வெப்,Web

வெப் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வேலன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஹரூன்
இசை - கார்த்திக் ராஜா
நடிப்பு - நட்டி, ஷில்பா மஞ்சுநாத்
வெளியான தேதி - 4 ஆகஸ்ட் 2023
நேரம் - 1 மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் - 2/5

சினிமாவுக்கான கதையை உருவாக்கினால் மட்டும் போதாது, அதை ரசிக்கும் விதத்தில் திரைக்கதை அமைத்து சொல்வதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. அது என்ன என்பது தெரியாமல்தான் பலரும் தவித்து வருகிறார்கள். ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் கூட தப்பித்து விடுகிறார்கள், தெரியாதவர்கள் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்த 'வெப்' படமும் வலையில் சிக்கிக் கொண்ட நான்கு இளம் பெண்களைப் பற்றிய ஒரு கதை. போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் ஒரு படத்தை சொல்ல நினைத்து கதை எழுதியுள்ள இயக்குனர் 'அட்வைஸ்' என்பதை கிளைமாக்சில் மட்டும் சொல்லிவிட்டு அதற்கு முன்பு வரை என்னென்னவோ சொல்லி இழுத்துவிட்டார்.

ஐ.டி.கம்பெனி ஒன்றில் பணிபுரியும் ஷில்பா மஞ்சுநாத் மற்றும் இரண்டு தோழிகள் மிகவும் திறமைசாலிகள், ஆனால் 'வீக் எண்ட்' பார்ட்டி, போதைப் பொருள் பயன்படுத்துவது என கெட்ட பழக்கங்களையும் உடையவர்கள். ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு இரவு நேரத்தில் செல்லும் போது ஷில்பாவும் அவருடன் இருக்கும் மூன்று தோழிகளும் கடத்தப்படுகிறார்கள். ஒரு பாழடைந்த வீட்டில் அவர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள். அவர்களைக் கடத்தி வந்தது சிறை வைத்தது நட்டி. ஏன் அவர்களை சிறைபிடித்தார், மாட்டிக் கொண்ட பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'ஓல்டு ஸ்கூல் ஆப் ஆக்டிங்' என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் நட்டி. கடத்தி வந்த பெண்களிடம் அவர் காட்டும் கோபம், வெறுப்பு, கிண்டல் ஆகியவை எல்லாமே 80களின் தமிழ் சினிமா வில்லன்களைப் போல உள்ளது. விசிலடிப்பது, குளோசப்பில் வந்து பயமுறுத்துவது என நடித்துத் தள்ளியிருக்கிறார். தான் நடித்த 'சதுரங்க வேட்டை' படத்தை அடிக்கடி பார்த்து தனது நடிப்பு என்பது எது என்பதை அவர் தெரிந்து, புரிந்து கொள்ளலாம்.

ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் இப்படி போதை, பார்ட்டி என இருப்பார்கள் என்பதை தமிழ் சினிமாவில் அடிக்கடி காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால், அந்த வேலைகளுக்கு தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பக் கூடப் பலர் தயங்குவார்கள். ஷில்பா மஞ்சுநாத், ஷாஸ்வி பாலா, சுபப்ரியா மலர் ஆகியோரது மூவர் கூட்டணி 'உல்வ் கேங்' என தங்கள் கூட்டணிக்கு பெயர் வைத்துக் கொண்டு அடிக்கடி பார்ட்டி பண்ணுகிறார்கள். தங்கள் குடும்பத்தினர் சொல்வதைக் கூட கேட்காதவர்கள். ஐ.டி.கம்பெனிக்கு தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்ப வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் அதை மறுபரிசீலனை செய்வார்கள். அந்த அளவிற்கு 'உல்வ் கேங்' அல்ட்ரா மாடர்ன் மங்கைகளாக வலம் வந்து அதிர்ச்சியடைய வைக்கிறார்கள்.

நட்டி எதற்காக அவர்களைக் கடத்திக் கொண்டு வந்து பாழடைந்த வீட்டில் தங்க வைத்து பயமுறுத்துகிறார் என்ற காரணத்தை கிளைமாக்ஸ் வரை சொல்லாமலேயே இழுக்கிறார் இயக்குனர். அதற்கான காரணம் தெரிய வரும் போது அது சரியான ஒன்றுதான் என சொல்ல வைத்தாலும் அதற்கு முன்பு ஒன்றரை மணி நேரமாக பயமுறுத்துவதில் மட்டுமே காட்சிகள் நகர்கிறது. திரும்பத் திரும்ப அதுவே ரிபீட் ஆவது பொறுமையை சோதிக்கிறது.

ஒரே ஒரு பாழடைந்த வீட்டிற்குள் படத்தின் அதிகமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கிறிஸ்டோபர் ஜோசப் அந்த வீட்டை முடிந்த அளவிற்கு பயமுறுத்தக் கூடிய விதத்தில் காட்டியிருக்கிறார். கார்த்திக்ராஜாவின் பின்னணி இசை சுமார் ரகம், பாடல்கள் கவரவில்லை.

குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்துபவர்கள் மீதும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மீதும் இயக்குனருக்கு உள்ள கோபமும், அவர்களை மாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் பாராட்டுக்குரியது. அதைத் திரைப்படமாக உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயன்றிருக்கிறார். எண்ணம் சிறந்தது, அதை வெளிப்படுத்திய விதம்தான் சறுக்கிவிட்டது.

வெப் - நெய்யப்படாத வலை

 

வெப் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வெப்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