன.
சாதனை வசூல் என்பது வியாபார நோக்கமாக பார்க்கப்பட்டாலும், சினிமா என்ற கலையை வாழ வைப்பது பாராட்டுக்களையும், கவனத்தையும் ஈர்க்கும் படங்கள் மட்டும்தான். அப்படி இந்த 2023ம் ஆண்டில் வந்த சில படங்கள் எவையென்று பார்ப்போம்.
01. டாடா
தயாரிப்பு - ஒலிம்பியா மூவிஸ்
இயக்கம் - கணேஷ் கே பாபு
இசை - ஜென் மார்ட்டின்
நடிப்பு - கவின், அபர்ணா தாஸ்
வெளியான தேதி - 10 பிப்ரவரி 2023
இந்த வருடம் வெளிவந்த படங்களில் முதலில் கவனிக்கப்படும்படியான வரவேற்பைப் பெற்ற ஒரு படம் இது. அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு உணர்வுபூர்வமான ஒரு கதையைக் கையாண்டிருந்தார். ஆத்மார்த்தமாகக் காதலித்தவர்கள் வாழ்வில் குழந்தை பிரச்னை விவகாரமாக மாறுகிறது. அதை உணர்வுபூர்வமாகவும், நெகிழ்ச்சியாகவும் கொடுத்து ரசிக்க வைத்தார்கள். கவின், அபர்ணா தாஸ், மாஸ்டர் இளன் கதாபாத்திரங்களும், அவர்களது நடிப்பும் ரசிகர்களை ஈர்த்தது.
02. அயோத்தி
தயாரிப்பு - டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் - மந்திரமூர்த்தி
இசை - என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு - சசிகுமார், பிரியா அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா, புகழ்
வெளியான தேதி - 3 மார்ச் 2023
படத்தின் தலைப்பைப் பார்த்ததும் சர்ச்சையான படமாக இருக்குமோ என்று எதிர்பார்த்த ஒரு படம். ஆனால், மனிதத்தன்மைதான் மனிதர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதை வலியுறுத்திய ஒரு படம். கதாநாயகி குடும்பம் ஹிந்தியில் பேசி நடித்திருந்தாலும் மொழியைக் கடந்து உணர்வுகளைக் கடத்திய ஒரு படம். சசிகுமார், பிரியா அஸ்ரானி, யஷ்பால், புகழ், மற்ற கதாபாத்திரங்களில் நடித்த ஒவ்வொருவருமே பாராட்டுக்களைப் பெற்றார்கள். அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி அயோத்தியில் அற்புதம் நிகழ்த்தியிருந்தார்.
03. யாத்திசை
தயாரிப்பு - வீனஸ் இன்போடெயின்மென்ட், சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - தரணி ராசேந்திரன்
இசை - சக்கரவர்த்தி
நடிப்பு - ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி
வெளியான தேதி - 21 ஏப்ரல் 2023
சரித்திரக் கதைகள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு பிம்பத்தை உடைத்த படம். பிரம்மாண்டம் என்ற பூச்சு வேலைகள் இல்லாமல் அந்த சரித்திரக் காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றார் இயக்குனர் தரணி ராசேந்திரன். பாண்டிய மன்னனின் பெருமையைப் பேசிய படம். நடித்த புதியவர்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்தார்கள். இன்னும் அதிகமாக விளம்பரப்படுத்தி இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டது படக்குழு.
04. குட்நைட்
தயாரிப்பு - மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - விநாயக் சந்திரசேகரன்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக்
வெளியான தேதி - 12 மே 2023
நம்மைச் சுற்றியும் இன்னும் பல கதைகள் புதைந்து கிடக்கின்றன என்பதைக் காட்டிய ஒரு படம். குறட்டை விடுவதால் ஒருவரது வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்சனை வருகிறது என்பதை கலகலப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் கொடுத்திருந்தார் அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். 'ஜெய் பீம்' படத்தில் அனுதாபத்தை அள்ளிய மணிகண்டன் இந்தப் படத்தில் கலகலப்பான கதாநாயகனாக ரசிக்க வைத்தார். மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரெய்ச்சல் ரெபேக்கா என மற்ற அனைத்து நடிகர்கள், நடிகைகள் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பு. நிஜமாகவே 'குட்' ஆன ஒரு படம்.
