இன்பினிட்டி
விமர்சனம்
தயாரிப்பு - மென்பனி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சாய் கார்த்திக்
இசை - பாலசுப்ரமணியன் ஜி
நடிப்பு - நட்ராஜ், வித்யா பிரதீப்
வெளியான தேதி - 7 ஜுலை 2023
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
திரில்லர் கதைகள் ரசிகர்களை அதிகமாகக் கவர்கிறது என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால், திரில்லர் கதைக்குரிய திரைக்கதை படத்தில் எந்த இடத்திலும் இல்லாததால் இந்த 'இன்பினிட்டி' ஆரம்பம் முதலே நம்மை ஈர்க்கத் தவறுகிறது.
சென்னையில் ஒரு இளம் பெண், ஒரு எழுத்தாளர், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு குடிகாரர் என அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அந்த வழக்குகள் பற்றிய விசாரணையை சிபிஐ அதிகாரியான நட்ராஜ் மேற்கொள்கிறார். கொலைகளுக்கான காரணம் என்ன, அவற்றை யார் செய்தது என அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சாய் கார்த்திக் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'சதுரங்க வேட்டை' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நட்ராஜை இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்க வைத்து அவருடைய நடிப்பார்வத்தையும் கெடுத்திருக்க வேண்டாம். கதையாக ஓரளவிற்கு யோசித்துவிட்டு அதைத் திரைக்கதை அமைத்து படமாக்கியதில் படம் முழுவதுமே 'அமெச்சூர்த்தனம்' அதிகமாக உள்ளது. படத்தில் சில நாட்கள் நடித்த பிறகே படம் எப்படி வரும் என அனுபவசாலியான ஒளிப்பதிவாளராகவும் இருக்கும் நட்ராஜுக்குத் தெரிய வந்திருக்கும். அதன் பிறகும் இந்தப் படத்தில் தொடர்ந்து நடித்திருக்கிறார் என்றால் அவருடைய நம்பிக்கையைப் பாராட்ட வேண்டும்.
நடிக்க சம்மதித்துவிட்டோம், ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தில் முடிந்த வரையில் நடித்துக் கொடுப்போம் என காட்சிக்குக் காட்சி தன்னுடைய ஈடுபாட்டைக் காட்டுகிறார் நட்ராஜ். படத்தில் யார் கொலையாளியாக இருப்பார்கள் என்ற சஸ்பென்சை மட்டும் இயக்குனர் ஓரளவிற்கு காப்பாற்றியிருக்கிறார். ஆனால், கொலையாளி யார் என ரசிகர்களுக்குக் காட்டிய பின் திருப்பம் மேல் திருப்பங்களைத் தந்து பில்டப் கொடுத்து குழப்புகிறார். சிபிஐ அதிகாரி நட்ராஜுக்கு உதவிம் அரசு மருத்துவமனை டாக்டராக வித்யா பிரதீப். இவரது கதாபாத்திரத்திலும் ஒரு சஸ்பென்சை வைத்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் போலீஸ்காரராக வரும் முனிஷ்காந்த் நகைச்சுவை என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார்.
படத்தின் உருவாக்கமே டிவி சீரியலை விடவும் தரம் குறைவாக உள்ளது. இந்த டிஜிட்டல் யுகத்தில் பல புதியவர்கள் பல மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் என்னென்னவோ செய்து கொண்டிருக்க, ஒரு முக்கியமான நடிகரை வைத்து இப்படி ஒரு படத்தை எதற்கு எடுத்தார்கள் என்பதுதான் புரியவில்லை. நிறைய படங்களைப் பார்த்து கற்றுக் கொண்டாவது படமெடுக்க வாருங்கள் புதியவர்களே…
இன்பினிட்டி - பிட்டி