நேர்கொண்ட பார்வை,Nerkonda Paarvai

நேர்கொண்ட பார்வை - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அஜித், ஷ்ரத்தா, அபிராமி
தயாரிப்பு - ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ
இயக்கம் - வினோத்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி - 8 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் காதலையும், காமத்தையும் கண்ணியமாகச் சொன்ன பல படங்கள் உள்ளன. காதலைக் கூட பார்க்காத காதல், தொடாத காதல் என பெண்களும், குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் கூட இதற்கு முன்பு எத்தனையோ படங்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் ரசிகர்களுக்குப் பொருத்தமான கதைகளைத்தான் படமாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் நினைப்பார்கள். ஆனால், இந்தக் காலத்தில் தமிழ் ரசிகர்களின் மனோபாவத்திற்கு எதிரான சில பல படங்கள் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

சமீபகாலமாக போதைப் பொருட்களைப் பற்றிய படங்கள் வந்து ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தன. தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மாற்ற ஏதோ ஒரு மறைமுகத் திட்டம் சில படைப்பாளிகளிடம் இருக்கிறதோ என்ற அச்சத்தை அது ஏற்படுத்தியது.

இந்த நேர்கொண்ட பார்வை படமும் நம் தமிழ் மண்ணுக்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு, சினிமா ரசிகர்களின் ரசனைக்கு எதிரான ஒரு படமாகத்தான் பார்க்க முடியும்.

23 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து அஜித்தை அனைத்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படமான காதல் கோட்டை படத்தில் ஒரு காட்சி வரும். சாலையில் தன் காதலனுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் காதலியைப் பார்த்து ஆட்டோ டிரைவரான தலைவாசல் விஜய் நாய் காதல் என்று திட்டுவார். சாலையில் முத்தமிட்டதைப் பற்றி அப்படி சொன்ன ஒரு படத்தில் நடித்து தன் இமேஜை அதிகம் உயர்த்தியவர்தான் அஜித். அப்படி ஒரு படத்தில் நடித்த அஜித் இந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க சம்மதித்ததன் காரணம் ஆச்சரியமான ஒன்றுதான்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா மூவரும் ஒரே அறையில் தங்கி வேலைக்குச் சென்று வரும் தோழிகள். ஒரு நாள் அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மற்றும் அவரது நண்பர்களுடன் பார்ட்டி பண்ணுகின்றனர். அப்போது அந்த இளைஞர் ஷ்ரத்தாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார். தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அந்த இளைஞரை கடுமையாகத் தாக்குகிறார் ஷ்ரத்தா. பின்னர் அவரும், அவரது தோழிகளும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். அந்த இளைஞரின் மாமா அரசியல் பின்னணி கொண்ட ஜெயப்பிரகாஷ், ஷ்ரத்தா மற்றும் தோழிகளை மிரட்டுகிறார். ஷ்ரத்தாவை பாலியல் தொழில் செய்பவர் என கைது பண்ணவும் வைக்கிறார்கள். ஷ்ரத்தாவிற்கு ஆதரவாக பக்கத்து வீட்டுக்காரரான அஜித் களமிறங்குகிறார். பிரச்சினையை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவாகிறது. வழக்கு நீதிமன்றம் வருகிறது. ஷ்ரத்தா மற்றும் தோழிகளை பாலியல் தொழிலாளிகள் என நிரூபிக்க வைக்க முயல்கிறது அந்த இளைஞரது தரப்பு. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு படத்தில் யார் மீது தவறாகவோ, அபாண்டமாகவோ குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் மீது நமக்கு அனுதாபம் வந்தால் மட்டுமே அது ரசிகர்களின் ஆதரவைப் பெறும். இந்தப் படத்தில் ஷ்ரத்தா மற்றும் அவரது தோழிகள் மீது நமக்கு அனுதாபம் தான் அதிகம் வர வேண்டும். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் மீது அனுதாபம் வராத அளவிற்கு அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் காட்சிகளில் அனுதாபம் வருவதை விட அதிர்ச்சிதான் அதிகம் வருகிறது.

நோ என்ற ஒரு வார்த்தையை வைத்து படத்தை வேறு ஒரு தளத்தில், கோணத்தில் கொண்டு செல்கிறார்கள். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை யாரும் தொடக் கூடாது என்பதுதான் படத்தின் கரு. ஷ்ரத்தா 19 வயதில் அவரது காதலனுடன் உடல் ரீதியாக உறவு வைத்து தன் கன்னித் தன்மையை இழக்கிறார். அதன்பின் மேலும் சில ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்கிறார். அவையெல்லாம் அவரது விருப்பத்திற்கேற்றபடி நடந்தவை, அதனால் அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதே சமயம், அவரது விருப்பத்திற்கு எதிராக யாராவது அவரைத் தொட்டால் அது மிகவும் தவறானது, தண்டனைக்குரியது. இதைத்தான் இந்த நேர்கொண்ட பார்வை படம் சொல்ல வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த கதையமைப்பு, கவனிக்கவும், கதாபாத்திரம் அல்ல, கதையமைப்பு, சரியா, தவறா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இந்த கதையமைப்பை பெரும்பான்மை சமூகம் சரி என்று சொல்ல வாய்ப்பில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.