05. போர்தொழில்
தயாரிப்பு - அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இ4 எக்ஸ்பரிமென்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோஸ்
இயக்கம் - விக்னேஷ் ராஜா
இசை - ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு - அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல்
வெளியான தேதி - 9 ஜுன் 2023
2023ல் வெளிவந்த த்ரில்லர் படங்களில் மிக முக்கியமான படம். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்று மிகவும் விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அசோக் செல்வன், சரத்குமார் வித்தியாசமான கூட்டணியாக அமைந்து ரசிக்க வைத்தார்கள். 'ஜெயிலர்' முத்துவேல் பாண்டியன் ஐபிஎஸ், கதாபாத்திரத்தை விடவும், சரத்குமார் நடித்த லோகநாதன் ஐபிஎஸ் கதாபாத்திரம் வலிமையானது. இந்த வருடத்தின் சீனியர் நடிகர்களுக்கான வெற்றியில் சரத்குமார் ஒரு சாதனையாளர்.
06. எறும்பு
தயாரிப்பு - மன்ட்ரு ஜிவிஎஸ் புரொடக்ஷன்
இயக்கம் - சுரேஷ் ஜி
இசை - அருண் ராஜ்
நடிப்பு - மோனிகா சிவா, சக்தி ரித்விக், சார்லி
வெளியான தேதி - 16 ஜுன் 2023
குழந்தை நட்சத்திரங்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு யதார்த்தமான படம். இயக்குனர் சுரேஷ் ஜி, கிராமத்து ஏழைக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒரு சிறுவனின் ஆசையை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார். சிறுமி மோனிகா சிவா, சிறுவன் சக்தி ரித்விக், சார்லி, சூசன், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருந்தார்கள். கிராமத்து வறுமையின் வாழ்வியலை உணர்வுபூர்வமாய் சொன்ன ஒரு படம்.
07. தண்டட்டி
தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - ராம் சங்கையா
இசை - கேஎஸ் சுந்தரமூர்த்தி
நடிப்பு - பசுபதி, ரோகினி, முகேஷ், விவேக் பிரசன்னா
வெளியான தேதி - 23 ஜுன் 2023
காதல் என்றால் மாநகரங்களில், நகரங்களில் இளம் வயதினருக்கு வருவது மட்டும்தானா. கிராமங்களில் வயதான மனிதர்களிடமும் புதைந்து போன காதல் எத்தனையோ இருக்கும் என்பதை உணர்வுபூர்மாய் சொன்ன ஒரு படம். அறிமுக இயக்குனர் ராம் சங்கையா கிராமத்து இறுதிச் சடங்கு வீடு ஒன்றை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார். பசுபதி, ரோகினி, முகேஷ் ஆகியோரது கதாபாத்திரங்கள் பல கிராமங்களில் நிறைந்திருப்பவை. படத்தின் கிளைமாக்ஸ் வயதான காதலர்களை மட்டுமல்ல, இளைய காதலர்களையும் கண்கலங்க வைத்தது.
08. சித்தா
தயாரிப்பு - ஏடகி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - எஸ்.யு. அருண்குமார்
இசை - திபு நினன் தாமஸ், விஷால் சந்திரசேகர்
நடிப்பு - சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர்
வெளியான தேதி - 28 செப்டம்பர் 2023
அம்மா, அப்பா, தங்கை, தாய் மாமா பாசங்களையே அதிகம் பார்த்த தமிழ் சினிமாவில் ஒரு சித்தப்பாவின் பாசத்தைச் சொன்ன படம். சிறுமியர் மீதான பாலியல் துன்புறுத்தல் தான் படத்தின் கரு. அதில் பாசம், காதல், நட்பு, கிரைம் என இதர உணர்வுகளையும் சேர்த்து கொடுத்திருந்தார் இயக்குனர் அருண்குமார். மாறுபட்ட நடிப்பில் சித்தார்த் ஆச்சரியப்படுத்திய படம். அறிமுக நாயகி நிமிஷா சஜயன் யார் இவர் எனக் கேட்க வைத்தார்.
