நடிகர்கள் : ராகுல் போஸ், அதிதி
13 வயதில் மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தெலுங்கானா சிறுமி பூர்ணா மாளாவத்தின் வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து வெளியாகியுள்ள படம் தான் ‛பூர்ணா.
கதைப்படி, தெலுங்கானா பகுதியில் ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பவர் 13 வயதே ஆன சிறுமி பூர்ணா. படிப்பதற்கே சிரமப்படும் பூர்ணா, அங்குள்ள அரசு பள்ளியில் படிக்கிறார். மறுபுறம் மகளுக்கு திருமணம் வைக்கும் முனைப்போடு பணம் சேர்க்க முயற்சிக்கிறார் பூர்ணாவின் தந்தை. இந்தநேரத்தில் ஐபிஎஸ்., அதிகாரி பிரவீன் குமார் எனும் ராகுல் போஸ் அந்த ஊருக்கு வருகிறார். பூர்ணாவின் ஏழ்மை நிலை கண்டு அவருக்கு உதவுகிறார். கல்வி மட்டுமல்ல இன்னும் பிற துறைகளிலும் பூர்ணாவை சாதிக்க உதவுகிறார். அதன்படி, தனக்குள் இருக்கும் மலையேறும் திறமையை கொண்டு ஒரு உரிய பயிற்சியாளரிடம் உதவியோடு எப்படி உலகின் மிகப்பெரிய உயரமான மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கிறார். அதற்காக அவர் படும் சிரமங்கள் என்னென்ன என்பது பூர்ணா படத்தின் மீதிக்கதை.
பூர்ணாவாக சிறுமி அதிதி நடிக்கவில்லை, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பிரவீன் குமார் ரோலில் கம்பீரமாக வரும் ஐபிஎஸ்., அதிகாரி ராகுல் போஸ், அருமையாக, யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
ஐபிஎஸ்., அதிகாரியாக நடித்திருப்பது மட்டுமின்றி பூர்ணா படத்தை இயக்கவும் செய்துள்ளார் ராகுல் போஸ். ஒருவரின் வாழ்க்கை படமாக இருந்தாலும் அதை சினிமாவாக எடுக்கும்போது சிலர் கமர்ஷியலாக சில விஷயங்களை திணிப்பார்கள். ஆனால் ராகுல் போஸ் அப்படி எதுவும் செய்யாமல் படத்திற்கு என்ன தேவையோ அதை மிகைப்படுத்தாமல் அழகாக தந்திருக்கிறார். ராகுல் போஸின் இயக்கம் போன்றே இசை, ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளும் பூர்ணாவிற்கு பலம் சேர்த்திருக்கின்றன. எனவே, சினிமாதனம் இல்லாத ஒரு யதார்த்த பதிவான பூர்ணாவை குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு சென்று பார்க்கலாம், ரசிக்கலாம்.
மொத்தத்தில், ‛பூர்ணா - சிகரம்!‛