Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

பட்டத்து யானை

பட்டத்து யானை,Pattathu Yaannai
06 ஆக, 2013 - 16:54 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பட்டத்து யானை

     

தினமலர் விமர்சனம்


நடிகர் விஷால் மதுரையை பின்னணியாக (திமிரு...) கொண்டு நடித்த படங்களும், திருச்சியை பின்னணியாக (மலைக்கோட்டை) கொண்டு நடித்த படங்களும் ஹிட் அடித்துள்ளன! தெரிந்தோ(?) தெரியாமலோ(!) ‘‘பட்டத்து யானை’’ படத்தில் மதுரை, திருச்சி இந்த இரண்டு மாநகரங்களுமே பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளன. அப்புறமென்ன... காமெடி சரவெடி, ஆக்ஷ்ன் அதிரடி என்று அசத்தியிருக்கும் ‘‘பட்டத்து யானை’’ சூப்பர்-டூப்பர் ஹிட் அடிக்க இருக்கிறது. கங்கிராட்ஸ் விஷால்!!

காரைக்குடியின் பிரபல சமையல் சக்ரவர்த்தி சந்தானம். அவரிடம் பாவா லட்சுமணனின் சிபாரிசில், விஷால் தலைமையிலான ஐவர் குழு சமையலுக்கு வந்து சேருகிறது. வந்து சேர்ந்த வேகத்திலேயே சந்தானத்தை ஒரு பெரும் ரவுடியுடன் கோர்த்து விட்டு பயத்தில் சந்தானத்தை திருச்சிக்கு மூட்டை முடிச்சை கட்ட வைக்கிறது. இந்த ஐவருடன் திருச்சியில் ஹோட்டல் வைத்து பிழைத்துக் கொள்ளலாம் எனும் ஐடியாவுடன் ரூ.2 லட்சம் பணத்துடன் திருச்சிக்கு கிளம்பும் சமையல் சக்கரவர்த்தி சந்தானத்தை, திருச்சியில் சி்ங்கிள் டீக்கு வழியில்லாமல் ’அம்போ’ என விட்டுவிட்டு செல்கிறது விஷால் கோஷ்டி! கூடவே 2 லட்சம் பையையும் மிஸ் செய்யும் விஷாலுக்கு, அந்த காணாமல் போன பையால் கதாநாயகி பள்ளி மாணவியான ஐஸ்வர்யா அர்ஜூனுடன் காதல் ‘பிக்ஸ்’ ஆகிறது! அப்புறம்? அப்புறமென்ன, அந்த ஊர் வில்லனுக்கும் சில, பல காரணங்களால் ஐஸ் அர்ஜூன் மீது காதலும், அவர் குடியிருக்கும் வீட்டின் மீது ஒரு கண்ணும் விழுகிறது.

வில்லன் கோஷ்டி, சமையல்காரன் தானே?! என்று விஷாலை சாதாரணமாக நினைத்து ஐஸ்ஸையும், அவர் குடியிருக்கும் வீட்டையும் தூக்க பார்க்க, கைவசம் இருக்கும் சாரணி, சட்டுவத்தால் இருநூறுக்கும் மேற்பட்டி வில்லனின் கையாட்களையும், வில்லனையும் நையப்புடையத்து அனுப்பும் விஷால், தான் சாதாரண சமையல்காரன் அல்ல, மதுரையில் 3 பேர‌ை கொன்று அதற்கு சில வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தபோது, சிறையில் தான் சமையல் செய்வதையே கற்றுக்கொண்டதாக ப்ளாஷ்பேக் விரிக்கிறார். அங்கு அராஜமாக நடந்து கொள்ளும் 3 பேரை விஷால் நியாயத்திற்கா‌க போட்டுத்தாக்கும் கதை விரிகிறது! அதன்பின் மதுரை வில்லன், சென்னை வில்லன், திருச்சி வில்லன் இன்னும் சில சில்லரை வில்லன்கள் எல்லோரும் சேர்ந்து ஐஸ்வர்யாவையும், விஷாலையும் தீர்த்துகட்ட முயற்சிக்கின்றனர். அவர்களிடமிருந்து ஐஸ்ஸை காத்து அவர் விரும்பும் எம்.பி.பி.எஸ்., படிக்க வைக்கும் விஷால், தன்னையும் காத்துக் கொண்டு சந்தானத்திற்கு தன் நண்பர்களுக்கும் நல்லபடியாக ஹோட்டல் வைத்து கொடுத்தாரா? இல்லையா? என்பது காமெடியாகவும், அதிரடியாகவும், அதிரி புதிரியாகவும் படமாகியிருக்கும் ‘‘பட்டத்து யானை’’ படத்தின் மீதிக்கதை!!

