3.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, கவிதா பாரதி
இயக்கம் - தனா
இசை - கார்த்திக்ராஜா
தயாரிப்பு - எவோக்

ஒரே நாளில் வீரன் என்ற வார்த்தையுடன் இரண்டு படங்கள் வெளியாகின்றன. ஒன்று மதுர வீரன், மற்றொன்று படை வீரன். இரண்டு படங்களின் அடித்தளமான கதை ஒன்றுதான் என்பது ஆச்சரியமே. இரண்டு படங்களுமே சாதி வெறியை மையப்படுத்திய படங்கள். ஆனால், இரண்டு படங்களின் முக்கியக் கதாபாத்திரப் படைப்பிலும், சொல்ல வந்ததை சொன்ன விதத்திலும் மிகப் பெரும் வித்தியாசம்.

ரவுடித்தனமாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற கிராமத்து இளைஞன், போலீஸ் வேலையில் சேர்ந்தால் ஓசியில் சரக்கு மற்ற விஷயங்கள் கிடைக்கும் என்பதற்காக லஞ்சம் கொடுத்து போலீஸ் பயிற்சிக்குச் செல்கிறார். பயிற்சி முடிந்து பணியில் அமர வேண்டிய சமயத்தில் அவனது சொந்த கிராமத்தில் சாதிக் கலவரம் ஏற்படுகிறது. அதற்காக அனுப்பபடும் காவல் படையில் அவரும் இருக்கிறார். தன் சாதி மக்களைக் காப்பாற்ற முதலில் களத்தில் இறங்குகிறார். பின்னர் உண்மை புரிந்து அவர் என்ன செய்து படை வீரன் ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை.

அறிமுக இயக்குனர் தனா முதல் படத்திலேயே அழுத்தமான கதை, தொய்வில்லாத திரைக்கதை, யதார்த்தமான பாத்திரப் படைப்புகள், அதற்குப் பொருத்தமான நடிகர்கள் என இந்த படை வீரன்ஐ சரியாகவே படைத்திருக்கிறார்.

கதாநாயகன் முனீஸ்வரன் ஆக பின்னணி பாடகரும், மாரி படத்தில் வில்லனாக அறிமுகமானவருமான விஜய் யேசுதாஸ். படம் வெளிவருவதற்கு முன்பு கிராமத்து நாயகனாக எல்லாம் விஜய் யேசுதாஸ் எப்படிப் பொருத்தமாக நடிப்பார் என்று யோசித்த பலருக்கு தன் யதார்த்த நடிப்பால் பதிலடி கொடுத்திருக்கிறார் விஜய். வசன உச்சரிப்பில் எங்குமே மலையாள வாடை வரவில்லை என்பது முக்கியமானது. அப்பா, அக்கா, முறைப் பெண், மேலதிகாரி என அனைவரிடமும் அவர் சலம்பல் செய்வது அருமை. நாயகி அம்ரிதா காதல் பார்வை பார்த்ததும் அதனால் விஜய் தடுமாறும் அந்த ஒரு காட்சி போதும் அவரது நடிப்பைப் பாராட்ட. யதார்த்தமாக நடிக்கத் தெரிந்த நடிகர் வேண்டும் என நினைக்கும் இயக்குனர்கள் இனி விஜய் யேசுதாஸைத் தேடி நிச்சயம் போவார்கள்.

நாயகியாக அம்ரிதா. கிராமத்துப் பெண்களுக்கே உரியே துடுக்குத் தனம், வாயாடித் தனம் என அசத்துகிறார். விஜய்யை உசுப்பேற்றி காதலிக்க வைத்து விட்டு, பின் அவனை எல்லாம் காதலிப்பதா என கடுப்பேற்றுகிறார். நடிக்கத் தெரிந்த மற்றொரு கதாநாயகி தயார்.

ஆதிக்க சாதி வெறி பிடித்தவராக கவிதாபாரதி. பார்வையிலேயே அந்த திமிரைக் காட்டிவிடுகிறார். சாதி வெறிக்காக உறவுக்காரப் பெண்ணையே ஊர்மக்களுடன் சேர்த்துக் கொலை செய்யும் போது பதற வைக்கிறார்.

முன்னாள் ராணுவ வீரர் ஆக பாரதிராஜா. இந்த நடிப்பு வேலையை பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்திருக்கலாம். யதார்த்த நடிகர், மற்ற விஷயங்களுக்கெல்லாம் நியாயம் பேசும் இந்த கதாபாத்திரம், நாயகன் விஜய் யேசுதாஸ் போலீஸ் வேலையில் சேர லஞ்சம் கொடுத்து சேர்த்துவிடுவது பெரிய முரண்.

பாரதிராஜாவின் தம்பி மகளாக சிந்து, விஜய் யேசுதாஸ் அக்காவாக நிஷா, இருவரும் கிராமத்துப் பாசத்தால் உருக வைக்கிறார்கள். விஜய் யேசுதாஸ் நண்பர்களாக நிதிஷ் வீரா, சதீஷ், கலையரசன் நட்புக்கு சிறப்பு செய்து, கடைசியில் சாதி வெறியில் வில்லன்களாகிறார்கள். காவல் துறை அதிகாரியாக அகில், கடமைக்காகப் போராடும் கண்ணியமான அதிகாரி.

கார்த்திக்ராஜாவின் இசையில், பாடல்களை விட பின்னணி இசை பாராட்ட வைக்கிறது. ராஜவேல் மோகன் கதைக்குள் இறங்கி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தில் தேவையற்ற காட்சிகள், படம் நீளம், நடிப்பு சரியில்லை என இந்தப் படத்தில் அப்படி எந்தக் குறையையும் சொல்ல முடியவில்லை. அழுத்தமான கதை, போரடிக்காத திரைக்கதை, வசனத்திலும் பல அர்த்தங்கள், அனைவரும் படிக்க வேண்டும், சாதி மோதல் இல்லாமல் ஒற்றுமையாக இருப்போம் என பல விஷயங்களால் பாராட்ட மட்டுமே வைக்கிறது படை வீரன்.

கிளைமாக்சில் நாயகன் செய்யும் துணிச்சலான முடிவு இந்தப் படத்திற்குப் படை வீரன் எனப் பெயர் வைத்தது பொருத்தம்தான் எனச் சொல்ல வைக்கிறது.

படை வீரன் - உண்மையான வீரன்!

 

பட குழுவினர்

படைவீரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