''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகை என்றாலே பல விதமான பார்வைக் கணைகளை வீசும் இந்த சமூகத்தில், குடும்ப பெண்ணாக இருந்து நடிகையான, சராசரி குடும்ப பெண் ராஜேஸ்வரி, அத்தகைய பார்வைக் கணைகளை எப்படி சமாளித்தார் என்பதை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
சினிமா வாய்ப்பு எப்படி?
மறைந்த வடிவேலு பாலாஜியால், சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அறிமுகமானேன்.வடிவேலு பாலாஜி இறக்கும் தருவாயில், சினிமாவில் நல்லா வருவே என, சொன்னது, இன்னும் காதில் கேட்கிறது.சில ஷோக்களை தொடர்ந்து, கணவர் அனுமதியுடன் சின்னத்தொடரில் நடித்தேன். பலரது பாராட்டை கேட்ட பின், பெரிய திரையில் நடிக்க ஆசைப்பட்டேன். என் கணவரும், மாமியாரும், நீ நல்லா நடிக்கிறாயே.,? என, ஆச்சரியப்பட்டனர்.
வீட்ல நடிப்பதை தான், நான் சினிமாவில் நடிக்கிறேன் என்றேன். சினிமா நண்பர்களின் அறிமுகம் கிடைத்த பின், விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்தேன். சினிமாவில் பெரிய திரையில் என்னை நானே பார்த்த பின், ஆசை தற்போது போதையாகி விட்டது.தமிழ் சினிமாவில் பெண் காமெடியன்கள் பெரிய அளவில் இல்லை, மனோரமா, கோவை சரளா மாதிரி நானும் வர ஆசைப்படுகிறேன். சாதிப்பேன் என, 200 சதவீதம் நம்பிக்கை உள்ளது.
உங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது சினிமாவில்...
மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக வரும் நடிகை சாரதா, எனக்கு அத்தை முறை. ஆனால், அவருடன் அவ்வளவு நெருக்கம் இல்லை. அப்பா மட்டுமே பழகியுள்ளார். எங்கள் குடும்பத்தில் நான் மட்டுமே சினிமாவில் வந்துள்ளேன்.
சின்னத்திரை அனுபவம் குறித்து?
அங்குள்ள அரசியலே வேறு. ஏஜன்ட் மூலமாக நடிக்க போனால் ஒரு பார்வை; கம்பெனி நடிகையாக போனால் ஒரு பார்வை இருக்கும். மரியாதை குறைவு அதிகமாக இருந்ததால், ஒரு கட்டத்தில் ஏஜன்ட் மூலமாக மட்டும் நடிக்க போகக்கூடாது என, முடிவு எடுத்தேன். அதன் பின், குறிப்பிட்ட நிறுவன மேலாளரிடம் அறிமுகமாகி, என் பயோடேட்டாவை அனுப்பி வைத்தேன். தினமும் அவர்களுக்கு குட்மார்னிங் மெசேஜ் தவறாமல் அனுப்புவேன். கணவர் என்னை சின்னத்திரை சங்கத்தில், 15 ஆயிரம் ரூபாய் கட்டி உறுப்பினராக்கினார். காமெடியாக நடிக்க ஆசைப்பட்ட எனக்கு, சின்னத்திரையில் தொடர்ந்து வில்லி பாத்திரம் மட்டுமே கிடைத்தது. இன்று புதுமுகங்களுக்கு தான் அதிக வாய்ப்பு கிடைக்கிறது.
சரி சினிமாவில் எப்படி?
இங்கு ஏமாந்து விடக்கூடாது; தன்மானத்தை விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். என் தோழியர் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் அந்த மாதிரி நபர்களிடம் சிக்க இருந்தேன். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத சிலர், ஆடிஷன் என்ற பெயரில் அழைத்து, நம்மை பாழாக்கி விடுவர். அந்த வகையில் நான் கவனமாக இருக்கிறேன். சகவயதுடையவர்களுடன் மட்டும் ஆடிஷன் போகக்கூடாது என்பதை, சமீபத்தில் புரிந்து கொண்டேன்.
எனிமி படத்தில் விஷால், தம்பி ராமையா உடன் நடனமாடி நடித்துள்ளேன். இருப்பு என்ற ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளின் தொகுப்பு எனும் ஆந்தா லஜி படம் ஒன்றிலும் கதை நாயகியாக நடித்து வருகிறேன்.
அதிர்ச்சி தந்த ஆடிஷன் அனுபவம் உண்டா?
நான் இப்போது ஆடிஷன்களுக்கே செல்வதில்லை. நம்பகமான நபர்கள் கூறினால் மட்டுமே செல்கிறேன். நம்மை வைத்து நான்கைந்து நாட்கள் நடிக்க வைத்து விட்டு, அவர்கள் பாடம் கற்பர். சிலர் இன்டர்வியூ வைப்பது போல், முதலிரண்டு கட்டத்தை தாண்டி விட்டீர்கள்; அடுத்த கட்டத்தையும் முடியுங்கள் என. ஐ.டி., ரேஞ்சுக்கு பேசுவர். நாம் மறுத்தாலும், வற்புறுத்தி மாடர்ன் உடை கொடுத்து நடிக்க வைப்பர். இதுபோன்றவர்கள் கடைசி வரை படம் எடுக்க மாட்டார்கள்.
ஒரு கட்டத்தில் கிளாமராக நடிக்கலாம் என முடிவு எடுத்து, ஒரு ஆடிஷனுக்கு சென்றேன். அங்கு சென்றதுமே, பின்னால் முழுவதும் தெரியும்படியாக ஒரு உடை கொடுத்து நடிக்க சொன்னார்கள். சார் நீங்கள் பலான மூவி எடுக்கிறீர்களா? அல்லது வெப்சீரிஸா? எனக் கேட்டு திட்டி விட்டேன்.
குடும்ப பெண்கள் நடிக்க வருவது குறித்து?
மற்ற தொழில்களை போல் தான் நடிப்பும். வீட்டு வேலைகளை முடித்து விட்டு, குடும்பத்தில் உள்ளவர்களிடமும் சம்மதம் வாங்கி, செலவு செய்து நடிக்க செல்கிறோம்.எனக்கான இலக்கை நோக்கியே சினிமாவில் நடிக்க வந்தேன். ஆனால், இங்கு மட்டுமல்ல, சமூகத்தில் உள்ள சிலருக்கும் நாம் கேவலமாகி விடுகிறோம். நேர்மை மட்டுமே கடைசி வரை நம்மை பாதுகாக்கும். அதிலிருந்து மட்டும் தவறி விடக்கூடாது.
சினிமாவில் எப்படி வர ஆசை?
வந்தனம்மா... வந்தனம்... போன்ற பாடல்களுக்கு நடனமாட ஆசை. பெரிய காமெடி நடிகையாக வேண்டும் என்பதே விருப்பம். சினிமாவில் என்னை அசிங்கப்படுத்தியவர்கள், என் கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டும்.