விஷால், மெய்யாலுமே மிரட்டியிருக்கிறார். மனிதர் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் நூறு, இருநூறு அடியாட்களை அடித்து போடுவது நம்பும்படியாக இருப்பது படத்திற்கு பெரும் ப்ளஸ்! ஆனால், பள்ளி மாணவியாக வரும் ஐஸ்வர்யா பின்னால் வந்த வேலை, போன பணம், காத்திருக்கும் சந்தானம் பற்றியெல்லாம் கவலைபடாமல் லோலேவென சுற்றுவது நம்பும்படியாக இல்லை! விஷால் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்! இயக்குநருக்கும் சேர்த்து தான் சொல்கிறோம்!

ஐஸ்வர்யா அர்ஜூன் அப்படியொன்றும் அழகில்லை என்றாலும் உடை, நடை, எடை, உயரம் உள்ளிட்ட விஷயங்களில் விஷாலுக்கு பொருத்தமான ஜோடியாக பளீரிடுகிறார். பலே, பலே! என்ன ஒரே குறை ஐஸ்வர்யாவின் முகத்தில் அர்ஜூனும் தெரிவது சற்றே சலிப்பு தட்டுகிறது. அடுத்தடுத்த படங்களில் அம்மணி அந்த குறையை மேக்கப்பில் - பேக்கப் பண்ணட்டும்!

சந்தானம், சமையல் சக்ரவர்த்தியாக பட்டையை கிளப்பி இருக்கிறார். சில கடித்தாலும், பல தியேட்டரை அதிர வைக்கிறது! அதிலும் நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கமுத்து உள்ளிட்டவர்களை ஒன்றாக நிற்க வைத்து மண்ணெண்யை உமிழ்ந்து நெருப்பு பற்ற வைக்கும் காமெடியில், சிங்கமுத்துவின் மனைவியையை மட்டும் அவர் செய்கையால் நகர சொல்லும் இடத்தில் பண்ணும் சேட்டைகளும், பதிலுக்கு அந்த அம்மணி வாழை இலையால் மூடியிருக்கும் தன் மேனியில் இருந்து இலையை விலக்கும் இடமும் கொஞ்சம் கா‌மநெடி என்றாலும் செம காமெடி!

ஜாக்பாட் - மயில்சாமி, முருகா - ஜெகன், மருதமுத்து - முரளி சர்மா, சரித்திரன், ஜான் விஜய், பெசன்ட்நகர் ரவி, நான்கடவுள் ராஜேந்திரன், சித்ராலட்சுமணன் எல்லோரும் சூப்பர்!

எஸ்.எஸ்.தமனின் இசையில் ஐந்து பாடல்கள், ஐந்தும் ஐந்து விதம்! அருமையான பதம்! எஸ்.வைத்தியின் ஒளிப்பதிவும், ‘‘மலைக்கோட்டை’’ ‘பளிச்’சை மறுபடியும் தந்திருக்கிறது. அனல் அரசுவின் நம்பும்படியான சண்டைக்காட்சிகள், ரமேஷ்.ஏ.எல்.லின் பக்குவமான படத்தொகுப்பு எல்லாம் சேர்ந்து இயக்குநர் ஜி.பூபதிபாண்டியனின் இயக்கத்தில் ‘‘பட்டத்து யானை’யை மகுடம் சூட வைத்திருக்கிறதென்றால் மிகையல்ல!

மொத்தத்தில், ‘‘பட்டத்து யானை’’ - ‘‘பட்டையை கிளப்பும் யானை!!’’


-------------------------------------------------------------


குமுதம் விமர்சனம்



கொஞ்சம் ஆக்ஷன், நிறைய காமெடி. இதுதான் தற்போதைய ட்ரெண்ட் என்பதால் அதையே கையில் எடுத்திருக்கிறார் பூபதி பாண்டியன்.

கையில் இரண்டு லட்ச ரூபாய் பணத்துடன் ஓட்டல் ஆரம்பிக்க வெளியூர் வருகிறார் சந்தானம். அவரிடம் வேலைக்குச் சேரும் விஷால் அண்ட் கோ அந்தப் பணத்‌தைத் தொலைத்துவிட, பணத்துக்குப் பதில் காதலி கிடைக்கிறது விஷாலுக்கு. அப்புறம் என்ன? காதல், மோதல் என்று சடுகுடு ஆடுகிறது யானை!