நரைத்த முடி, தாடி, மீசை என முழுமையான சோகத்தில், மனைவியைப் பறி கொடுத்து மனச் சிதைவுடன் இருக்கும் கதாபாத்திரம் அஜித்துக்கு. மக்கள் நலனுக்காகப் போராடும் வக்கீல், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தானே களமிறங்கி வாதாடுகிறார். நீதிமன்றக் காட்சிகளில் அஜித்தின் தெளிவான, அழுத்தமான வசனம் அட போட வைக்கிறது. அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்த இடைவேளைக்கு முன்பான அந்த சண்டைக் காட்சிகள் சிம்ப்ளி சூப்பர்ப்.

ஷ்ரத்தா, அபிராமி, ஆன்ட்ரியா மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். ஷ்ரத்தாவிற்கு மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. மிக அருமையாக நடித்திருக்கிறார். அபிராமி, ஆன்ட்ரியா ஆகியோரை புதுமுகம் என்று சொல்ல முடியாது.

அஜித் மனைவியாக வித்யாபாலன், குறைவான காட்சிகளில் வந்து போகிறார். ஆனால் அந்த கொஞ்சநேரமும் அஜித்திற்கு பொருத்தமான ஜோடியாக இருக்கிறார். அகலாதே பாடலில் இருவருக்குமான ரொமான்ஸ் அழகாக வந்துள்ளது.

அஜித்துக்கு எதிராக அரசு வழக்கறிஞராக குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்பவராக ரங்கராஜ் பாண்டே. அவர் வாதாடுவதெல்லாம் ஓகே. அஜித்துக்கு எதிராக இவரா என்ற யோசனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஜெயப்பிரகாஷை ஆரம்பத்தில் அப்படி ஒரு பில்ட்-அப்புடன் காட்டுகிறார்கள். அதன்பின் அவர் ஒன்றுமே செய்யாமல் இருக்கிறார்.

அஜித் படம் என்றாலே யுவன்ஷங்கர் ராஜாவிற்கு ஸ்பெஷல் போலிருக்கிறது. பின்னணி இசையில் வழக்கம் போல தன் இருப்பைப் பதிவு செய்கிறார். அதிலும் அந்த சண்டைக் காட்சிக்கு அமைத்த இசை தனி ரகம். வானில் இருள், அகலாதே பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

நீதிமன்றக் காட்சிகள்தான் இடைவேளைக்குப் பின் படத்தை ஆக்கிரமிக்கின்றன. அது சற்றே அலுப்பை தருகிறது. குடும்பத்து ரசிகர்களும், பெண்களும் இப்படத்தைப் பார்க்க முன் வருவார்களா என்பது சந்தேகம்தான்.

வழக்கமான மசாலா படங்களிலிருந்து ஒரு மாறுபட்ட கதையில் நடிக்க முன் வந்ததற்காவது அஜித்தைப் பாராட்டலாம். தமிழ் ரசிகர்களுக்காக கதை, திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருந்தால் இப்படத்தின் வெற்றியும், வரவேற்பும் வேறு விதத்தில் இருந்திருக்கும்.

விருப்பமில்லாத பெண்கள் ‛நோ என்று சொல்லிய பிறகு அவர்களை தொடுவது சட்டப்படி குற்றம். அதைத்தான் இந்தப்படம் அழுத்தமாய் சொல்கிறது.

நேர்கொண்ட பார்வை - நோ கொண்ட பார்வை

 

நேர்கொண்ட பார்வை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நேர்கொண்ட பார்வை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

அஜித் குமார்

நடிகர் அஜித்குமாரின் சொந்த ஊர் ஐதராபாத். 1971ம் ஆண்டு மே மாதம் 1ம்தேதி பிறந்த இவர், 1992ம் ஆண்டு பிரேம் புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த புதுமுகத்திற்கான விருது பெற்ற அஜித், தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் தமிழ் படம் வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்து பாசமலர்கள், பவித்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அஜித்தின் முதல் வெற்றிப்படம் ஆசை. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், வாலி, பூவெல்லாம் உன் வாசம், முகவரி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், வரலறு, பில்லா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

அஜித்தின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. அஜித் சிறந்த கார் பந்தய வீரர் என்பது கூடுதல் தகவல்.

மேலும் விமர்சனம் ↓