09. இறுகப்பற்று
தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்
இயக்கம் - யுவராஜ்
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன்
வெளியான தேதி - 6 அக்டோபர் 2023
காமெடி படங்களைக் கொடுத்த இயக்குனர் யுவராஜ், கணவன், மனைவியருக்கு இடையில் வரும் பிரச்சனைகளை மையமாக வைத்து, உளவியல் பார்வையில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். மூன்று விதமான கணவன், மனைவி அவர்களுக்கு இடையேயான மோதல், கொஞ்சம் காதல் என நகர்ந்து வாழ்க்கையின் அர்த்தங்கள் சிலவற்றைப் புரிய வைத்த ஒரு படம். விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன் என இந்த அறுவரின் நடிப்பும் அவரவர் கதாபாத்திரங்களில் அருமை.
10. கிடா
தயாரிப்பு - ஸ்ரீ ஷ்ரவந்தி மூவிஸ்
இயக்கம் - ரா வெங்கட்
இசை - தீசன்
நடிப்பு - பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன்
வெளியான தேதி - 11 நவம்பர் 2023
கிராமத்து வாழ்வியல் படங்களின் வரிசையில் ஒரு சிறுவனின் தீபாவளி ஆசை என்னவென்பதை கண்ணீருடன் சொன்ன படம். அறிமுக இயக்குனர் ரா வெங்கட் அந்த கிராமத்தையும், அந்த ஒரே ஒரு வீட்டின் வலியையும் கண்முன் கொண்டு வந்து காட்டினார். மாஸ்டர் தீபன் தான் கதையின் நாயகன். இன்னமும் பல சிறுவர்களின் தீபாவளிக் கனவாக புத்தாடையும், பட்டாசும் இருக்கிறது. பூ ராமு, காளி வெங்கட், பாண்டியம்மா ஆகியோர் நம் கிராமத்தின் வெள்ளந்தி மனிதர்களாகவே வாழ்ந்து காட்டினர்.
11. ஜோ
தயாரிப்பு - விஷன் சினிமா ஹவுஸ்
இயக்கம் - ஹரிஹரன் ராம்
இசை - சித்து குமார்
நடிப்பு - ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிகா
வெளியான தேதி - 24 நவம்பர் 2023
மழைக் காலத்தில் வந்ததால் அதிகமான வரவேற்பைப் பெற முடியாமல் போன ஒரு படம். காதலை கொஞ்சம் தீவிரமாகக் காட்டியிருந்தாலும் காதலின் வலி என்பது பெண்களுக்கும் அதிகமுண்டு என அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் சொல்லியிருந்தார். ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிகா ஆகியோருடன் அன்புதாசன், ஏகன் ஆகியோரும் ஜோ படத்தின் ஜோரான கதாபாத்திரங்களாக, நடிகர்களாக மாறியவர்கள்.
12. குய்கோ
தயாரிப்பு - எஎஸ்டி பிலிம்ஸ் எல்எல்பி
இயக்கம் - அருள் செழியன்
இசை - அந்தோணி தாசன்
நடிப்பு - யோகி பாபு, விதார்த், ஸ்ரீபிரியங்கா, இளவரசு
வெளியான தேதி - 24 நவம்பர் 2023
மலை கிராமம் என்றாலே அழகுணர்வுடன் காட்டப்பட்ட படங்கள்தான் அதிகம். அப்படிப்பட்ட மலை கிராமம் ஒன்றின் வசதியற்ற நிலையை நகைச்சுவை கலந்து, உணர்வுபூர்மாய் சொன்ன படம். அறிமுக இயக்குனர் அருள்செழியன் கதைக் களத்தைத் தேர்வு செய்ததிலும், யதார்த்தமான கதை, கதாபாத்திரங்களை உருவாக்கிய விதத்திலும் கவனிக்கப்பட்டார். யோகிபாபு, விதார்த், இளவரசு, ஸ்ரீபிரியங்கா அந்த ஊரோடு ஒன்றியவர்களாக தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள்.