கையில் அப்பாவின் ஃபோட்டோவுடன் சமையல்கார கெட்டப்புடன் சந்தானம் தோன்றும்போதே கலகலப்பு ஆரம்பித்துவிடுகிறது. ‘கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்ஸில்லா மாதிரி இருக்கான்’, என்று அவர் சொன்னாலும் சிரிக்கிறார்கள்.

வழக்கம்போல விஷால் எதிரிகளிடம் எக்குத்தப்பாய் மாட்டிக் கொள்ளும்போது, உதவிக்கு வருவதாகச் சொன்ன தாதாவும் தொலைபேசியில் கைவிரித்துவிட, அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், ‘வேண்டாம்ணே, நீங்க எல்லாம் வரவேண்டாம். நானே பாத்துக்கறேன்,’ என்று சொல்லி அதகளம் செய்யும் காட்சி பளிச். விஷாலும் தோழர்களும் சந்தானத்தை செமையாய் சோப் போடுவதும் கலகல.

அர்ஜுனின் பெண் ஐஸ்வர்யா அறிமுகம். பொம்மை மாதிரி இருக்கிறார். நல்ல பெரிய, அடர்த்தியான, வளைந்த, கவர்ச்சியான புருவங்கள்!

மயில்சாமிக்கு இந்தப்படம் மறுவாழ்வு. ஹேண்ட்பேக் ஜிப் என்று நினைத்து ஓர் ஆசாமியின் பேண்ட் ஜிப்பை அவர் அவிழ்த்துவிடும் காட்சியில் பாப்கார்ன்கள் பறக்கின்றன. ரவுடிகள் எல்லாம் சும்மா சவுண்ட் பார்ட்டியாக மட்டுமே இருக்கிறார்கள். போங்கு!

‘என்ன ஒரு என்ன அழகியடா பாடல்’ மட்டும் என்ன ஒரு என்ன ஒரு அருமையடா!

மொத்தத்தில் ‘பட்டத்து யானை’ - ‘சர்க்கஸ் யானை!’

குமுதம் ரேட்டிங் - ஓகே



--------------------------------------------------------------


கல்கி விமர்சனம்


பட்டத்து யானை - இயக்குனர் பூபதிபாண்டியனின் வழக்கமான காமெடி, சென்டிமென்ட், காதல், பழிவாங்கல்... இன்னும் பிற இத்யாதிகள் கலந்த கரம் மசாலா. இந்தக் கதைக்குள் தம்மைப் போகிற போக்கில் பொருத்திக் கொள்கிறார் விஷால்.

சமையலும் சமையலின் நிமித்தமாக நகர்கிற கதையில் அடிதடி, ஆக்ரோஷம், அலப்பற.... என்கிற காரப்பொடிகள் சற்றே தூக்கல்தான்.

காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு ஹோட்டல் வைக்கப் புறப்படுவதில் இருந்து கதையும் புறப்படுகிறது.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிற சந்தானத்தை மையமாகக் கொண்டே கதை சுழல்வதால் காமெடிக்கும் பஞ்சமில்லை. என்ன... சந்தானம் அடிக்கும் கவுண்டரில் சில சமயம் காதைப் பொத்திக்கொள்ளத் தோன்றுகிறது; பலசமயம் நெளிய வேண்டி இருக்கிறது. ஆனால், அவர் அடிவாங்குவதும், விஷால் அண்ட் கோ டைமிங்க் ‌காமெடியும் படத்தைச் சுணக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன.

படத்துக்கு பலம் விஷாலின் பிளாஷ்பேக் காட்சிஎனில் பலவீனம் ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜுன். கவர்ச்சி காட்டிய அளவுக்கு நடிப்பையும் காட்ட வேண்டும் அல்லவா? அப்படியென்றால் என்ன என்று கேட்பார் போல. தோற்றத்திலும் அந்தோ பரிதாபம்.

பஸ்ஸில் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு சந்தானம் அண்ட் கோ தவிக்கும்போதும, ஐஸ்வர்யா - விஷால் சந்தித்ததும் காதல் வயப்படும்போதும் முறையே அந்தத் தவிப்பும், காதலும் ரசிகனுக்குள் இறங்க வேண்டாமா...? இறங்கவில்லை. அந்தளவுக்குக் கதை பற்றிக் கவலைப்படாத காமெடி படம்னா பார்த்துக்கோங்களேன்?! அதுவும் பிக்பாக்கெட் அடிக்கப்போகிற இடத்தில் பேன்ட் ஜிப்பைத் திறக்கிற மயில்சாமி பண்றதுக்கு பேர் ‘காமெடி’ இல்லைன்னு தெரிஞ்சும், ‌ஸ்டன்ட் ஆட்களை காமெடிக்கு யூஸ் பண்ணி ‘காமெடி’ செய்திருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன்.

