சக்ரா,Chakra

சக்ரா - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா
தயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரி
இயக்கம் - எம்.எஸ்.ஆனந்தன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி - 19 பிப்ரவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 11 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரு படத்தில் ஒரு போலீஸ் கதையைப் பார்க்கலாம், இன்னொரு படத்தில் மிலிட்டரி கதையைப் பார்க்கலாம். ஆனால், இந்தப் படத்தில் இரண்டையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் ஆனந்தன் படத்தின் கதையை யோசிக்க பெரிதாக குழப்பிக் கொள்ளவில்லை. விஷால் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த இரும்புத் திரை படத்தைப் பார்த்தபின் கூட அவருக்கு இந்த கதைக்கரு உதித்திருக்கலாம்.

யோசித்த அளவிற்கு திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டவில்லை. சில வசனங்களைப் பேசினாலே ரசிகர்கள் கைத்தட்டி விடுவார்கள் என நினைத்திருக்கிறார். சில பல காட்சிகள் அமெச்சூர்த்தனமான வேறு இருக்கிறது. இரும்புத் திரை மாதிரியான ஹைடெக் படத்தில் நடித்த விஷால் இம்மாதிரியான படங்களில் நடிப்பதற்கு ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்தால் அவருக்கு நல்லது.

சுதந்திர தினத்தன்று சென்னையில் ஒரே நாளில் முதியவர்கள் வசிக்கும் 50 வீடுகளில் கொள்ளை நடக்கிறது. அந்த வழக்கை அசிஸ்டென்ட் கமிஷனரான ஷ்ரத்தா ஸ்ரீநாத் விசாரிக்கிறார். 50வது கொள்ளை நடந்த வீடு மிலிட்டரியில் இருக்கும் விஷால் வீடு. கொள்ளையர்கள் அவரது அப்பாவின் சக்ரா விருதையும் சேர்த்து கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்க்ள். ஷ்ரத்தாவும் விஷாலும் காதலர்கள். தன் அப்பாவின் விருதை மீட்க, காதலி ஷ்ரத்தாவிற்கு உதவியாக வழக்கு விசாரணையில் உடன் இறங்குகிறார் விஷால். இருவரும் கொள்ளையர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எந்த ஒரு ஆக்ஷன் கதையாக இருந்தாலும் அது விஷாலுக்குப் பொருத்தமாகவே இருக்கும். இந்தப் படத்தின் மிலிட்டரி ஆபீசர் கதாபாத்திரமும் அவருக்குப் பொருத்தமாகத்தான் உள்ளது. சைபர் கிரைம் மூலம் கொள்ளை அடிப்பவர்களை டெக்னிக்கலாக வளைத்துப் பிடிப்பதை விட அதிகம் பேசிப்பேசியே பிடிப்பது போல் இருக்கிறது. அவர்களைப் பிடிக்க உதவியாகவும், வசதியாகவும் திரைக்கதையில் தேவைப்படும் இடங்களில் அவர்களே நெளிவு சுளிவுகளை வைத்துக் கொண்டுள்ளார்கள்.

அசிஸ்டென்ட் கமிஷனராக ஷ்ரத்தா ஸ்ரீநாத். போலீஸ் உடையில் ஓரிரு காட்சிகளில்தான் வருகிறார், மற்றபடி மப்டியில்தான் இருக்கிறார். அவர் செய்ய வேண்டிய வேலைகளை விஷாலே வான்டட் ஆக செய்ய, இவர் அவர் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

உயர் அதிகாரிகளிடம் கூட மரியாதை இல்லாமல் பேசும் ரோபோ சங்கர் கதாபாத்திரம் சீரியஸ் காட்சிகளில் அதன் இயல்புத் தன்மையைக் கெடுத்துவிடுகிறது. ஒரு ஸ்டேஷனில் எஸ்ஐ, இன்ஸ்பெக்டரிடம் கூட அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் காவலர்கள் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். ஆனால், கமிஷனர் எதிரிலேயே அவரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுகிறார். இதையெல்லாம் காமெடி என்ற லிஸ்ட்டில் எப்படி வைப்பார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.

படத்தின் வில்லன், சாரி, வில்லி ரெஜினா. இடைவேளைக்குப் பிறகுதான் என்ட்ரி கொடுக்கிறார். அவர் ஏன் இப்படி ஆனார் என்பதற்கு சினிமா வழக்கப்படி ஒரு பிளாஷ்பேக் உண்டு. கஷ்டப்பட்டு வில்லித்தனத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார் ரெஜினா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேஆர் விஜயா. விஷாலின் பாட்டியாக வருகிறார். மனோபாலா இன்னும் எத்தனை படத்தில்தான் இப்படி பேச வைப்பார்களோ தெரியவில்லை. சிருஷ்டி டாங்கே ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார்.

நல்ல வேளை படத்தில் ஒரே ஒரு பாடல்தான். இன்னும் பாடல்கள் இருந்திருந்தால் அது படத்திற்கு ஸ்பீட் பிரேக்கராக இருந்திருக்கும். பாடல்கள் வேண்டாமென்று யோசித்தவருக்கு நல்ல திரைக்கதை ஞானம் உள்ளது. அதை படத்திலும் காட்டியிருக்கலாம்.

யுவன் ஷங்கர ராஜா இசை, அவருக்கு வேலை கொடுக்க படத்தில் காட்சிகள் இல்லை. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு என டைட்டிலில் வருகிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே கொள்ளை காட்சிகளை அவ்வளவு நேரம் காட்டி படத்தின் விறுவிறுப்பைக் குறைத்துவிட்டார் இயக்குனர். அங்கு தள்ளாடும் திரைக்கதை கடைசி வரை தள்ளாடிக் கொண்டேதான் இருக்கிறது. பல காட்சிகளில் நாடகத்தனமாக வந்து பேசிவிட்டுச் செல்கிறார்கள். 80களுக்கு பயணித்தது போல இருக்கிறது. அதிலும் கிளைமாக்சில் டாக்டரிடம் ரெஜினா ஒரு வசனம் பேசிவிட்டுச் செல்கிறார் பாருங்கள், அடேங்கப்பா... மற்ற தென்னிந்திய மொழிகளில் சமீப காலத்தில் இப்படியான த்ரில்லர் படங்கள் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டுள்ள என்பதை இயக்குனர் பார்த்திருக்க மாட்டாரோ?.

டிஜிட்டல் இந்தியாவில் நம் தனிப்பட்ட தகவல்களை பலருக்கும் தெரிவித்தால் நாம் எப்படியெல்லாம் சிக்குவோம் என்பதைச் சொல்ல முயற்சித்ததற்காக மட்டும் இயக்குனரைப் பாராட்டலாம்.

சக்ரா - இரும்புத் திரை 1/2

 

சக்ரா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சக்ரா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