13. பார்க்கிங்
தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ், சோல்ஜர்ஸ் பேக்டரி
இயக்கம் - ராம்குமார் பாலகிருஷ்ணன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா
வெளியான தேதி - 1 டிசம்பர் 2023
'பார்க்கிங்' பிரச்சனை நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒன்று. தியேட்டர்கள், கடைத் தெரு, மார்க்கெட், தெருக்கள், வீடுகள், பிளாட்கள் என யாராவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட பார்க்கிங் பிரச்சனையில் ஒரு கதையை உருவாக்கி கவனிக்க வைத்தார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். வாடகை வீட்டில் இருக்கும் ஹரிஷ், எம்எஸ் பாஸ்கர் இருவரும் 'ஈகோ'வில் மோதிக் கொள்வது ஹீரோ, வில்லன் இடையேயான மோதலை விட அதிகமாக இருந்தது.
14. நாடு
தயாரிப்பு - ஸ்ரீ ஆர்க் மீடியா
இயக்கம் - சரவணன்
இசை - சத்யா
நடிப்பு - தர்ஷன், மகிமா நம்பியார்
வெளியான தேதி - 1 டிசம்பர் 2023
இயற்கை எழில் கொஞ்சும் மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டிய படம். மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ வசதி பார்க்கக் கூட பலரும் வரத் தயங்குவதை வெட்ட வெளிச்சமாகக் காட்டினார் இயக்குனர் சரவணன். தர்ஷன் மலை கிராமத்து இளைஞனராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேவை செய்ய வேண்டும், அதே சமயம் வசதியும் வேண்டும் என்ற டாக்டர் கதாபாத்திரத்தில் மகிமா நம்பியார் நடித்திருந்தார். இன்னும் பல வசதிகளைப் பெறாத மலைக் கிராம மக்களைப் பற்றி யோசிக்க வைக்கும் படம்.
15. ஆயிரம் பொற்காசுகள்
தயாரிப்பு - ஜிஆர்எம் ஸ்டுடியோ
இயக்கம் - ரவி முருகையா
இசை - ஜோஹன்
நடிப்பு - விதார்த், சரவணன், அருந்ததி நாயர்
வெளியான தேதி - 22 டிசம்பர் 2023
ஒரு கிராமம், ஒரு குடும்பம், ஒரு புதையல் மற்றும் ஊர் மக்கள் இவர்களை வைத்து ஒரு கலகலப்பான படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவி முருகையா. சரவணன் வீட்டின் எதிர்வீட்டுத் திண்ணையிலிருந்து அந்த கிராமத்தைப் பார்த்த ஒரு அனுபவத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர். விதார்த், சரவணன், அருந்ததி நாயர் மற்றும் நடித்த மொத்த பேரும் ஆஹா என சொல்ல வைத்திருக்கிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட படங்கள் வசூல் ரீதியாக எவ்வளவு வசூலித்தது, அந்தப் படங்கள் லாபமா, நஷ்டமா என்பதெல்லாம் மனதிற்குள் எழ வேண்டிய அவசியமில்லை. அந்தந்த படங்களை ரசித்து ரசித்து எடுத்த இயக்குனர்கள், அவரை நம்பி நடிக்க வந்தவர்கள், முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் தமிழிலும் சில தரமான படங்களைத் தர நாங்களும் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை விதைத்தவர்கள். இந்தப் படங்களால் அவர்கள் பெயர் வாங்காமல் போயிருக்கலாம், கோடிகளில் சம்பாதிக்க முடியாமல் போயிருக்கலாம், ஆனால் நல்ல முயற்சியைச் செய்தோம் என்ற ஒரு மனத்திருப்தி நிச்சயம் இருந்திருக்கும். அது எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கையைத் தரும்.