‘டமுக்குடப்பா டிய்யாலோ’ பாணியில் இருக்கிறது தமனின் இசை. ஆந்திராவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து தமிழில் மட்டும் சொதப்புவதை வாடிக்கையாகவே வைத்திருப்பார் போல. சபேஷ்-முரளியின் பின்னணி இசையில் கதையின் முதுகெலும்பில் கொஞ்சம் தெம்பு பரவுகிறது.

‘சமர்’ படத்தின் மூலம் சரிந்த விஷால் ‘பட்டத்து யானை’ மூலம் கொஞ்சம் நிமிர்ந்திருக்கிறார்... அவ்வளவுதான்.



--------------------------------------------------------------




நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com



ஹீரோ தன்னோட ஓனரோட பணம் 2 லட்சத்த பஸ்ல கொண்டு போகும் போது ஹீரோயின் அறிமுகம் கிடைக்குது .அவரும் இவரும் லவ் பண்றாங்க. அதே ஹீரோயினை வில்லனும் லவ் பண்றாரு. வில்லன் ஹீரோயினை பொண்ணு கேட்டு டார்ச்சர் பண்றாரு .வில்லன் கிட்டே இருந்து ஹிரோயினை ஹீரோ எப்படி காப்பாத்தறார் என்பதே மீதி கதை.

படத்தில் சந்தானத்தைவிட விஷாலுக்கு 3ல் 1 மடங்கு கூட வசனம் இல்லை.
இடைவேளை ட்விஸ்ட்க்காக அவர் மதுரைல ஆல்ரெடி 3 கொலை பண்ணி இருக்கேன்னு சொல்லும்போது பெரிய ஷாக் எல்லாம் வரலை .இவர் டான்ஸ் ஆடும்போது விஜயை இமிடேட் பண்றது பத்தாதுன்னு கவுண்டமணியும் இமிடேட் பண்றாரு.
ஹீரோயின் ஆக்ஷன் கிங்க் அர்ஜூன் பொண்ணு ஐஸ்வர்யா அர்ஜூன் . கார்த்திகா மாதிரி வரைஞ்சு வெச்ச பெரிய புருவம் . பொம்மை மாதிரி இருக்கார் சந்தானம் தான் நிஜ ஹீரோ . படம் பூரா இவர் ராஜ்ஜியம் தான் . ஆனா சிரிப்பு கம்மியாதான் வருது. ஓவர் டோஸ். ஏதோ அவருக்கு சீன் வெச்சா போதும்னு அதிகமா ஸ்க்ரிப்டுக்கு மெனக்கெடலை போல.
மயில்சாமி ஒரு ஆச்சரிய அப்ளாஸ் . செம காமெடி வரும்போதேல்லாம் செம சிரிப்பு
வில்லன் காமெடியன். அவர் அடியாள். காமெடியும் ஓக்கே



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
 
1. பட ஷூட்டிங் நடக்கும்போது ஹீரோ டைரக்டரை பாராட்டினார்னு சொன்னது.
2. இந்தப்படம் பெரிய டர்னிங் பாயிண்ட்னு விஷால் பேட்டி குடுத்தது
3. வில்லன் அண்ட் கோ அடியாள்கள் காமெடி அலப்பறைகள், மயில்சாமி காமெடி சீன்கள்
4. முதலாளி முன் ஹீரோ அடிக்கடி " எங்க முதலாளி ந ல்ல முதலாளி பாட்டு ரிங்க் டோன் போட்டு கலாய்ப்பது
5. கண்டிப்பா கடன் கிடையாது பேப்பரை சந்தானம் சாப்பிட்டு ஹோ ட்டலில் செய்யும் காமெடி காட்சிகள்
6. அரங்கை அதிர வைத்த மயில்சாமி பிக் பாக்கெட் அடிக்கும்போது மெயின் பேன்ட் ஜிப்பில் கை வைக்கும் காமெடி


