வலிமை,Valimai

வலிமை - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பேவியூ புராஜக்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர்
இயக்கம் - வினோத்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா
வெளியான தேதி - 24 பிப்ரவரி 2022
நேரம் - 2 மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் - 3/5

போதைப் பொருள், தவறான சில இளைஞர்கள், அவர்களை வழி நடத்த ஒரு தலைவன், அவர்களைக் கண்டுபிடிக்க முயலும் ஒரு காவல்துறை அதிகாரி இதுதான் 'வலிமை'. தமிழ் சினிமாவில் பல்வேறு காலங்களில் பல்வேறு விதமாக சொல்லப்பட்ட ஒரு கதையைத்தான் இயக்குனர் வினோத் இந்தப் படத்திலும் கொடுத்திருக்கிறார். அதை எப்படி கொடுத்திருக்கிறார் என்பதுதான் கேள்வி.

கொலம்பியாவிலிருந்து கடல் வழியாக போதைப் பொருளை ஒரு கும்பல் வழக்கமாகக் கடத்துகிறது. அவர்களிடமிருந்து போதைப் பொருளைக் கொள்ளையடித்து இங்கு இளைஞர்கள் மூலம் விற்கும் வில்லன் கார்த்திகேயா. வெறும் போதைப் பொருளை மட்டும் கடத்தாமல், செயின் பறிப்பு, ஆட்கள் கொலை என்று 'டார்க் வெப்' மூலம் செய்கிறது கார்த்திகேயா தலைமையிலான கும்பல். சென்னைக்குப் புதிதாக பொறுப்பேற்கும் உதவி கமிஷனரான அஜித்குமார் அந்த கும்பலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஸ்மார்ட்டான உதவி கமிஷனராக அஜித்குமார். அவர் நடந்து வந்தாலே போதும் அவருடைய ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடுவார்கள். இதிலும் அவ்வப்போது அப்படியே நடந்து வருகிறார், பன்ச் டயலாக் பேசுகிறார். எதிரிகள் பற்றியும், சிஸ்டம் பற்றியும், குடும்பம் பற்றியும் கிடைக்கும் கேப்புகளில் அட்வைஸ் செய்கிறார். இந்தப் படத்தில் இவற்றை மீறி அவர் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் ஆஹா..ஆஹா..என சொல்ல வைக்கிறது. தன்னுடைய ரசிகர்களை முழுதாகத் திருப்திப்படுத்தினால் போதும் என நினைத்து அதைச் செய்துள்ளார்.

படத்தின் கதாநாயகி என்று சொல்ல முடியாத ஒரு கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி. போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஒரு முக்கிய அதிகாரி. ஆரம்பத்தில் ஒரே ஒரு காட்சியில் அஜித்திடம் என்னை 'கட்டிக் கொள்வதுதானே' எனக் கேட்கிறார். நல்ல வேளையாக தெலுங்குப் படம் போல அங்கு டூயட் போடவில்லை. இவரும் அஜித்தும் காதலர்களா என்ற விளக்கத்திற்கெல்லாம் இயக்குனர் போகவேயில்லை.

நாயகன் அஜித் அளவிற்கு வில்லன் கார்த்திகேயாவிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவரின் அறிமுகக் காட்சியிலேயே சிக்ஸ் பேக்கைக் காட்டிவிட்டுத்தான் அவருடைய முகத்தையே காட்டுகிறார்கள். நாயகன் அஜித்திற்கு சரியான 'டப்' கொடுக்கிறார். இப்படியான இளம் மிரட்டல் வில்லன்கள் தமிழ் சினிமாவில் இல்லை. விருப்பமிருந்து இதைத் தொடர்ந்தால் கார்த்திகேயா அந்த இடத்தை நிரப்பலாம்.

ஆக்ஷன் மட்டும் இருந்தால் அஜித் ரசிகர்களை மட்டும்தான் திருப்திப்படுத்த முடியும் என்று அம்மா, அண்ணன், தம்பி சென்டிமென்ட் வைத்திருக்கிறார்கள். இஞ்சினியரிங் முடித்த தம்பி ராஜ் ஐயப்பாவுக்கு வேலையில்லை, அவரைப் பலரும் அவமானப்படுத்துகிறார்கள் என்று ஆரம்பக் காட்சி வரும் போதே அவர் வில்லன் கூட்டத்தில் சேர்ந்துவிடுவார் என்று யூகிக்க முடிகிறது. அம்மா சுமித்ரா, அண்ணன் அச்யுத் குமார் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். நாயகனுக்கு உதவி செய்யும் கமிஷனராக செல்வா, வில்லனுக்கு உதவி செய்யும் இணை கமிஷனராக சுந்தர் என தமிழ் சினிமாவில் பல படங்களில் பார்த்த பாத்திரங்கள், மாற்றி யோசித்திருக்கலாம்.

படத்தின் முடிவில்தான் கலைஞர்களின் டைட்டில் வருகிறது. இசை யுவன் என்றும், நன்றி ஜிப்ரான் என்றும் போட்டு சமாளித்திருக்கிறார்கள். யுவன்தான் பின்னணி இசை அமைத்தாரா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும். யுவன் இசையமைத்த அம்மா சென்டிமென்ட் பாடலை கிளைமாக்ஸ் முடிவில் போடுகிறார்கள். இடையில் வரும் அம்மா பாடல் ஜிப்ரான் இசையமைத்ததா என்பதும் தெரியவில்லை. இசையில் ஏன் இத்தனை குழப்பம்.

பைக் சேசிங் காட்சிகளை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா எப்படி படமாக்கியிருப்பார் என்று வியக்க வைக்கிறது. தமிழ்ப் படங்களில் இதுவரை இப்படி ஒரு ஸ்டன்ட் காட்சிகள், சேசிங் காட்சிகளைப் பார்த்ததில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயனுக்கும், அவரது குழுவினருக்கும் இந்தப் பெருமை முழுமையாகச் சேரும்.

இடைவேளை வரை படத்தை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலுடனும் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் வினோத். இடைவேளைக்குப் பிறகு முதல் பாதியை விட இன்னும் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. வழக்கமான தமிழ்ப் படங்களைப் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. அதையும் முதல் பாதி போல அதிக கவனம் செலுத்தி இன்னும் வித்தியாசமாக எடுத்திருக்கலாம்.

இருப்பினும் அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் படமாக இருக்கிறது. 'விவேகம்' படத்தை விட மேலாகவும், 'விஸ்வாசம்' படத்தை விட கொஞ்சம் கீழாகவும் இருக்கிறது இந்த 'வலிமை'.

வலிமை - இடைவேளை வரை வலிமை, பின்னர் தேவை பொறுமை…

 

வலிமை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வலிமை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

அஜித் குமார்

நடிகர் அஜித்குமாரின் சொந்த ஊர் ஐதராபாத். 1971ம் ஆண்டு மே மாதம் 1ம்தேதி பிறந்த இவர், 1992ம் ஆண்டு பிரேம் புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த புதுமுகத்திற்கான விருது பெற்ற அஜித், தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் தமிழ் படம் வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்து பாசமலர்கள், பவித்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அஜித்தின் முதல் வெற்றிப்படம் ஆசை. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், வாலி, பூவெல்லாம் உன் வாசம், முகவரி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், வரலறு, பில்லா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

அஜித்தின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. அஜித் சிறந்த கார் பந்தய வீரர் என்பது கூடுதல் தகவல்.

மேலும் விமர்சனம் ↓