2.25

விமர்சனம்

Advertisement

இயக்கம் - கே.பி.தனசேகர்
இசை - சத்ய தேவ் உதயசங்கர்
நடிப்பு - நட்ராஜ், ராம்கி, பூனம் பஜ்வா
வெளியான தேதி - 9 டிசம்பர் 2022
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

எத்தனையோ போலீஸ் கதைகளை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இன்னமும் சொல்லப்படாத கதைகள் பல இருக்கின்றன. இந்தப் படத்தில் ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதைக் கொஞ்சம் பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்.

ஊட்டியில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் நட்ராஜ். அதிரடியான நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். கோடீஸ்வரரான ராம்கி, அவருடைய ஆசை நாயகிக்கு ஒரு பங்களா வாங்கிக் கொடுப்பதற்காக 5 கோடி ரூபாயை காரில் எடுத்துக் கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ காரில் இருந்து திருடி விடுகிறார்கள். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நட்ராஜ். பணம் கிடைத்ததா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

5 கோடி ரூபாய் உள்ள அந்த சூட்கேஸை ஒருவர் திருட, அவரிடமிருந்து அந்த சூட்கேஸ் எத்தனை பேரால் திருடப்பட்டு, எப்படியெல்லாம் கை மாறுகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை. இதை 'பி அண்ட் சி' சென்டர் ரசிகர்களுக்காக 'லோக்கல்' ஆகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் 80களில் வந்ததைப் போல இரண்டு, மூன்று கவர்ச்சி நடனங்கள் வேறு இருக்கிறது.

இன்ஸ்பெக்டராக 'பிட்' ஆகவே இருக்கிறார் நட்ராஜ். ஆனால், நடிப்பில் ஸ்கோர் செய்யும்படியான காட்சிகள் அவருக்கு இல்லை. வழியில் சந்தேகப்படும்படி செல்பவர்களை மிரட்டுவதும், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை அதட்டுவதும் ஆக மட்டுமே அவருக்கான காட்சிகள் உள்ளன. படத்தின் ஆரம்பத்தில் ஒரு ரவுடியை போட்டுத் தள்ளும் ஹீரோயிசக் காட்சியை மட்டும் பேருக்கு வைத்திருக்கிறார்கள்.

நட்ராஜுடன் ஜீப்பில் கூடவே இருக்கும் சக காவலர்களான ரவி மரியா, மனோபாலா காமெடி என்ற பெயரில் நம் பொறுமையை சோதிக்கிறார்கள். சூட்கேஸை தங்கள் கண்ணால் பார்த்ததும் திருடிச் செல்பவர்களாக சில கதாபாத்திரங்கள். அவர்களில் ஒருவராக செக்யூரிட்டி வேலை பார்க்கும் ராஜேந்திரன், விலைமாதர்களாக நடிக்கும் சஞ்சனா, அஸ்மிதா கவர்ச்சிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஐந்து கோடியைப் பறி கொடுத்து ஆன்மாவாக அலைந்து பின் உயிருடன் திரும்பி, திருந்தி வாழ்பவராக ராம்கி. படத்தில் அவருக்கு பெரிதாக வேலையில்லை.

நட்ராஜின் கர்ப்பிணி மனைவியாக சில காட்சிகளில் வந்து போகிறார் பூனம் பஜ்வா. கதாநாயகி என்பதற்காக டூயட் பாடலை திணித்திருக்கிறார்கள்.

நட்ராஜ் ஜீப்பில் செல்லும் காட்சிகள், ராம்கி காரில் செல்லும் காட்சிகள் ஆகியவற்றை 'க்ரீன்மேட்'டில் எடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஊட்டியைச் சுற்றிச் சுற்றி வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவராஜ். அவர் ஒருவருவருக்குத்தான் படத்தில் கொஞ்சம் வேலை அதிகம்.

சரியாக மாட்டிய கதையை, விறுவிறுப்பாக, சுவாரசியமாகத் திரைக்கதை அமைத்து தரமாகக் கொடுக்க வேண்டிய படத்தை, எப்படியோ கொடுத்து கோட்டை விட்டிருக்கிறார்கள்.

ஆனால், அனைவரும் வருமான வரி முதல் அனைத்து வரிகளையும் ஒழுங்காகச் செலுத்தி இந்த நாடு உயரக் காரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ததற்குப் பாராட்ட வேண்டும்.

குருமூர்த்தி - கிளைமாக்சில் மட்டும்…'குரு'

 

குருமூர்த்தி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குருமூர்த்தி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