இயக்குநரிடம் சில கேள்விகள்
 
1. முதல் சீன்ல வில்லன் ஒரு சூட்கேஸ் ல அரிவாளை காட்டி கத்தி என்பது
2. விஷால் 20 ரூபா குடுத்து ஏழைக்கு மல்லிகைப்பூ வாங்கிக்குடு என்றதும் பூக்காரி 7 முழம் மல்லிகைப்பூ தருவது
3. பண்பாடு, கலாச்சாரம் , பாரம்பரியம் என பேசும் பட்டிமன்ற ராஜா சாப்பிட்டுப்போங்க என்பதை இடது கையால் சைகை காட்டி சொல்வது , அதே போல் ஹீரோயினும் இடது கையால் சாப்பிடுவது பற்றி சைகை காட்டுவது
4. ஸ்கூல் பெண்கள் எல்லாரும் ரோஸ் கலர் தாவணி அணிந்திருக்கும்போது பேப்பரில் வரும் போட்டோவில் மட்டும் மற்ற பெண்கள் ப்ளூ டிரஸ் , ஹீரோயின் மட்டும் ரோஸ் எப்படி?
5. பெட்ரோல் போடப்போகும் வில்லன் பங்க்கில் டீச்சரைப்பார்த்ததும் ஆன் த ஸ்பாட் கடத்தி ரேப் பண்ணுவது செம காமெடி . பாசிபிலிட்டியே இல்லை

மனம் கவர்ந்த வசனங்கள்

1. முதலாளி, உங்கப்பா போட்டோவை நாங்க 4 பேரும் ஆளுக்கு 1 காப்பி வெச்சுக்கறோம்
சந்தானம் - ஆளாளுக்கு வெச்சுக்க அது என்ன நயன்தாராவா? எங்க நைனா
2. இன்ஸ்பெக்டர். நான் ஒரு ஜென்ட்டில்மேன்
நெல்லை சிவா - ஜென்ட்டில்மேனே ஒரு திருடன் தானே?
3. சந்தானம் - ஹலோ.
அடடே. முதலாளி. நானே கூப்டனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.
ஓஹோ.  சரி. கால் கட் பண்றேன். கூப்டு
4. என்ன சாப்டறீங்க? லைட்டா டிபனா ? புல் மீல்சா?,
லைட்டா டிபன் சாப்டுட்டு அப்டியே மீல்சும் சாப்பிடறோம்
5. டாடி மம்மி வீட்டில் இல்ல பாட்டு
முதல்ல இந்தப் பொண்ணோட அட்ரஸ் வாங்குங்கடா. எப்போ பாரு சிக்னல் குடுத்துட்டே இருக்கு

சி பி கமெண்ட் - சந்தானம் , விஷால் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் . போர் அடிக்கலை , ஆனா தலை வலிக்குது . சி சென்ட்டர் ல மட்டும் சுமாரா ஓடும்.



வாசகர் கருத்து (15)

பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
16 ஆக, 2013 - 14:05 Report Abuse
பி.டி.முருகன்    படப்பிடிப்பை திருச்சியில் எங்கள் பகுதியில் நடத்திய போது வேடிக்கை பார்த்தேன். படம் எப்படிவருமோ என்று அவர்களை விட எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இப்போது விமர்சனத்தை பார்த்து உண்மையை புரிந்து கொண்டேன்'.பட்டத்து யானை' உபயம் விஷாலோடு எங்கள் வீட்டு முன்பு குரூப் போட்டோ எடுத்து கொண்டது தான்..
Rate this:
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
16 ஆக, 2013 - 13:58 Report Abuse
பி.டி.முருகன்    போட்ட முதலுக்கு மைக்கேல் ராயப்பனுக்கு மோசமில்லை.நஷ்டம் ஒன்றும் வராது. சீறடி சாய்பாபா ஹீரோ விஷாலை கைவிடவில்லை.
Rate this:
anbu - seremban,மலேஷியா
09 ஆக, 2013 - 03:03 Report Abuse
anbu நல்ல நகைசுவை கலந்த படம்
Rate this:
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
06 ஆக, 2013 - 08:36 Report Abuse
Idithangi அய்யா வால்பையா அப்போ தலைவா தடுக்கி விளுந்துடுமா ?
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
03 ஆக, 2013 - 23:06 Report Abuse
Arumugam படம் நல்ல கலகலப்பாக இருக்கிறது. விஷாலுடைய நடிப்பு மற்றவர்களைவிட வித்தியாசமாக ரசிக்கும்படி இருக்கிறது. ஐஸ்வர்யா அர்ஜுன் அழகாகவும்,மென்மையாகவும் இருப்பதுடன் நன்றாகவும் நடித்திருக்கிறார்.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in